Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழ் நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்மாணிப்பை வன்மையாக எதிர்க்கிறோம். ஈழப் போரில் நடந்த இனப்படுகொலைக்கு ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். ஈழப்படுகொலை புரிந்த அனைவரையும் நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் எனும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள உலகத் தமிழர் இரண்டாம் பாதுகாப்பு மாநாட்டில்
கலந்து கொண்ட மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சொந்த நாட்டு மக்களையே அழித்தொழிக்கும் தலைமைத்துவம் எந்த நாட்டிலும் இருக்கக்கூடாது எனக் கடுமையாகச் சாடினார்.

மலேசிய இந்திய சமூகத்திற்கு ஒரு சாதாரண தொண்டனாக இருந்து சேவை புரிய விரும்புகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். எல்லா இன மக்கள் நலனுக்காக பாடுபடுவதே என் நோக்கம் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அனைவருக்கும் சேவையாற்றும் சாதாரண தொண்டன் நான் என்றார் அவர்.

நேற்று பெட்டாலிங்ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்ற உலகத் தமிழர் இரண்டாம் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு வருகையாளராக கலந்துகொண்ட கெ அடிலான் ஆலோசகருமான அவர், மேற்கண்டவாறு பேசினார்.

இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது வன்முறையான ஆட்சியை வெளிப்படுத்துகிறது என குறிப்பிட்ட அவர், போஸ்னியா, பாலஸ்தீன மக்களின் துயரங்களைக் காட்டிலும் இலங்கையின் துயரம் கொடியது என சுட்டிக்காட்டினார்.

சொந்த நாட்டு மக்களையே அழித்தொழிக்கும் தலைமைத்துவம் எந்த நாட்டிலும் இருக்கக்கூடாது என அவர் கடுமையாகச் சாடினார். இனியும் இப்படி ஓர் அவலம் தமிழர்களுக்கு ஏற்படக்கூடாது. எதிர்கால நமது தமிழின சந்ததியினரைப் பாதுகாக்க இன்றே நாம் முழு மூச்சாக களமிறங்க வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

வரும் பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் நீதி, மனித உரிமை, கட்சிக் கொள்கை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்பட்டு காக்கப்படும்.

அதுமட்டுமின்றி மலேசிய நாடு மக்கள் எல்லோருக்கும் உரியது. மாறாக, இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் மீது முழு அக்கறையும் முழு உரிமையும் உண்டு என அவர் தெளிவுபடுத்தினார்.

மக்கள் கூட்டணியின் ஆட்சிக்குப் பிறகு நாட்டில் குறிப்பாக இந்தியர்கள் எதிர்நோக்கும் குடியுரிமை, அரசு வேலை வாய்ப்பு, இலவச உயர் கல்வித் திட்டம் போன்றவற்றை அமலாக்கம் செய்வதில் கொள்கை பிடிப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சொல்லப்போனால், மக்கள் கூட்டணியின் சமநிலை ஆட்சி நாட்டில் நிலவி வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அன்வார் திட்டவட்டமாகக் கூறினார். திரளானோர் கலந்து சிறப்பித்த இம்மாநாட்டில், பலதரப்பட்ட நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி இணை அமைப்பாளராகவும், மாநாட்டின் இயக்குனராக பொண்ணுரங்கனும் செயல்பட்டு மாநாட்டை வழிநடத்தினார்.

மாநாட்டிற்கு, இலண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, நார்வே,தென்னாப்பிரிக்கா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து, பல பேராளர்கள் வந்திருந்து கலந்து கொண்டு உரையாற்றினர்.
இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மா.வே.சேனாதிராஜா, சிறிதரன், அரியேந்திரன்,யோகேஸ்வரன் ஆகியோரும், அவர்களுடன் பேராளர்களும் வந்திருந்தனர் தமிழ்நாட்டிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான நாடாளுமன்ற உறப்பினர் பேராசிரியர் சரஸ்வதி, புதுக்கோட்டை குருமூர்த்தி, டி.எஸ்.எஸ்.மணி, அரிமாவளவன்,

வழக்கறிஞர்.பார்வேந்தன்,ஆகியோரருடன் மேலும் பல பேராளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் சக்தியை நிரூபிப்போம்

உலகில் பல்கிப் பெருகி வாழ்ந்து வரும் 10 கோடி தமிழனும் அவன் தமிழினமும் காக்கப்பட வேண்டு மானால் தமிழருக்கென தனி ஒரு நாடு தேவை என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி சூளுரைத்தார்.

நேற்று பெட்டாலிங்ஜெயா தோட்ட மாளிகையில் உலகத் தமிழர் இரண்டா வது பாதுகாப்பு மாநாட்டில் சிறப்புப் பிரமுகராக கலந்துகொண்ட அவர், விழாவை தொடக்கி வைத்து மேற்கண்டவாறு பேசினார்.

இந்நாட்டில் வாழும் தமிழர்களில் சிலர் இந்தியர்கள் என்றும் இன்னும் சிலர் திராவிடர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றில் எது உண்மை அல்லது நாம் உண்மையில் யார் என அலசி ஆராய்ந்தோமானால் நிச்சயமாக நாம் அனைவரும் தமிழர்களாகவே இருக்கக்கூடும் என அவர் உறுதி கூறினார்.

நாட்டில் 13ஆவது பொதுத் தேர்த லுக்கான ஆயத்தப்பணி தொடங்கப் பட்டு பம்பரமாய் சுழன்று வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.வரும் பொதுத் தேர்தலையும் நாம் கடந்த தேர்தலைப்போன்று திருப்பு முனைக்குள் கொண்டு வருவோம்.

தமிழரின் தரத்தையும் சக்தியையும் இந்தத் தேர்தலிலும் நிரூபிப்போம். புறந்தள்ளப்பட்ட தமிழினம் புகழ்பெற்று விளங்குவதற்கு வகை காண்போம் என அவர் மேலும் கூறினார்.

8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மொத்தம் 8தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. தமிழ் நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்மாணிப்பை வன்மையாக எதிர்க்கிறோம்.

2. ஈழப் போரில் நடந்த இனப்படுகொலைக்கு ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.

3. ஈழப்படுகொலை புரிந்த அனைவரையும் நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்.

4. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தையும் உலகத் தமிழர் முன்னணியையும் அங்கீகரிக்க வேண்டும்.

5. மலேசிய தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. யாழ் பல்கலைக்கழக மாண வர்கள் கைதானதைக் கண்டிப் பதோடு அவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துகிறோம்.

7. ஆங்கில வழக்கில் தமிழ்ஸ் என்பதை தமிழர்ஸ் என்றும் தமிழ் நாடு என்பதை தமிழர் நாடு என்றும் உலக அளவில் பயன்படுத்த உறுதி பூணுவோம்.

8. உலகத் தமிழர் இன ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்கள் பற்றியும் தமிழர் பண்பாடுகளை வாழ்வியல் முறைகளாக ஏற்றுக் கொண்டு செயல் படும் தமிழர் அல்லாதவர் பற்றியும் ஓர் ஆழமான ஆய்வு நடத்த வேண்டும்.

தமிழர் உரிமைகளை பாதுகாப்போம்

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் தலைவர் பேராசிரியர் க.கிருஷ்ணசாமி உரையாற்றுகையில், 10 கோடி தமிழர் வாழும் உலகில் இந்தியாவில் மட்டும் 7 கோடி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்துனைத் தமிழர் வாழும் அண்டை நாடான இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கடந்த 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் கொன்று குவிக்கப்பட்டபோது மௌனம் காத்தது ஏன்?

தமிழினத்திற்கு சரிவர ஒற்றுமை இல்லை. இனக் காப்பொன்றே மொழிக் காப்பு என்பதை நம்மில் பலர் மறந்துவிட்டதாலேயே இலங்கையில் நடந்த போரில் மனித உரிமையும் காக்கப்படவில்லை. போர் விதிமுறையும் அங்கே மீறப்பட்டது என அவர் சாடினார்.

இனியும் உலகில் தமிழினப் படுகொலை ஏற்படாமல் இருக்கவும் தமிழனின் உணர்வும் உரிமையும் காக்கப்படவும் வேண்டுமானால், தமிழனின் உரிமைப் பிரச்சினையும் உணர்வுப் பிரச்சினையும் சர்வதேசப்படுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு அடுத்த ஆண்டு மே மாதம் வாக்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. சபை மாநாட்டில் அனைத்து தமிழின உணர்வாளர்களும் ஒன்றுதிரண்டு கலந்தாலோசித்து அப்பாவி ஈழத் தமிழர்களை கொஞ்சமும் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்க ஆணையிட்டதோடு முள்ளிவாய்க்காலில் அவர்களை அடிமைப்படுத்திய மகிந்த ராஜபக்சேவுக்கு உரிய தண்டனை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டார்.

தமிழக கோவை மாநிலத்தில் நடத்தப்பட்ட முதல் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்குக் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இம்மாநாடு மலேசியாவில் நடைபெறுவது இங்குள்ள தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும் என அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

நிகழ்வின்போது 'லண்டன் மாநாட்டில் புதிய தமிழகத்தின் குரல்' எனும் தலைப்பில் மாநாட்டு தலைவர் க.கிருஷ்ணசாமி எழுதிய நூலை துணை முதல்வர் இராமசாமி அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார். மாநாட்டில் உரையாற்றிய பிரமுகர்கள் பலர் ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்தனர்.

ஈழத் தமிழர் இன்னலை போக்குவதற்கு உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனவும் அந்த பேராளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாநாட்டின் காட்சிப்பதிவுகள் சில:









0 Responses to சொந்த நாட்டு மக்களை அழிக்கும் தலைமைத்துவம் எந்த நாட்டிலும் இருக்கக்கூடாது: மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com