Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான பிரித்தானிய  அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவும் இணைந்து இம் மாநாட்டினை நவம்பர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடாத்துகின்றன.

ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், சொல்லப்பட்ட பரிந்துரைப்பின் பிரகாரம், இலங்கை அரசு  மேற்கொண்ட யுத்தம் குறித்தான சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இம்மாநாட்டின் தீர்மானமாக அமையவிருக்கிறது. பேரவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

ஆயினும் , விசாரணை எவ்வாறு அமைய வேண்டுமென நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரை , ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதாக அமையவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் .
குறிப்பாக, தமது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து, உடனடியாக நேர்மையான விசாரணை ஒன்றினை இலங்கை அதிகாரவாசிகள் ஆரம்பிக்கவேண்டுமெனவும் , அது சுயாதீனமான சர்வதேசத்தரம் வாய்ந்ததாக இருப்பது அவசியமெனவும் நிபுணர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் இவ்வாறான ஐ.நா.அழுத்தங்கள் போர்க்குற்ற ஆதாரங்களுடன் வருமென்பதைப் புரிந்து கொண்ட சிங்களம் , தனது தலையாட்டிகளை கொண்டதொரு குழுவினை அமைத்து ,அதற்கு 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' [LLRC] என்கிற பெயரையும் வைத்தது.
சர்வதேச வல்லரசாளர்களும் அதனை இன்முகம் கொண்டு வரவேற்றனர். குற்றவாளியை நீதிபதி நாற்காலியில் அமர்த்திய கோமாளித்தனத்திற்கு இந்த உலக சனநாயகச் சட்டம்பிமார் துணை நின்றார்கள். 

இவ்வருடம் மார்ச்சில் நடைபெற்ற ஐ.நா.மனிதஉரிமைப் பேரவைக் கூட்டத்தில், இந்தியா அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறின.
இருப்பினும் நிபுணர் குழுவும், மனிதஉரிமைப் பேரவையும் சுட்டிக்காட்டிய ஐ.நா.வின் புலமைசார் நிபுணத்துவத்தை இணைத்துக்கொள்ள வேண்டுமென்கிற ஆலோசனையை சிங்களம் ஏற்க மறுத்துவிட்டது. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவும் சபையில் தீர்மானம் கொண்டுவந்தவர்களால்  முடியவில்லை.

ஐ.நா.வில் நேற்று நடைபெற்ற அகில காலக்கிரம மீளாய்வு [Universal Periodic Review] கூட்டத்திலும் சர்வதேச விசாரணை குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் பனிப்போர் நிகழ்த்தும் வல்லரசுகளின் நலன்களுக்கு, இவ்வகையான பாரிய அழுத்தங்கள் தற்போதைய சூழலில் தேவையில்லாததொன்றாக இருக்கலாம். ஏனெனில்  மென் அழுத்தங்கள் ஊடாக இலங்கையைக் கையாளும் போக்கினையே இவை கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நிஜம்.

இந்நிலையில், இறுதிப்போரில் 40,000 இற்கு [ தற்போது அந்த எண்ணிக்கை 70,000 ஐ தாண்டும் என்கிறார் யாஸ்மின் சுக்கா ] மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு , ஐ.நா.சபையின் உறுப்புநாடுகள் 'சர்வதேச சுயாதீன விசாரணை' ஒன்றினை உருவாக்க வேண்டுமென விடுக்கப்படும் அழைப்பு ,அந்நாடுகளினால் எவ்வாறு உள்வாங்கப்படும் என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.

அதேவேளை இதில் கலந்து கொள்ளும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமது அரசிடம் இதனை வலியுறுத்துவார்களா என்று திடமாகச் சொல்லமுடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் , திட்டமிட்டவகையில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, கலாச்சாரச் சிதைவு, தேசிய இனத்தின் கட்டுமானத்தை உடைத்தல் போன்றவற்றால் வந்த ஒடுக்குமுறைகளை இன்னமும் அனுபவிக்கின்றாகள்.

'சர்வதேச சுயாதீன விசாரணை' என்பது சுதந்திரம் [?] பெற்ற காலம் முதல் , தமிழ் மக்கள் மீது சிங்களம் மேற்கொள்ளும் இன அழிப்பினை வெளிப்படுத்தும் விரிந்த தளமாக இருக்கவேண்டும்.
 
மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இன அழிப்புக்கொடூரங்களை விசாரிக்கும் வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது பொருத்தமற்றது. ஏனெனில் கிழக்கின் மீது சிங்கள இராணுவம் தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கும் நீதி வேண்டும்.
 
 கல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை பேரினவாத சிங்களத்தின் கோரக்கரங்கள், பூர்வீக தமிழ் குடிகளின் வாழ்வாதரங்களை சிதைத்துவிட்டது. இன்னமும் அதன் மேலாதிக்க வன்மம் குறைந்தபாடில்லை.

வடக்கில், சிங்களக் குடியேற்ற வசந்தங்கள் சீனப் பணத்தில் பலமாக வீசுகின்றன.  

ஆகவே மீண்டெழுந்து, சகல திசைகளிலும் போராட்டங்களை முன்னகர்த்த வேண்டியதே எமக்கு இருக்கும் ஒற்றைத் தெரிவு.

வல்லரசுகளுக்கு ஏற்றவகையில் எமது அடிப்படை உரிமைகளை மாற்ற முடியாது. 'தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள்' என்கிற உளவியல் பரப்புரை ஊடாக ,இறைமையற்ற தீர்வினைத் திணிக்கவே இவர்கள் முயற்சிப்பார்கள்.

சர்வதேச விசாரணை என்பதையும்,  முள்ளிவாய்க்காலுக்குள் முடக்க விரும்புவார்கள்.
அதிலும் போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் என்கிற சொல்லாடல்களுக்குள் ஒரு தேசிய இனத்தின் அழிவை அடக்கி விடுவதே தமது பிராந்திய நலனுக்கு உகந்தது என்று எண்ணுகிறார்கள் போலுள்ளது.

ஆகவே, தாயக, தமிழக , புலம்பெயர் மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடாத்தப்படும் இம்மாநாட்டில், இனஅழிப்பிற்கு எதிரான 'சர்வதேச சுயாதீன விசாரணை' நடாத்தப்படவேண்டும் என்கிற தீர்மானத்தை மேற்கொள்வதே சரியானது.

கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மத்தியில் மாநாட்டின் 'உத்தேச தீர்மானம்' [Draft Resolution]விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் சனநாயக முறைமையும் அதுதான்.

-இதயச்சந்திரன்

0 Responses to லண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன?- இதயச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com