Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“மே 18ஆம் திகதியான இன்றைய தினம் தமிழ் மக்களின் தேசிய துக்க தினமாகும். போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட தினமாகும். இழந்த எமது உறவுகளை இந்தத் தினத்தில் சுடரேற்றி அஞ்சலித்து நினைவு கூருவோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இறுதி மோதல்கள் இடம்பெற்று இன்று ஆறு ஆண்டுகள் கடந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் 2009, மே மாதத்தில் கொல்லப்பட்டார்கள். அதனையொட்டி ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதனை, முன்னிட்டு இரா.சம்பந்தன் அவர்கள் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வுக்கான அழைப்பினை விடுத்துள்ளார்.

அதில், "இலங்கையின் சரித்திரத்தில் போர் என்பது முக்கிய அம்சமாகக் கருதப்படவேண்டும். இந்தப் போர் காரணமாக எல்லா இனத்தவர்களும் உயிரிழப்புகளை - துன்ப, துயரங்களை எதிர்நோக்கினர். இது எல்லோருக்கும் படிப்பினையாகும்.

எனினும், இந்தப் போர் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குப் பாரிய இழப்புகளைக் கொடுத்துள்ளது. இதனால் எமது தமிழ் மக்கள் உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர். அவர்களின் சொந்த வீடுகள், சொத்துகள் அழிந்தன.

இலங்கையிலுள்ள இனப்பிரச்சினைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் அரசியல் தீர்வு கண்டிருந்தால் இந்தப் போர் இடம்பெற்றிருக்கமாட்டாது. இந்நாட்டில் மீண்டும் போர் இடம்பெறக்கூடாது என்பதே எமது விருப்பமாகும். எனவே, தற்போது ஆட்சியிலுள்ள அரசு தேசிய இனப்பிரச்சினைக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை உடன் காணவேண்டும்.

இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழருக்கு தேசிய துக்க நாளாகும்; போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும்; இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி - அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் நாளாகும். எனவே, தமிழர்களாகிய நாம் அனைவரும் இதனைச் செய்வோமாக.

உயிரிழந்த உறவுகளுக்கு நாம் இவ்வாறு செய்வதன் ஊடாக எமது மனவேதனைகளை ஓரளவு தேற்றிக்கொள்ளலாம். அதேவேளை, இன்றைய நாளை தேசிய துக்க நாளாக நாம் அனுஷ்டிப்பதன் மூலம் போரின்போது உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடையும். எனவே, தமிழினத்தின் இன்றைய தேசிய துக்க நாள் நிகழ்வுகள் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மே 18, தமிழர்களின் தேசிய துக்க தினம்; சுடரேற்றி அஞ்சலிப்போம்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com