Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட ராணுவ வீரர்கள் இறுதி சடங்கில் உத்திரப் பிரதேச முதல்வர்   கலந்து கொள்ளாதது  ஏன் என்று, உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே கடந்த செவ்வாய் கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உபியை  சேர்ந்த ராணுவ வீரர் ஹேம்ராஜ் உட்பட இரண்டு பேரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ராணுவ வீரர் ஹேம்ராஜின் இறுதி சடங்குகள் நேற்று உ.பியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. இதில் மாநில அரசு சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உபியின் முன்னாள்  முதல்வருமான மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக ஒரு வீரர் தனது உயிரை கொடுத்துள்ளார், உச்சகட்ட தியாகம் செய்துள்ளார். அனால் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல மாநில அரசுக்கு நேரம் இல்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மக்களின் துன்பம் மீது மாநில அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

எல்லையில் உயிரிழந்த வீரரின் மனைவிக்கு மாநில அரசு, அரசு வேலை தரவேண்டும். குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள மாயாவதி, இந்திய பாகிஸ்தான் பிரச்சனை தீர வேண்டும் என்றால் உறுதியான நடவடிக்கை  மற்றும்  தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மகன் தலை கிடைக்கும் வரை எனக்கு அமைதி இல்லை : ராணுவ வீரரின் தாய் குமுறல்

எனது மகன் தலை கிடைக்கும் வரை எனக்கு அமைதி இல்லை என்று, பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் தலை துண்டிக்கப் பட்டு உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் தாய் குமுறலுடன் கூறி உள்ளார்.

காஷ்மீர் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில், சில தினங்களுக்கு முன்பு பனி மூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டாக வெட்டியுள்ளனர். அதோடு ஒரு இந்திய வீரரின் தலையை எடுத்தும் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  பாகிஸ்தான் படையின் இந்த செயல் கொஞ்சமும் மனிதாபிமானம் அற்ற செயல் என்று இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் படைத் தாக்குதலில் பலியான உபியை சேர்ந்த ஹேம்ராஜின் தலைதான் பாகிஸ்தான் வீரர்கள் கொண்டு சென்ற தலை என்றும் தெரிய வருகிறது.

ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்ட ஹேம்ராஜின் உடல் மட்டுமே நாங்கள் கண்டது. எனது  மகனின் தலையைக் காணும்வரை எனக்கு அமைதி கிடைக்காது. அவனது தலையை உடனடியாக கண்டுபிடித்து மீட்டுத் தருமாறு கோரிக்கை வைக்கிறேன் என்று கண்ணீர் மல்க குமுறலோடு கூறியுள்ளார் ஹேம்ராஜின் தாய்.

0 Responses to எல்லையில் கொல்லப்பட்ட இராணுவ வீரர் இறுதிச் சடங்கில் உ.பி முதல்வர் பங்கேற்காதது ஏன்?: மாயாவதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com