Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவில் உள்ள பிரபல சித்திரவதை கூடமான யோசப் முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நவ.27ம்  திகதி வி.புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டித்தார்கள் என குற்றம் சாட்டியும்,  மறுநாள் ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தி சென்றார்கள் என்று கூறியும் இராணுவத்தினரால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என காவல்துறை மா அதிபர் தெரிவித்திருந்தார். அதன் படி ஒரு சிலர் விடுவிக்கப்பட்ட போதும், பிரதானமான மாணவர் தலைவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெற்றோர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள், குறித்த மாணவர்களை பார்வையிட சென்ற வேளையில், யோசப் முகாமிலிருந்தே அவர்களை காவல்துறையினர் அழைத்து வந்திருந்ததாக பல்கலைக்கழக பீடாதிபதி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் வசமே குறித்த மாணவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக சிங்கள இணையத்தாமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.  தனது தகவலாளர் ஒருவரை முன்னிறுத்தி அச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் அங்கு நிறுவப்பட்டுள்ள பொங்கு தமிழ் பிரகடனப்பலகை மற்றும் மாவீரர் நினைவு தூபிகளையும் படம் பிடித்துள்ளதாகவும், கடந்த 27, 28ம் திகதி சம்பவங்கள் தொடர்பில் காவலார்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி நேற்று கிளிநொச்சியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் கைது, மாணவர்களின் விடுதலை, காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கான நியாயக்குரல் மற்றும் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட பல கட்சிப் பிரதிநிதிகள்,  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புதிய மார்க்சிஸ லெனின் கட்சியின் உறுப்பினர்கள், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவியார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

0 Responses to யாழில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சித்திரவதை அனுபவிக்க நேரிட்டிருக்கலாம்: சந்தேகம் வெளியீடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com