Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்ற அரசாங்கத்தினால், அந்த இராணுவ வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

இராணுவ பலத்தின் மூலம் ஈட்டப்படும் எந்தவொரு வெற்றியும் நிலையானதோ நிரந்தரமானதோ அல்ல என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம்.

பலத்தின் மூலம் அடையத்தக்க எந்தவொன்றையும் நிரந்தரமாகத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற எளிய கருத்து இராணுவ வெற்றிகளுக்கும் பொருத்தமானது.

இலங்கை அரசாங்கம் தனது உச்சக்கட்ட படைபலத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் இயக்கத்தை 2009 மே மாதம் முற்றாகவே அழித்து விட்டது.

இப்போது இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீள இயங்க முடியாதளவுக்கு அதன் முதுகெலும்பு முறிக்கப்பட்டு, முடக்கப்பட்டு விட்டது.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட அந்த இராணுவ வெற்றியை இலங்கை அரசாங்கம் நிரந்தரமானதாக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை என்பதே சர்வதேச ஆய்வாளர்கள், நிபுணர்களின் கருத்து.

திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் கருத்தை அரசாங்கம் அவ்வளவாகக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

கடந்த வாரம் இந்தியாவின் எக்கனோமிக் ரைம்ஸ் இதழில் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா இதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இவர் ஒன்றும் இலங்கையின் நிலைமையை தொலைவில் இருந்து பார்த்தவர் அல்ல. 1987 களின் இறுதியில் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தளபதிகளில் ஒருவராகப் பணியாற்றியவர்.

இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் பாதுகாப்புத்துறை சார் ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்பவர்.
விடுதலைப்புலிகளின் தந்திரங்களையும் இலங்கை இராணுவத்தின் வரலாற்றையும் கூட நன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.

போருக்குப் பின்னர் பலமுறை வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வந்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளவர்.

போருக்குப் பிந்திய சூழலில் இலங்கை இராணுவத்துடனும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்ற ஒருவர் தான் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பெற்றுக்கொண்ட இராணுவ வெற்றியானது அரசியல் மீளிணக்கப்பாட்டுக்கு பதிலீடாக முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள கருத்து, இலங்கை அரசாங்கத் தரப்புக்கு அவ்வளவு சகிப்புக்குரியதாக இருக்க மாட்டாது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்ட இராணுவ வெற்றி, மிகப் பிரமாண்டமானது. அதை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்த வெற்றி அடையப்பட்ட வழிமுறைகள், கையாளப்பட்ட தந்திரங்கள், இந்த வெற்றியின் போது மனித உயிர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும், இதன் இறுதிப் பெறுபேறு கேள்விக்குட்பட்டது அல்ல.
அதாவது தமிழரின் ஆயுதப் போராட்டத்தை ஆயுத பலத்தின மூலம் அடக்க முடியாது என்ற காலம் காலமாக நம்பப்பட்டு வந்த கருத்தை உடைத்து, உச்சக்கட்ட இராணுவ வெற்றியை இலங்கை அரசாங்கம் தனது படைபலத்தின் மூலம் அடைந்தது.
முடியாது என்று சொல்லப்பட்ட ஒன்றை, முடியும் என்று செய்து காட்டியது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம்.

சர்வதேச அரசியல் சூழமைவுகளும் அதங்குச் சாதகமாக அமைந்து போயின.

ஆனால் இந்த வெற்றியை நிரந்தரப்படுத்திக் கொள்வதில் அரசாங்கம் படிப்படியாக தோல்வியைச் சந்தித்து வருகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமே.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியமர்வு, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை, பாதுகாப்பு வலயங்கள் சுருக்கப்பட்டமை, பெரும்பாலான முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டமை, இராணுவத்தின் படைப் பிரிவுகள் பல வடக்கிற்கு அப்பால் மீள்நிலைப்படுத்தப்பட்டமை, பொருளாதார அபிவிருத்தி போன்ற மாற்றங்கள் இந்தக் காலகட்டத்தின் மிகப் பெரிய சாதனைகளாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மூன்றரை ஆண்டுகளில் அடையப்பட்ட சாதனையாக இவற்றையெல்லாம் பட்டியலிடும் அரசாங்கம், பிரதானமான விடயத்தை மறந்தே விட்டது.

எதற்காக தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்கியதோ, விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் எதை மையப்படுத்தியதாக இருந்ததோ, அதற்கான காரணங்களை களைவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது.

ஆயுதப் போராட்டத்தின் அடிப்படையாக இருந்தது இனப்பிரச்சினை. அதற்கு நியாயமான அரசியல் தீர்வைக் காண அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் செய்யவில்லை.

வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான ஒழுங்குகளை இன்னமும் செய்யவில்லை. அதைவிட, இன்னமும் இராணுவச் சூழலுக்குள் இருந்து வடக்கு, கிழக்கை வெளியே கொண்டு வரவில்லை.

வடக்கில் பெரியளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை அகற்ற அரசாங்கம் தயாராக இல்லை.
பாதுகாப்புக்கு அவர்கள் அவசியம் என்கிறது அரசாங்கம்.
மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்றொரு பழமொழி உள்ளது. அரசாங்கம் இன்னமும் தனது மடியில் இருக்கும் நெருப்பை கீழே கொட்டி விடவில்லை.
அதனால் தான் அதற்கு அச்சம் அதிகமாக உள்ளது.
தமிழர்களுக்கு உரிய அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்கினால், நிச்சயமாக இன்னொரு ஆயுதப் போராட்டம் பற்றி அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது.

ஆனால் அரசாங்கமோ வெறும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வசதி வாய்ப்புகளைக் காட்டி, நிரந்தர அமைதியை உருவாக்கும் கனவில் தான் இந்த மூன்றரை ஆண்டுகளையும் கடத்தியுள்ளது.

இன்னமும் அதே நம்பிக்கையில் தான் இருக்கிறது.
ஆனால் இந்த நம்பிக்கை ஆபத்தானது என்பதை வலியுறுத்தும் வகையில் தான் அரசியல் மீளிணக்கப்பாட்டுக்கு இராணுவ வெற்றி பதிலீடாக முடியாது. என்று மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் மீளிணக்கப்பாட்டுக்கு அதிகாரப்பகிர்வும் பொறுப்புக்கூறலும் முக்கியமானவை என்றும் அவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தையே முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம், அதை வைத்து நிரந்தர அமைதியை உருவாக்க முடியாது. என்ற தோரணையில் தான் அரசாங்கம் செயற்பட்ட வருகிறது.

உலக வரலாற்றில் இராணுவ பலத்தின் மூலம் அடையப்பட்ட எந்தவொரு வெற்றியும் அரசியல் மீளிணக்கப்பாடு உருவாக்கப்படாமல் நிலைபெற்றதில்லை.

பிரித்தானிய பேரரசு, தனது படைபலத்தின் மூலம் இணைத்துக் கொண்ட ஸ்கொட்லாந்து மக்களின் தனிநாட்டுக்கான கோரிக்கை முன்னூறு ஆண்டுகளைத் தாண்டி இப்போதும் தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாகவே தனிநாடு தொடர்பான கருத்து வாக்கெடுப்பை நடத்த பிரித்தானியா அண்மையில் இணங்கியது.
வட அயர்லாந்திலும் கூட சுதந்திரக் கோரிக்கைக்கான தாகம் தணியவில்லை.

இவை அரசியல் மீளிணக்கப்பாட்டை எற்படுத்தத் தவறிய இராணுவ வெற்றிகள் தோற்றுப் போனதற்கான உதாரணங்கள்.
இது போலப் பல உதாரணங்கள் உள்ளன.

பொருளாதார ரீதியாக பிரித்தானியா எவ்வளவோ செய்த போதும், தனித்துப் பிரிந்து போகும் எண்ணம் ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து மக்களிடம் இருந்து மறையவிலலை.
அதுபோலத்தான் இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள இராணுவ வெற்றி மூலம் நாட்டில் நிரந்தரமான அமைதியைக் கொண்டு வர முடியாது.

அத்தகைய நிரந்தர அமைதியை உருவாக்குவதற்கு பொருளாதார உதவிகள், வளர்ச்சிகளே போதுமானது என்ற கருத்தில் இருந்து அரசாங்கம் விலகாது போனால், மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தை அடக்கிய இராணுவ வெற்றியை நிலைநிறுத்துவது முடியாத காரியமாகவே இரக்கும்.

அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை தனது இராணுவ வெற்றியை தானே பலவீனப்படுத்திக் கொள்வதாகவே அமையும்.

சுபத்ரா

0 Responses to கை கழுவிப் போகும் இலங்கையின் இராணுவ வெற்றி - சுபத்ரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com