Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையிலும் தமிழ் பேசும் மக்கள் மீது இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற வகையிலான ஒரு காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டதை அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

கடந்த மாவீரர் தினத்தன்று பொலிஸாரும் இராணுவத்தினரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து சோதனை என்ற பேரில் வன்முறைகளில் ஈடுபட்டனர்.

அடுத்தநாள் அதைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரால் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டது. அதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
அந்தச் சம்பவத்தை அடுத்து சில மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் நால்வர் புனர்வாழ்வு என்ற பேரில் வெலிகந்தை இராணுவத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்.
அவர்கள் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

அவர்களை விடுதலை செய்யக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் பகிஷ்கரித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நாளொன்றுக்கு 3 மாணவியர் வீதம், வவுனியாவுக்கு வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி மாணவர்கள் மீது தொடர்ச்சியான பயங்கரங்களும் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான ஒரே ஒரு காரணம் அவர்கள் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை மட்டும்தான்.

போர்க்களத்தில் போராடி வீழ்ந்த வீரர்களுக்கு உயர் மதிப்பளித்து போற்றி வழிபடுவது என்பது உலகம் முழுவதுமே புனிதமாகப் பேணப்பட்டு வரும் ஒரு மரபு.

இலங்கையின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு அந்த உரிமையைக் கூட வழங்கத் தயாரில்லை.
அது மட்டுமன்றி அப்படி அஞ்சலி செலுத்துவது ஒரு பாரதூரமான குற்றமாகவே அவர்களால் கொள்ளப்படுகிறது.

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்கப் புரட்சி செய்த ஜே.வி.பியின் மரணித்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த உரிமை உண்டெனவும் நாட்டைப் பிரிக்கப் போராடிய விடுதலைப் புலிகளை அஞ்சலிக்க அனுமதிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

முழுநாட்டையும் பிடிக்க முயன்றவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்பதும் நாட்டில் தாங்கள் வாழும் பகுதிக்கு மட்டும் விடுதலை கோரியவர்கள் பயங்கரவாதிகள் என்பதும் அவரின் வியாக்கியானம்.

ஆனால் அவர் அந்தக் கூற்றின் மூலம் சொல்லாமலே வெளிப்படுத்திய ஒரு செய்தியைத் தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

அதாவது இந்த நாட்டில் சிங்களவருக்கு உள்ள உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை என்பதுதான் அது.

அதேவேளையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வடபகுதியின் இராணுவக் கட்டளைத் தளபதியைச் சந்தித்து தடுப்பிலுள்ள மாணவர்களை விடுவிக்கும்படி கோரியபோது அவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட  பின்பே விடுவிக்கப்படுவர் எனவும், அவர்களை விடுவிக்கும்படி மாணவர்கள் போராட்டம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி அவர்களை வகுப்புகளுக்குச் செல்லுமாறு ஆலோசனை சொல்லும் படி பெற்றோரிடமும் விரிவுரையாளர்களிடமும் வலியுறுத்தியிருந்ததார்.

இவற்றிலிருந்து இலங்கையின் ஆட்சியாளர்களும் படையினரும் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் எத்தகைய மதிப்பளிக்கிறார்கள் என்பதையும் எவ்வாறு ஒரு கொடிய அடக்குமுறையின் கீழ் தமிழ் மக்களை கையாள்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் மாவீரர் நாளையொட்டி ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கைது வேட்டை மாணவர் மட்டத்துடன் நின்றுவிடவில்லை.

இது மேலும் மேலும் விரிவடைந்து சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என எல்லா மட்டத்தினர் மேலும் பாய ஆரம்பித்துள்ளது.

இதுவரை யாழ்.குடாநாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஆணைக்குழு உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயக்கொடி கருத்து வெளியிடும் போது இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் எனவும் அவர்கள் தலைமறைவாக இதுவரை காலமும் இருந்து வந்தவர்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவர்களைப் பற்றிப் புலனாய்வுப் பிரிவினர் பல மாதங்களாகத் தகவல் சேகரித்ததன் அடிப்படையில் இவர்கள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களிடம் தற்சமயம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிலர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் ஏனையோர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரின் கூற்றிலிருந்து இவர்களில் எவரும் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்ற விடயம் தெளிவாகிறது.
இப்படியான ஒரு நிலையில் இங்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

இவர்கள் தொடர்பாகப் பல மாதங்களாக புலனாய்வுப் பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டிருந்தால் ஏன் அந்தந்த நேரங்களில் அவர்கள் கைதுசெய்யப்படாமல் பல்கலைக்கழகப் பிரச்சினை இடம்பெறும்போது கைது செய்யப்படுகின்றனர்?
இந்த 45 பேரும் ஏன் சுதந்திரமாக உலவ விடப்பட்டனர்? இவர்கள் தலைமறைவாக இருந்திருந்தால் ஏன் இப்போது மட்டும் வெளி வந்தனர்?

இப்படியான கேள்விகளுக்கு எவரும் பதிலளிக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் இவற்றுக்கான பதில் இல்லை.
இப்படியான நிலையில் ஏதோ ஒரு உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு பல்கலைக்கழகச் சம்பவங்களைச் சாட்டாக வைத்து ஒரு பெரும் சதி வலை பின்னப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பாகப் பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டு சிக்கல்களை ஏற்படுத்தும்.

அதில் வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பதும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் இலங்கை அரசு தமிழர் தாயகப் பகுதிகளில் படைக்குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை.

சிங்களக் குடியேற்றங்களை நிறுவி விரிவுபடுத்துவது, தமிழ் மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பது, ஒரு இராணுவக் கட்டுப்பாட்டை அங்கும் நிலைநிறுத்துவது போன்ற விடயங்களைத் தொடரவும் இன ஒடுக்குமுறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவும் இங்கு பெருந்தொகையான படையினர் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
அப்படியாக இராணுவத்தினரை இங்கு தொடர்ந்து நிலை கொள்ள வைக்க ஒரு காரணம் தேவை.

அந்த நோக்கத்தை நிறைவேற்றவே மீண்டும் புலிகள் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர் என்ற தோற்றப்பாடு இப்படியான கைதுகள் மூலம் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இன்னொரு புறம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை அபகரித்து இராணுவ முகாம்களை நிறுவுதல், ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் மக்களின் இயல்பு வாழ்வுக்கு குழப்பம் விளைவித்தல், ஒவ்வொரு விடயங்களிலுமான இராணுவத் தலையீடு என்பவற்றுக்கு எதிராக தங்கள் ஜனநாயக வழியிலான போராட்டங்களில் இறங்க ஆரம்பித்துவிட்டனர்.
இது சர்வதேச ரீதியில் இலங்கை அரசின் இனஒடுக்குமுறையை அம்பலப்படுத்துவதுடன் மனித உரிமைகள் பேரவையிலும் நெருக்கடிகளை உருவாக்கும்.

எனவே எந்நேரமும் எவரும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் மக்கள் அச்சப்பட்டு போராட்டங்களில் கலந்து கொள்ளாத நிலை உருவாகும் என அரசு எதிர்பார்க்கின்றது.

எனவே ஒரு புலிப்பூச்சாண்டி மாயையை உருவாக்கி அதன் அடிப்படையில் இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் என்ற பயங்கர நிலைமையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசு ஒரு வலிந்த அமைதித் தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறது.

அதன் மூலம் முகம் கொடுக்க வேண்டிய தேசிய, சர்வதேச நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும் என்ற அரசின் நம்பிக்கை நிச்சயம் தோல்வியடையும் என்பதே வரலாற்று அனுபவமாகும்.

0 Responses to இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டாட்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com