Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்களின் இனவழிப்பை அனைத்துலக ரீதியில் உணர்த்தும் வகையில்"எமது நிலம் எமக்கு வேண்டும்" மாநாடு சென்ற வெள்ளிக்கிழமை இத்தாலியில் மிக சிறப்பாக நடைபெற்றது .

இவ் மாநாட்டில் தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் , செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா , பேராசிரியர்  Jude Lal Fernando, இத்தாலி  பாராளுமன்ற சென்ட் சபை உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய மதிப்பிற்குரியAdriana Poli Bortone , மனிதவுரிமை விவகாரங்களுக்கான சட்டத்தரணி Italo Porcaro,இவ் மாநாட்டுக்கு அனுசரணை வழங்கிய பல்லின சமூக அமைப்பின் (Integra Onlus ) தலைவி Klodiana Cuka , ஏனைய மனிதவுரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் ,அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையை பிரதிநித்துவம் படுத்தும் வகையில் நாடுகள் வாரியாக ஈழத்தமிழர் மக்கள் அவைகள் ,ஊடகவியாளர்கள் கலந்துகொண்டனர் .



 
திரு கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் உரை ஆற்றுகையில் 3 ஆண்டுகள் போர் முடிந்தும் சிறீலங்கா அரசு தமிழர்கள் மீதான இனவழிப்பு அரசியலை தொடர்கின்றது ,அந்தவகையில் தமிழர்களின் மண்ணில் சிங்கள ராணுவமயமாக்கல் , திட்டமிட்ட குடியேற்றம் ,நிலப்பறிப்பின் ஊடாக தமிழர்களின் பாரம்பரிய தேசம் அழிக்கப்படுவதாக குறிப்பிட்டதோடு , அதை தடுத்து நிறுத்த உடனடியாக அனைத்துலக சமூகத்தால் தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் .



 Klodiana Cuka , அவர்கள் தமிழர்கள் முகம் கொடுக்கும் மிக கொடூரமான நிலையில் தனது முழு ஆதரவையும் இங்கு குறிப்பிடுவதாகவும் அத்தோடு தமிழர்கள் ஏனைய ஒடுக்கப்படும் இனங்களுடன் இணைத்து அவர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்பதை குறிப்பிட்டதோடு , எதிர்வரும் தை மாதம் இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக்கான மாநாடு ஒழுங்கு செய்வதாகவும் உறுதியளித்தார் .



திரு கஜேந்திரன் செல்வராஜா கருத்து தெரிவிக்கையில் மீள்குடியேற்றம் எனும் போர்வையில் சிறீலங்கா அரசு போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றம் செய்யாமல் அதற்கு மாறாக வாழ்வதற்கு எவ்வித அடிப்படையும் இல்லாத காடுகளில் அந்த மக்களை நிர்கதியாக விட்டுள்ளார்கள் என்றும் இப்படியே தமிழர்களின் நிலம் அபகரிகப்பட்டால் இலங்கை தீவில் தமிழர்களின் இருப்பு என்னும் ஒரு சில வருடங்களில் கேள்விக்குறியாக மாறும் என்பதை விளக்கினார் .



மதிப்பிற்குரிய Adriana Poli Bortone அவர்கள் தனது உரையில் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கும் வகையில் இத்தாலி பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப போவதாகவும் அத்தோடு இவ் விடையத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் காத்திரமான நடவெடிக்கை எடுப்பதற்கு மிகவிரைவில் தான் சில வேலைத்திட்டங்களை ஏனைய நாடுகளின் உறுப்பினர்களுடன் இணைந்து ஒழுங்கு செய்ய முயற்சி எடுக்க போவதாகவும் தெரிவித்தார் .



மனிதவுரிமை விவகாரங்களுக்கான சட்டத்தரணி Italo Porcaro அவர்கள் பேசுகையில் ஈழத்தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் இருந்து உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக புலம்பெயர்ந்து வரும் நிலையை கவலையுடன் விளக்கியதோடு , அவர்களுக்கான தனது  ஆதரவை இத்தாலி நாட்டில் குறிப்பிட்டதோடு  மதிப்பிற்குரிய Adriana Poli Bortone அவர்களை ஈழத்தமிழர்களின் உரிமைகள்  விடையம் சார்ந்து மிக கரிசணையோடு கவனம் செலுத்த வேண்டும் என்பதனையும் வேண்டி நின்றார் .

 
இத்தாலி உள்துறை அமைச்சின் செயலகத்தில் இருந்தும் நடைபெற்ற மாநாட்டிற்கு தமது வாழத்துக்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது .


பேராசிரியர் Jude Lal Fernando அவர்கள் தனது  உரையில் ஈழத்தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் வகையில் வல்லரசு நாடுகள் தமது பூகோள அரசியல் நலம் சார்ந்து பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்ய உதவியதோடு மௌனம் சாதித்தனர் .
ஆனால் இன்று மூன்று ஆண்டுகள் கடந்தும் அழிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நீதியும் பெற்றுக்கொடுக்காமல் மாறாக  அனைத்துலக    சமூகம் தம்மை காப்பாற்ற  தமிழ் மக்களின் அழிவிற்கு தமிழ் மக்களே பொறுப்புடையவர்கள் எனும்  கருத்தை பல்வேறு வழிகளில் திணிப்பதற்கு கடந்த மாதங்களாக முயற்சிக்கின்றனர் .இறுதிப் போர் முடிந்தவுடன் போரில் ஒரு பொது மக்களும் கொல்லப்படவில்லை என்று அப்பட்டமாக பொய் கூறிய அரசும் அதற்கு மாறாக வெளிவந்த கொல்லப்பட்ட மக்களின் தொகையின் எண்ணிக்கை ஆரம்பத்தில்  8000 (UN ),  20,000 ,தொடர்ந்து 10,000 - 40,000(Gordon Weiss),40,000 (Experts’ Panel  UN Secretary General), 75,000 (Ms. Sooka,Experts’ Panel Member ) இறுதியாக மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசெப் அவர்களின் எண்ணிக்கை 146,679 தமிழ் மக்கள் இறுதிக் கட்டத்தின் போரின் பின்னர் காணவில்லை என்பது உலகத்தையே அதிர வைத்தது .
தமிழர்கள் தம் மீது நடந்துகொண்டிருக்கும் இனவழிப்பை தமது ஆன்மீக பலத்தை மீண்டும் ஒருங்கிணைத்து தமது பலத்தை நம்பி தொடர்ந்தும் போராட வேண்டும் என்று விளக்கினார் .


 
இறுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை  உறுப்பினர்கள், சிறப்பாக இளையோர்கள், சிறீலங்கா அரசு   புனரமைப்பு , மேம்பாடு , மீள்குடியேற்றம் எனும்  போர்வையில் மீண்டும் அனைத்துலகத்தின்  ஆதரவுடன்  ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கும் இனவழிப்பை சுட்டிக்காட்டினார்கள் .

 
மூன்று நாளாக நடைபெற்ற மாநாட்டில் தொடர்ந்து பல்வேறு வேலைத்திட்டங்கள் விடையமாகவும் உரையாடப்பட்டது .நடைபெற்ற மாநாடு Integra Onlus அமைப்பின் மற்றும் இத்தாலி ஈழத்தமிழர் மக்கள் அவை ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது .
 
நன்றி
 
செயலகம் - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

0 Responses to இனவழிப்பை உணர்த்தும் வகையில் இத்தாலியில் நடைபெற்ற "எமது நிலம் எமக்கு வேண்டும்" மாநாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com