Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்தவாரம் புதுடில்லிக்குச் சென்றிருந்தார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அழைப்பின் பேரில் தான் அவரது புதுடில்லிப் பயணம் அமைந்திருந்தது.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் இந்தியா சென்றிருந்தார்.

முன்னரெல்லாம் அவர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி கிரமமான பயணங்களை மேற்கொண்டு வந்தவர்.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய போது இந்தியா அதனை ஆதரித்திருந்தது.
அதற்குப் பின்னர் இலங்கை அரசின் அமைச்சர்களோ முக்கிய அதிகாரிகளோ புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.
மத்தியப்பிரதேச அழைப்பின் பேரில் கடந்த மாதம் 20ம் திகதி புதுடில்லிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருதரப்பு பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதையடுத்தே கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த புதுடில்லிக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது.
அதன் வழியாகவே பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

புதுடில்லியில் அவர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியையும் இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மாவையும் சந்தித்துப் |||பசியதாகத் தெரிகிறது.

இந்தப் பயணத்தில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியிருப்பது புதுடில்லி அதிகாரிகள் மட்டமே தவிர அரசியல் மட்டமல்ல.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இந்தியா விடுத்த அழைப்பின் பின்னணியில் இரண்டு முக்கிய காரணங்கள் இருந்ததாக அறியப்படுகின்றது.

முதலாவது இந்தியாவின் அழைப்பின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லியில் தங்கியிருந்த போது 13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஒழிக்கவேண்டும் என்று இவர் வெளியிட்ட கருத்து .

இரண்டாவது காரணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்வது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தியாவின் தலையீட்டின் மூலம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கூறியுள்ள கருத்து கடும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
அவரது இந்தக் கருத்து அரசாங்கத்திடம் ஒரு யோசனையாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.

பணிகளை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ள அம்சங்கள் குறித்து தெரியப்படுத்துமாறு அதிகாரிகளிடம் அரசாங்கம் கேட்டிருந்ததாகவும் அதன்படி 13வது திருத்தத்தினால் தமது பணிகளை நிறைவேற்ற முடியாதுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலரான கோத்பாய ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளதாகவும் கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல.
பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட இந்தக் கருத்தின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்குள் 13வது திருத்தத்திற்கு எதிரான கருத்துக்கள் தீவிரமடைந்துள்ளன.

இது இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட - இனப்பிரச்சினைக்கு இதுவே அடிப்படைத் தீர்வாக அமையும் என்று இந்தியா இன்னமும் நம்புகின்ற 13வது திருத்தத்தை நீக்குவது குறித்து பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள கருத்தை புதுடில்லி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.
13வது திருத்தத்தை ஒழிப்பது பற்றிய கருத்துக்கள் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பொருத்தமான தருணத்தில் இது குறித்துப் பதிலளிக்கப்படும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அதைவிட புதுடில்லி வரும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடனும் இதுபற்றிக் கலந்துரையாடப்படும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

எனினும் கடந்த வியாழக்கிழமை கோத்தபாய ராஜப்சவின் புதுடில்லி சந்திப்புக்களின் போது 13வது திருத்தமட் குறித்த பேச்சுக்கள் நடத்தப்பட்டதா என்பது பற்றிய தகவல் எதுவும் இந்தப் பத்தி எழுதப்படும் வரை வெளியாகவில்லை.

இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ள முக்கியமான விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்திக்கொளவது  பற்றியதாகும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் எப்போதுமே உயர்ந்த நிலையில் தான் இருந்து வருகின்றன.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்க்காலத்திலும் சரி போர் முடிவுக்கு வந்த பின்னரும் சரி இந்திய - இலங்கை பாதுகாப்பு உறவுகளில் தொய்வு எதுவும் ஏற்படவில்லை.

எனினும் ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர் ஏற்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலாள இடைவெளி மற்றும் அந்த இடைவெளிக்குள் தமிழ்நாட்டில் தீவிரம் பெற்ற இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு எதிரான போராட்டங்கள் என்பன ஒருவித கேள்வியை ஏற்படுத்தியிருந்தது.

தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற இலங்கை விமானப்படையினர் தமிழக முதல்வர் மற்றும் கட்சிகளின் எதிர்ப்பினால் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. உள்ளிட்ட சில சம்பவங்கள் இந்தியாவின் பயிற்சி வாய்ப்புகள் நிலைக்குமா? என்ற கேள்வியை இலங்கைக்கு ஏற்படுத்தியிருந்தது.

எனினும் தொடர்ந்து இந்தியாவுக்கு படையினரை பயிற்சிக்காக அனுப்புவோம் அங்கே எமக்கு மிகச்சிறந்த பயிற்சிகளை இந்தியா வழங்குகின்றது என்று இலங்கை இராணுவம் கூறி வந்தது. ஆனாலும் இந்தியாவின் நிலை குறித்து கேள்விகள் இருக்கவே செய்தன.

தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து பயிற்சிகளை இந்தியா நிறுத்துமா? என்ற சந்தேகம் இலங்கைக்கு இருந்தது.
இப்போது இலங்கை பிரதானமாக உயர் பயிற்சிக்காக நம்பியிருக்கும் வெளிநாடு என்றால் அது இந்தியா தான்.
ஆண்டுக்கு 800 படையினர் வரை அங்கு பயிறிசி பெறுகின்றனர்.
இந்தியாவில் பயிற்சிக்கான வாய்ப்பு மறுக்கப்படுமானால் இலங்கைப் படையினருக்கான பயிற்சித் திட்டங்கள் குழப்பமடையும்.
 
தமிழ்நாட்டின் எதிர்ப்பையடுத்து மத்திய அரசு சில நெகிழ்வுப்போக்கை கடைப்பிடித்தது உண்மை. ஆனால் பயிற்சிகளை அடியோடு நிறுத்த அது இணங்கவுமில்லை. தயாராகவுமில்லை.

இலங்கைப்படையினருடனான கூட்டுப்பயிற்சிகளில் பங்கேற்பது குறித்து சூழலுக்கேற்ப முடிவெடுப்பது என்ற நிலைப்பாட்டை இந்திய பாதுகாப்பு அமைச்சு எடுத்தது. இதன் காரணமாக கடந்த மாதம் வாகரையில் இலங்கை இராணுவம் இரு வாரங்களாக நடத்திய ஒப்பரேசன் நீர்க்காகம் என்ற போர்ப்பயிற்சிக்க இந்தியா தனது படையினரை அனுப்பி வைக்கவில்லை.

முன்னதாக இந்தப் போர்ப்பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் தனது 8 பேர் கொண்ட இராணுவ அணியை பங்கேற்க உறுதியளித்திருந்தன. எனினும் இந்தியத மட்டம் அதில் பங்கேற்கவில்லை.

அதேவேளை இந்திய - இலங்கைக் கடற்படைகள் நடத்தும் SLINEX  கூட்டுப்பயிற்சிக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

2005ல் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டுப்பயிற்சி கடந்த ஆண்டு திருகோணமலைக் கடலில் நடந்தது. இந்த ஆண்டு அது இந்தியக்கடலில் நடத்தப்பட வேண்டிய முறை.

ஆனால் இந்தப் பயிற்சிக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஒரு நிபந்தனையை விதித்துள்ளது.
தென்மாநிலங்களான தமிழநாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக கடல் எல்லைக்கு அப்பாலேயே போர்ப்பயிற்சி நடத்தப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இதன் காரணமாக இந்தப் போர்ப்பயிற்சியை இந்தியக் கடற்படை ஒடிசா அல்லது மேற்கு வங்காளக் கடலிலோ மகராஷ்டிரா அல்லது குஜராத் கடற்பரப்பிலோ தான் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பதற்கு இலங்கைக் கடற்படை அதிகளவு தொலைவுக்குப் பயணிக்க வேண்டும்.

கூடுதல் போர்க்கப்பல்களை இதில் ஈடுபடுத்துவது இலங்கைக் கடற்படைக்கு பொருளாதார ரீதியாக சிக்கலானது.

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இந்த முடிவு தமிழ்நாட்டின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் இந்த முடிவு இலங்கைக் கடற்படைக்கு ஒரு வகையில் அதிர்ச்சியானதுதான்.
ஏற்கனவே சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கம் இந்தியாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குள் பாகிஸ்தான் வேறு இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் இலங்கையை கையாளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மொத்தத்தில் இந்தியாவுக்கு மிக நெருக்கமான இலங்கை - பாகிஸ்தான் சீனாவுடன் நெருங்கிப் போவதும் தன்னிடம் இருந்து விலகிக் கொள்வதும் புதுடெல்லிக்குப் பிடிக்கவில்லை.
இலங்கைப் படை அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிப்பதையும், அந்தநாடு இலங்கையை தன் பாதுகாப்பு நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதை தடுப்பதையும் உறுதிசெய்யவேண்டிய தேவை புதுடெல்லிக்கு எழுந்தது.
இதன் அடிப்படையில் தான் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் இருந்தாலும் எத்தகைய சூழலிலும் இருநாட்டுப் பாதுகாப்பு உறவுகள் விடயத்தில் பாதிப்பு ஏற்படாது என்பதை அவரிடம் இந்தியா உறுதியளிக்கப் போவதாக மீளப் பெறுவதற்கே இந்த வாக்குறுதி.

ஒருவகையில் சொல்லப்போனால் இலங்கையுடன் இந்தியா இருவகை அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்று தெரிகிறது.

பாதுகாப்பு உறவுகளை நிரந்தரமாகப் பேணிக்கொள்வதும் அரசியல் உறவுகளை தருணத்துக்கேற்ப முடிவு செய்வதுமே அது.

இதன்படி பார்க்கப் போனால் ஜெனிவா தீர்மானங்கள் போன்ற தருணங்களில் இந்தியா கண்ணை மூடிக்கொண்டு இலங்கையை ஆதரிக்காது.

அதேவேளை பாதுகாப்பு உறவுகளையும் விட்டுக்கொடுக்காது.
கிட்டத்தட்ட் அமெரிக்காவும் இதே அணுகுமுறையைத் தான் இலங்கையுடன் கடைப்பிடிக்கிறது.

அரசியல் ரீதியாக வாசிங்டனில் இருந்து என்னதான் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் அதுபற்றிக் கவலைப்படாமல் இலங்கைப் படையினருடனான உறவுகள் ஒத்துழைப்புகளைத் தொடர்கிறது.
அதுபொலத்தான் இந்தியாவும் நடந்துகொள்ள முனைகிறது போலுள்ளது.

இந்தநிலையில் ஜெனிவாவில் இலங்கை நிலை குறித்து ஆராயும் பூகோள கால மீளாய்வுக் கூட்டம் ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில் இந்தியா எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறது என்பதை வைத்து இலங்கை தொடர்பான இருமுனை அணுகுமுறைக் கணிப்ப சரியானதா என்பதை ஓரளவுக்கு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

சுபத்ரா

0 Responses to கோத்தபாயவுக்கு புதுடில்லி அழைப்பு விடுத்த மர்மம் என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com