Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


30.12.2012.  அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கு வணக்கம்,                  
பிறக்கப்போகும் புதிய ஆண்டு எமது மக்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதோடு எமது தாய் மண்ணிலிருந்து சிங்கள ஆட்சியாளனும், இராணுவமும் முற்றுமுழுதாக வெளியேறும் வரை புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் சர்வதேசத்தின் கதவுகளைத்தட்டிக் கொண்டேயிருக்க வேண்டிய ஆண்டாக 2013ம்  ஆண்டு இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதோடு 2009 ம் ஆண்டின் பின் பிரான்சு தேசத்தில் எமது தேச விடியலுக்கான போராட்டம் சனநாய வழிகளில் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

விடைபெறப்போகும் ஆண்டில் அதனைச் செய்வதற்காக எடுக்கப்பட்ட ஒவ்வொரு முன்னெடுப்புகளுக்கும் பங்குகொண்டவர்களையும், தாய் மண்ணில் துன்பத்தில் வாடும் எமது உறவுகளுக்கு உதவிட கோரிய போது மனிதநேயத்துடன் உடனடியாக உதவிட முன்வந்து தமது நேரடித்தொடர்பு மூலம் இன்றுவரை உதவிடும் நல் இதயங்களையும், அரசியல் போராட்டங்களின் முக்கியத்துவம் கருதி எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்களில் இடைவிடாது தொடர்போராட்டங்களை நடாத்தி வருபவர்களையும், தானுண்டு தன்மனையுண்டு என்று வாழாமல் தன்நாடு பெரிதென்று வாழ்ந்து இன மான உணர்வை சர்வதேசத்திற்கு உணர்த்தும் வகையில் ஓரணியில் நின்று உரக்கக்குரல் எழுப்பி வரும் உணர்வாளர்களினதும், கல்வி ,கலை, கலாச்சாரம், பண்பாடு, விளையாட்டு, அரசியல், பொருளாதாரம், சமூகப்பணியென்கின்ற அனைத்துத் தளத்திலும் பொதுநலத்துடன் பணியாற்று கின்றவர்களையும், ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற பொருளாதாரத்தை வியாபாரஸ்தலங்களினூடாக பெருக்கி எமது முன்னேற்றப் பாதையில் சிறிதேனும் தொய்ந்து போகவிடாது கைகொடுத்து வரும் வர்த்தகப் பெருந்தகைகளினதும், தாய்மண் தன்னினம், தன்மொழி என்பவற்றை அழியவிடாது சங்கம் அமைத்து அல்லும் பகலும் அயராது பாடுபடும் சங்கங்களையும், அமைப்பினரையும் ஒருங்கிணைத்து நன்றியென்கின்ற ஆழமான நேச உணர்வுடன் கரங்களை இறுகப்பற்றிக் கொள்கின்றோம்.

எமது தேச விடுதலையையும், எமது சுதந்திர பூமியை விடுவிப்பதற்காக எமதினம் உயிர் கொடுத்து போராடிய உரிமைப்போராட்டத்தை சிறுமைப்படுத்தி பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து சர்வதேசத்தின் துணையுடன் அடக்கி அழிக்கப்பட்டதாக கொக்கரிக்கும் சிங்கள அரசுக்கும், சர்வதேச அரசியல் தமிழர்களுக்கு செய்யத் தெரியாது என்று சொல்ல முனையும் ராஐதந்திரிகளின் எண்ணத்தைப் பொய்ப்பித்து 2013ம் ஆண்டில் ' எமது நிலம் எமக்கு வேண்டும் ''  என்றும் எங்கள் நிலங்கள்  ஆக்கிரமிக்கப்படுவதற்கும், எங்கள் மக்கள் தொடர்ந்து  சிங்கள அரசால் கைது செய்யப்படுவதும், அடாவடித்தனம் பண்ணுவதும், அகதிகளாக்கப்படுவதற்கும்  உலகில் எந்தவொரு அரசும் துணைபோகக்கூடாது என்று ஒவ்வொரு நாடுகளின் தூதுவராயலத்தினதும், சர்வதேச மனிதவுரிமைகள் மையங்கள் செயலகங்களினதும், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கதவுகளை பலமாக உறுதியோடு தட்டுவோம்.

மலரப்போகும் புத்தாண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கேட்கும் ஆண்டாகவும், தமிழினப் படுகொலையைப் புரிந்தவர்களுக்கும், அதற்கு துணைபோனவர்களையும் சர்வதேச நீதிக்கூண்டில் ஏற்றும் ஒரு காலமாகவும் அமைய வேண்டும் என்றும் எதிர் வரும் 2013 மார்ச் 1ம் 2ம் 3ம் நாட்களில் ஜெனீவாவில் நடைபெறப்போகும் மாநாட்டில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பிற்குக் குரல் கொடுக்கும் முக்கிய பன்னாட்டுப் பிரமுகர்கள் ஒருங்கிணைவதோடு ஐ.நா பொதுச்சபையில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பைக் கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகவும் அமையவுள்ளதும் இது வெற்றியடையவும் 4ம் திகதி ஐனீவா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக முருகதாஸ் திடலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெறவுள்ள மாபெரும் பேரணியிலும், ஒன்றுகூடலிலும் அலையென மக்கள் நாம் திரள்வோம்;.

' உந்தன் மண்ணைத்தொடமாட்டேன் எந்தன் மண்ணை விடமாட்டேன் '' என்கின்ற வரிகளை எங்கள் ஆழ்மனதில் திரும்பத் திரும்பச் சொல்வோம் செயற்படுவோம்.

' தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ''

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

0 Responses to அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தரும் 2013 புத்தாண்டு வாழ்த்தும், செய்தியும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com