பிரான்சில் மாவீரர் பெற்றோர், உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு 25.11.2012 ஞாயிற்றுக்கிழமை கிளிச்சி பிரதேசத்தில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு சத்தியதாசன் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை மாவீரர் கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றி வைத்தனர். மலர் மாலையை மேஐர். சுதன் வீரவேங்கை சுதனா, நாட்டுப்பற்றாளர் சுதன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயார் அணிவித்திருந்தார்.
மாவீரர் கலைத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய போட்டியாளர்கள் தமது கலைத்திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர். அதனைத்தொடர்ந்து மாவீரர் புகழ்பாடுவோம் பாடலுக்கு செல்வி. சௌவர்ணி அவர்களும், ஆடடி பெண்ணே பாடலுக்கு செல்வி. நிருசா அவர்களும், அழகே அமுதே பாடலுக்கு செல்வி. ஆர்த்திக்கா அவர்களும், விலங்கு உடையும் பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சங்க மாணவியர்களும், மாவீரர் உணர்வோடு பாடலுக்கு நடனம் வழங்கியிருந்தனர்.
அதனை தொடர் மாவீரர் குடும்பத்தினர், உறவுகள் மதிய உணவுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நடைபெற்றன. மதிப்புரையை பரப்புரைப்பொறுப்பாளர் திரு. து. மேத்தா அவர்கள் உரையாற்றியிருந்தார். தனது உரையில் இவ் மதிப்பளிப்பானது பண்டைக்காலம் தொட்டு தமிழர் வரலாற்றில் செய்யப்படும் ஓர் உன்னத செயற்பாடு என்றும் பல நூற்றுக்கணக்கான வருடங்களின் பின்பு தமிழீழத்தில் தான் இது தொடர்கின்றது என்றும். இந்த மாவீரை பெற்றெடுத்தவர்கள் பேறுபெற்றவர்கள் என்றும் ஒவ்வொரு தமிழ்தாயும் கருவிலே இவர்களுக்கு ஊட்டிய விடுதலைப்பற்றும், இன உணர்வும் தான் இன்று ஓர் அற்புதமான வீரபுருசர்களை எமக்கு தந்து எமது ஒரு வழிகாட்டிகளாக, வணங்கும் தெய்வங்களாக வலம் வருகின்றனர். அதேபோலவே எமது கண்முண்ணே வாழ்ந்து, எம்மை வழிநடத்தி இன்று தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதியாக வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் பிரிவு எம்மை ஆறாத்துயரில் உள்ளாக்கிய போதும் கண்ணீருடன் குனிந்த எமது தலைகள் மீண்டும் அவரினதும், ஆயிரமாயிரம் மாவீரர்களின் காலதடம் பற்றி மீண்டும் நிமிர்ந்து செல்கின்றோம் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து கரும்புலி மேஐர் அருளனின் தாயாரை பரப்புரைப்பொறுப்பாளர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் மதிப்பளிக்க அதனைத்தொடர்ந்து மாவீரர் பெற்றோர்கள் உறவுகளை மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.
0 Responses to பிரான்சில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் 26.11.2012 (படங்கள் இணைப்பு)