Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அணு சக்தி பயன்பாட்டிற்காக இந்தியாவிற்கு யுரேனியம் வழங்க கனேடிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின்  பின்னர் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நல்லுறவு தொடர்பில் இரு நாட்டு பிரதமர்களும் பேசினார்கள். யுரேனியம் உற்பத்தியில் கனடா முன்னிலையில் உள்ளதால் இருவருடங்களுக்கு முன்னரே கனடாவிடமிருந்து யுரேனியத்தை கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் பேசியது. எனினும் தற்போது உத்தியோகபூர்வமாக கைச்சாத்தாகியுள்ளது. இந்தியாவின் அணுசக்தி தேவைக்கு கனடாவுடனான தற்போதைய வர்த்தகம் மிகுந்த பயனளிக்க கூடியது என பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவுடனான அணுசக்தி பொருட்களின் வர்த்தக பரிமாற்றத்தை கடந்த 1976ம் ஆண்டு தொடக்கம், கனடா தடை செய்துவந்தது.  எனினும் தற்போது யுரேனியம் வழங்க சம்மதித்தடன் மூலம் இந்தியாவின் எதிர்கால அணுசக்தி நிகழ்ச்சி நிரலில், கனடா மிக முக்கிய வழங்குனராக தன்னை பதிவு செய்து கொள்ள முடியும் என பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோர் தெரிவித்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கும் மற்றுமொரு நாடாக கனடா தனது பெயரை பதிவு செய்துள்ளது.  கடந்த வருடம் இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு தென்கொரியா சம்மதித்தை அடுத்து அந்நாட்டுடனும் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

 இந்தியாவில் மொத்தம் 30க்கு மேற்பட்ட மின் அணு உலைகளை அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டு வருவதுடன், 2050ம் ஆண்டளவில், இந்தியாவின் கால்வாசிக்கு மேற்கட்ட மின் தேவையை அணுசக்தி மூலம் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளது. அதை முன்னிட்டே யுரேனியத்தை பிறநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள இந்தியா அதிக முனைப்பு காட்டி வருகிறது.

0 Responses to கனடாவிடமிருந்து யுரேனியத்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்தது இந்தியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com