Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாளை மறுநாள் மற்றொரு புத்தாண்டு - 2013 பிறக்கப் போகிறது. இது போன்று ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் இந்த ஆண்டிலாவது நிம்மதியும் நியாயமும் தமிழருக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே வந்து விடுவது வழக்கம்.

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தப் புதிய ஆண்டிலாவது சண்டை ஓயாதா என்றிருந்த கவலையும் எதிர்பார்ப்பும், இப்போது சற்று வித்தியாசமாக மாறியுள்ளது.
இப்போது தமிழருக்கு நிரந்தர அமைதியும் அரசியல் தீர்வும் இந்த ஆண்டிலாவது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

ஆனால் நிரந்தர அமைதி அரசியல் தீர்வுக்கான எதிர்பார்ப்பு எல்லாமே இதுவரை வெறும் கனவாகவே கலைந்து போயுள்ளது.
இந்நிலையில் தான் புதிய ஆண்டும் பிறக்கப் போகின்றது.
இன்னமும் இரண்டே நாட்களில் பிறக்கப் போகும் அடுத்த ஆண்டில் மிக முக்கியமானதொரு எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருப்பது ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர்தான்.

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் தமிழர்களின் அவலநிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளால் ஐநா மனித உரிமைகள் பேரவையில் எதையும் சமர்ப்பிக்க முடியாது என்ற போதும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்காகக் கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாதக் கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு அதனை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

காரணம் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக நேரடியாக களமிறங்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தபோது அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தைத் தோலுரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகவே காணப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் ஜெனிவா செல்லும் திட்டத்தை கூட்டமைப்பு கைவிட்டபோது அது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நகர்வாக இருக்குமோ என்று சந்தேகம் கிளப்பியவர்களும் உண்டு.

ஆனால் ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைகளை விடுத்த பின்னர்தான் அந்த முடிவை எடுத்திருந்தது.

அப்போதைய சூழ்நிலையில் ஜெனிவாவுக்குச் செல்லும் அனைவரையும் இலங்கை அரசாங்கம் துரோகிகளாகவே இனம் காட்டியது. அவர்கள் திரும்பவும் இலங்கையில் கால்வைக்க முடியாது என்றும் மிரட்டியது.

அத்தகைய நிலையில் அமைதி வாய்ப்புகளை அது பின்தள்ளி விடும் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சற்று ஒதுங்கி நின்று கொண்டது.
அதற்காக அப்போது அரசாங்கத்தின் பாராட்டைப் பெறவும் அது தவறவில்லை.

ஆனால் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினையை அங்கு முன்னிலைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது புதியதொரு திருப்பம் எனலாம்.

இது இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் கடந்த மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடரை விடவும் அடுத்த மார்ச் மாத கூட்டத்தொடர் மிக முக்கியமானது, ஆபத்தானது.

இதனை எதிர்கொள்வதற்கான வியூகத்தை இலங்கை அரசாங்கம் எப்போதோ வகுக்கத் தொடங்கி விட்டது.
அதன் ஒரு கட்டமாகவே ஆபிரிக்க, இலத்தீன, அமெரிக்க நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது.
அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் என்பது இலங்கைக்கு மிக முக்கியமானதொரு கண்டம் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளதா என்ற ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை இதில் வெளியிடப்பட உள்ளது.
இதன் அடிப்படையில் தான் இலங்கை மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானிக்கும்.

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை.
இதனை ஐநா அதிகாரிகளும் மேற்கு நாடுகளின் அதிகாரிகளும் தெளிவாகவே கூறி வந்துள்ளனர்.

இத்தகைய நிலையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணத்தின போதும் நிலைமைகளை ஆராயப் போகிறார்.
இவையெல்லாம் அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கான அழுத்தங்களை அதிகரிக்கும்.

இத்தகைய பின்னணியில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூட்டத்தில் தமிழர்களின் அவலநிலையை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இது ஜெனிவாக் களத்தை இன்னும் பரபரப்புக்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேவேளை கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்காவின் நிலைப்பாடு இம்முறை மாற்றம் காணுமா? என்று கேள்வியும் உள்ளது.

அதற்குக் காரணம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஏற்படப் போகும் மாற்றங்கள் தான்.

வரும் ஜனவரி 21ம் திகதி தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்க உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.
புதிய இராஜாங்கச் செயலராக அவர் ஜோன் கெரியை பரிந்துரைத்துள்ளார்.

ஜோன் கெரி இலங்கை அரசுடன் நெருக்கம் ஏற்படுவதை விரும்பும் ஒருவராக கணிக்கப்படும் நிலையில், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் அமெரிக்காவின் இலங்கை தொடர்பான இறுக்கமான போக்குத் தொடருமா? என்ற கேள்வி உள்ளது.

அதுமட்டுமன்றி ஐநாவுக்கான தூதுவர் பதவியிலுள்ள சூசன் ரைஸ் அந்தப் பதவியில் தொடர்வாரா என்பதும் முக்கியம்.
அவர்தான் ஜெனிவா தீர்மானத்தைக் கொண்டு வருவதில் முன்னோடியாக இருந்தவர்.

அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்தால் ஜெனிவாக் களம் இலங்கைக்கு சாதகமானதாக அமைய வர்ப்பில்லை.

ஜோன் கெரியின் புதிய நிர்வாகத்தில் அவர் வேறு துறைக்கு மாற்றப்படுவாரேயானால் ஜெனிவாவில் தமிழர் தரப்புக்கு பின்னடைவு ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுத்த நாடு அமெரிக்கா என்பதால் அடுத்த கட்டம் பற்றிய தீர்'மானத்தில் அதன் இறுக்கமான போக்கு அதிகம் செல்வாக்கு செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

எவ்வாறாயினும் அமெரிக்கா கைகொடுத்தாலும் சரி, கை கொடுக்காது போனாலும் சரி தமிழர் தரப்பின் இன்றைய அவலநிலையை வெளிப்படுத்தும் ஒரே களமாக இப்போது ஜெனிவாவே உள்ளது.

அதனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியுள்ளதும் முக்கியமானது.

இந்த முடிவு உறுதியாகப் பின்பற்றப்படுமா? அது புதிய திருப்பங்களுக்கு வழிவிடுமா? என்பதை பிறக்கப் போகும் புதிய ஆண்டுதான் தெளிவுபடுத்தும்.

ஹரிகரன்

0 Responses to ஜெனிவா களத்தில் அமெரிக்கா கை கொடுக்குமா? காலை வாருமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com