Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எகிப்து அதிபர் முகமது முர்சிக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ள எகிப்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 28ம் ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திய முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த முகம்மது முர்ஸி புதிய அதிபரானார். மேலும்,  எகிப்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படுவதற்கான சட்ட நிர்ணய அவையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் அதிபர் என்ற வகையில் தனக்கு முழு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன அறிவிப்பை முர்ஸி நேற்று முன் தினம் அறிவித்தார். இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தையும், தன்னிச்சையாக முடிவை எடுக்கும் அதிகாரத்தையும், இப்புதிய அரசியல் சாசனம் அதிபருக்கு வழங்குகிறது. இதன் மூலம் அதிபர் ஓர் முடிவை அறிவித்துவிட்டால் அதை மாற்றவோ, அல்லது நிராகரிக்கவோ வேறு யாராலும் முடியாது போய்விடும். மேலும் சட்டவரமுறைகளுக்குள் அதிபர் வரையறைக்கப்பட மாட்டார் என்பதால், அவர் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும்.

இதனால் இப்புதிய அரசியல் சாசனத்திற்கு பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன்,  தனிப்பட்ட நபர் ஒருவருக்கு முழு அதிகாரமும் வழங்குவது, மீண்டும்  சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.

அதிபர் பதவியிலிருப்பவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான முகம்மது எல் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். எகிப்தின் நீதித்துறையும், அதிபர் முர்சியின் முடிவுகளை கண்டித்துள்ளது. அவரது தீர்மானங்கள் நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டவை என அவை கூறியிருப்பதுடன், எதிர்க்கட்சி  தொண்டர்கள் அடங்கிய மக்கள் குழுவொன்று கெய்ரோவின் தாஹ்ரீர் சதுக்கத்தில் கூடாரம் அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

 இப்போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. நேற்று, அலெக்ஸ்ண்ட்ரியாவில் அதிபரின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதல்களில் 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

0 Responses to முபாரக்கின் பாதையில் முர்சி? : எகிப்தில் மீண்டும் கிளர்ந்தெழும் மக்கள் போராட்டங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com