Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் விடுதலைப்புலிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது சர்வதேச ரீதியில் எமது இனத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:

"கடந்த 7.12.12 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது இரா.சம்பந்தன் விடுதலைப்புலிகளைக் கேவலப்படுத்தும் வகையில் உரையாற்றி இருந்ததுடன் எமது இயக்கம் பயங்கரவாத இயக்கம் எனவும் அதனால்தான் அவர்கள் அழிவடைந்தனர் எனவும் எந்தவித மனச்சாட்சியும் இல்லாமல் தெரிவித்திருந்தார்.

கடந்த மூன்று தசாப்பத்திற்கும் மேலாக விடுதலைப்புலிகள் எமது மக்களின் விடுதலைக்காக தமது உயிரைத் துச்சமென மதித்து களமாடினர். இதனால் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவீரர்களாகினர். அது மாத்திரமின்றி இலங்கை இராணுவத்திற்கு சமனாக சமபலம் கொண்டவர்களாககும் இருந்தனர். இதனால் எமது இனம் பாதுகாப்பாகவும் தமிழினம் என்று தலைநிமிர்ந்தும் வாழும் நிலை ஏற்பட்டிருந்தது. எனினும் துர்ரதிஸ்டவசமாக அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதலை அடுத்து பயங்கரவாத அமைப்புகளுக்குள் எமது இயக்கமும் அடக்கப்பட்டுவிட்டது.

இதற்காக எமது மக்கள் உலகத்தை நோக்கி பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இன்றும் அந்த எதிர்ப்பு தொடர்ந்து வருகின்றது குறிப்பாக உலகத்தை நோக்கி புலம் பெயர் நாடுகளில் போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதியான கூட்டமைப்பின் குழுத்தலைவர் அதுவும் நாடாளுமன்றத்தில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என தெரிவித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் எமக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் நிலை தோன்றியுள்ளது.

இது கூட்டமைப்பின் மொத்த முடிவா அல்லது சம்பந்தனின் தனிப்பட்ட கருத்தா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்தாலும் இன்று அது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகவே பார்க்க முடிகின்றது. ஏனெனில் சந்பந்தன் ஆற்றிய உரைக்கு கூட்டமைப்பின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கருத்துத் தெரிவிக்கவில்லை. எனவே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோருமே சம்மந்தனின் கருத்தை ஏற்றுக் கொண்டதாகவே கருதமுடிகின்றது.

சம்பந்தனின் கருத்துக்கு தாங்கள் எதிர்க்கருத்துத் தெரிவிக்க முடியாது என இவர்கள் கூறுவார்களானால் அது அவர்களின் சுயநலமாகவே கருதப்படும். அவ்வாறு சம்பந்தனுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தால் அல்லது உண்மையைச் சொன்னால் எதிர்காலத்தில் கட்சியில் தேர்தலுக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என இவர்கள் நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு உறுப்பினர்களும் தமது கரத்தை நெஞ்சில் வைத்து தமது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்க வேண்டும். விடுதலைப்புலிகள் இல்லாதிருந்திருந்தால் அல்லது கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்காவிட்டால் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பார்களா? இன்று இந்த மரியாதை கிடைத்திருக்குமா? இந்த வாழ்க்கை கிடைத்திருக்குமா? என ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிந்தித்து உண்மைக்காக பொதுநலத்திற்காக வாழ வேண்டும். இந்த பதவியை அதற்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர சுயநலத்திற்காக பயன்படுத்தக் கூடாது. இதுவரை காலமும் சம்பந்தனின் உள்மனதிலிருந்த பல விடயங்களை அவர் தற்போது வெளிப்படையாகவே கூறிவருகின்றார். சிங்கள இனவாதிகளின் கருத்துக்களுக்கும் சம்பந்தனின் கருத்துக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. தற்போது அவர் கூறியுள்ள இந்தக் கருத்து சிறிலங்கா அரசாங்கத்தை இனவழிப்புக்கான சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

எனவே பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இக்கருத்துத் தொடர்பாகவும் அவரின் செயற்பாடுகளுக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது அவருக்கு மேலும் புத்தூக்கம் அழிப்பதாகவே உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் தமிழ் மக்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது." எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிங்கள இனவாதிகளின் கருத்துக்களுக்கும் சம்பந்தனின் கருத்துக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com