Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தத்தை வெல்வதற்காக எதிர்கொண்ட சவால்களைவிட சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தளவில் நாட்டில் சமாதானத்தை வெல்வதென்பது மிக முக்கியமானதாகும். முதலாவதாக, முன்னைய யுத்த வலயங்களில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் வெளியேற்றப்பட்டு, மக்களாட்சி மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட On Line Opinion இணையத்தளத்தில் எதிர்க்கட்சியின் துணைத்தலைவியான Julie Bishop எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

கட்டுரையின் முழுவிபரமாவது:

"பொருளாதாரப் போட்டி, சமூக அநீதி போன்றவற்றால் யுத்தத்திற்கான வித்துக்கள் மிக ஆழமாக விதைக்கப்பட்டுள்ளன என்பதை அனுபவங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன" என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஹரி எஸ். றூமன் Harry S. Truman ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். வாழ்க்கையில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என நம்பும்போது அங்கே கோபம் அதிக உணர்வுகளை ஏற்படுத்துகின்றது. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல்வேறு அநீதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவற்றை சமன் செய்வதற்கான முயற்சிகளையும் அதற்கான தக்க வாய்ப்புக்களையும் நாம் அசட்டை செய்துள்ளோம்.

அவுஸ்திரேலியாவின் நீதி முறைமையில் சில குறைபாடுகள் உள்ள பேதிலும், இது தொடர்பான பொதுவான மதிப்பு ஒன்று காணப்படுகிறது. பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் சட்ட ஒழுங்கு தொடர்பான கருத்துருவாக்கத்தை நன்கு விளங்கிக் கொண்டுள்ளனர். நீதியின் முன் எல்லாம் சமன் என்பதை இந்த மக்கள் அடையாளங் கண்டுள்ளனர். ஆட்சியில் ஊழல் மற்றும் மீறல்கள் இடம்பெறும் பல்வேறு உலக நாடுகளின் நிலை வேறுபட்டது. ஊழல் மற்றும் மீறல்களைப் புரியும் ஆட்சிக்கு எதிராக மக்கள் இன மற்றும் மத அடிப்படையில் குழுக்களாகப் பிரிந்து போராடுகின்றனர்.

முழு சமூகமும் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்டு அல்லது அநீதியின் விளைவுகளை எதிர்கொள்ளும் போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகின்றனர் என்பதை அதிபர் றூமன் நன்கு புரிந்து கொண்டார்.

1945-1953 காலப்பகுதியில் றூமன் அமெரிக்க அதிபராகக் கடமையாற்றினார். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஜேர்மனி உள்ளடங்கலாக ஐரோப்பாவில் ஏற்பட்ட அழிவுகளை சீர்செய்வதில் அதிபர் றூமனின் கருத்துக்கள் மார்சல் திட்டம் உருவாக வழிவகுத்தது. இத்திட்டத்தின் மூலம் முன்னர் எதிரியான ஜேர்மனி பொருளாதார ரீதியில் வலுவாகி, ஐரோப்பிய ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் அதிக பங்களிப்புச் செய்யக் காரணமாக உள்ளது.

சிறிலங்காவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது பிராந்திய சக்தியாக வளர்வதற்கான சந்தர்ப்பத்தை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. சிறிலங்காவின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதமானவை சிங்கள பெரும்பான்மை சமூகத்தவர்களாவர். இதேபோன்று சிறுபான்மை சமூகத்தவர்களான தமிழர்கள் 20 சதவீதமாகும். சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து தமிழ் மக்களின் ஆதரவுடன் கிளர்ச்சி அமைப்பானது 25 ஆண்டுகளாக யுத்தம் புரிந்தது.

இதன் காரணமாக 80,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. சிங்கள பெரும்பான்மை சமூகத்தவர்களால் தாம் ஓரங்கட்டப்படுவதாக 1970 மற்றும் 1980களில் தமிழ் மக்கள் நம்பினர். இந்நிலையில் தமிழ் சமூகமானது சிங்கள ஆட்சியை எதிர்க்க முற்பட்டனர். இவ்வாறு தொடங்கப்பட்ட குருதி தோய்ந்த யுத்தமானது 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதிக் கட்ட யுத்தத்தில் இரு தரப்புக்களாலும் பல்வேறு குற்றங்கள் புரியப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. முகாங்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் உள்ளனரா என்பதை அடையாளங் கண்டுகொள்வதில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதிலிருந்து சிறிலங்காத் தீவானது மீளிணக்கப்பாடு மற்றும் மீள்கட்டுமானம் போன்றவற்றில் ஈடுபடத் தொடங்கியது. முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

யுத்தத்தை வெல்வதற்காக எதிர்கொண்ட சவால்களைவிட சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தளவில் நாட்டில் சமாதானத்தை வெல்வதென்பது மிக முக்கியமானதாகும். முதலாவதாக, முன்னைய யுத்த வலயங்களில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் வெளியேற்றப்பட்டு, மக்களாட்சி மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளை முறியடிப்பதற்கு அங்கே முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கான உந்துதல்களை வழங்க வேண்டும்.

இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து முடிந்த பின்னர், முன்னைய எதிரி நாடுகளுக்கு அமெரிக்காவானது பல பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியது. இதேபோன்று சிறிலங்காவின் எதிர்கால செழுமைக்கும் தமிழ் மக்கள் பொருளாதாரப் பங்காளிகளாக இணைக்கப்படுதல் முக்கியமானதாகும். தமிழ் மக்கள் தாம் நாட்டின் பொருளாதாரத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளாதாக நினைக்கக் கூடாது.

கடந்த காலத்தில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக தமிழ் மக்கள் மீண்டும் நினைக்காதிருப்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். யுத்தக் குற்றங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொண்டு இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது மிக முக்கியமானதாகும்.

விசாரணைகள், தீர்ப்புக்கள் என்பன சவால்களும் வலிகளும் நிறைந்தவை. இன மற்றும் பதவி போன்ற எதுவும் செல்வாக்குச் செலுத்தப்படாது நீதியின் முன் சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற நிலையை இது உருவாக்கும். நாட்டை ஒன்றுபடுத்தும் மீளிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும். அத்துடன் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் தாம் அநீதியாக நடாத்தப்படுகிறோம் என்பதை உணர்வது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். 

0 Responses to சிறிலங்கா: தமிழர்களுடனான மீளிணக்கப்பாட்டிற்கு அரசு செய்யவேண்டியவை அதிகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com