Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த ஆண்டில் வேளாண் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய வேளாண் துறை ஆணையிட வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த தேர்வுகளை தமிழகத் தில் நடத்த முடியாத அளவுக்கு மிகக் கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தும் என டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் வேளாண் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய இடங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்தும்போது அதற்கான வினாத்தாள்கள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் வேளாண் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

மருத்துவம் உள்ளிட்ட மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய வல்லுனர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அவ்வாறு இருக்கும்போது வேளாண் படிப்புகளுக்கு மட்டும் மாநில மொழிகளில் நுழைவுத்தேர்வு நடத்த மறுப்பது இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

வேளாண் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பிலுள்ள 5832 இடங்களில் 98 இடங்கள் தமிழகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றன. ஆனால் மாநில மொழிகளில் நுழைவுத் தேர்வு நடத்தப்படாததால் மொத்த இடங்களில் ஒன்றே ஒன்று மட்டும்தான் கடந்த ஆண்டில் தமிழக மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்தி பேசும் மாநில மாணவர்களின் நலனுக்காக தமிழக மாணவர்களின் நலன் பறிகொடுக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

எனவே வரும் ஆண்டில் வேளாண் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய வேளாண் துறை ஆணையிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த தேர்வுகளை தமிழகத் தில் நடத்த முடியாத அளவுக்கு மிகக் கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

0 Responses to வேளாண் நுழைவு தேர்வை தமிழில் நடத்தாவிட்டால் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்: ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com