இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் அமைந்துள்ள சுன்டெர்பரி எனும் கிராமத்தில் பெண்கள் மோபைல் தொலைபேசி பாவிக்க
அக்கிராமத்தின் கிராம சபை சமீபத்தில் தடை விதித்துள்ளது. இக்கிராமம் பீஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து கிழக்கே 385 Km தொலைவில் அமைந்துள்ளது. மேலும் பீஹார் மாநிலத்தின் சனத்தொகை 104 மில்லியன் என்பதுடன் இத்தொகை உலகில் உள்ள வேறெந்த ஐரோப்பிய நாட்டின் சனத்தொகையை விட அதிகம் என்பதுடன் அமெரிக்காவின் சனத்தொகையின் 1/3 பங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுன்டெர்பரி கிராமத்திலும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். ஏற்கனவே ஜூலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள பாக்பட் மாவட்டத்தில் இளவயதினர் உட்பட பெண்கள் மோபைல் போன் பாவிக்கவும் இதற்கு முன்னர் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள உதய்பூர்வதி இல் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மோபைல் போன் பாவிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இக்கிராமங்களில் வாழும் இளவயதுப் பெண்கள் மோபைல் பாவனை மூலம் அதீத சுதந்திரத்தைப் பெறுவதால் தமது கலாச்சாரத்தில் இருந்து நெறி பிறழ்வதாகவும் ஆண் நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டு காதல் வலையில் விழுந்து சீரழிவதாகவும் கிராமத் தலைவர்கள் எண்னுவதாலேயே அக்கிராமங்களின் பஞ்சாயத்தில் இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
இத்தடை உத்தரவு குறித்து அகில இந்திய மகளிர் ஜனநாயக கூட்டமைப்பின் தலைவியான ஜக்மதி சங்வான் கருத்துரைக்கையில், 'பெண்கள் தமது உரிமைகளைப் பயன்படுத்தி நவீனமயமாக வாழவும் கல்வியில் முன்னேறவும், நல்ல தொழில்களில் ஈடுபடவும் உதவும் இந்த மோபைல் போன் பாவனையைத் தடை செய்திருப்பது கிணற்றுத் தவளை போல் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மூடர்களின் செயலாகும்.
இத்தடை உத்தரவு குறித்த சில சிறிய சமூகங்கள் மீதே பிரயோகிக்கப் பட்டுள்ள போதும் இது சட்டபூர்வமானதல்ல' என்றார்.
எப்படியிருந்த போதும் மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழிநுட்ப மற்றும் மின்னணு யுகத்தில் பெண்கள் உலக அனுபவம் பெறுவதைத் தடுத்து அவர்களது உரிமைகளைப் பறிக்கும் செயலாகவே இத்தடைகளை நோக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to இந்தியாவின் சில கிராமங்களில் பெண்கள் கைத்தொலைபேசி பாவிக்கத் தடை