Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஜி.கே.வாசன், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கைச்  சந்தித்த  செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு விபரங்கள் பல மாறுபட்ட பல்கோணச் சிந்தனைகளை பலருக்கும் பலவாறு தோற்றுவிக்கும்.

அதற்கு முன், இந்தியப் பிரதமரின் பதில்கள் கண்டு தமிழர்கள் எங்கிருந்தாலும் கொதிப்பது இயல்பு. ஆனால் அது இயல்பாகவே ஆறி விடும் என டெல்லியின் கபட அரச தந்திரம் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நம்பிக்கையில் தான் இந்தியத் தேசியம் தன்னையே பணயம் வைத்து தமிழக சட்டசபையின் ஜனநாயக ரீதியிலான தீர்மானத்தை நிராகரித்துள்ளது என அமைச்சர் சல்மான் குர்ஜித்தே கூறியிருந்தார்.

உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழக அரசின் தீர்மானத்தை எப்படி நிராகரிக்க முடியும்?

இது இந்தியா தனது ஜனநாயகத்தை பணயம் வைக்கும் முயற்சி என்பதோடு இந்தத் தமிழர் புறக்கணிப்பு தமிழகத் தமிழர்கள் அமரர் மாண்புமிகு காமராஜ் நாடார் போலவே, இந்திய காங்கிரஸ் கட்சியிலும், இந்திய தேசியத்திலும் நம்பிக்கையை இழந்தமையை வலிதாக்கி, பாரத மாதாவை நிர்வகிப்பவர்களின் மாற்றான் தாய் மனப்பான்மையை தொடர்ந்தும் தாங்கிப் பொறுக்காது இந்தியத் தேசியப் பற்றை இழப்பர் என்பது அவருக்கு தெரியாதா என்ன?

இதே போன்ற ஒரு சட்டச் சிக்கலை "றியல் அற்பார்"; வழக்கின் மூலம் வலிதாக்கி நிலை நிறுத்தியவரே சட்ட மாமேதை அமரர் திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களாவார். அதைப் போலவே இதுவும் சட்டப்படியும் முறையற்றதா என்பது தமிழ் வழக்கறிஞர்களுக்கான சிந்தனைக்குரியது.

டெல்லியின் இந்த தமிழர் புறக்கணிப்பை பொறுக்கவே முடியாத ஒரு நிலையிற்தான் "காமராஜர் காங்கிரஸ்" தோன்றியிருக்க வேண்டும். இதனை திரு ஜீ.கே வாசனும், இந்திரா காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்களும் ஆராய வேண்டும். அமரர் காமராஜ் நாடார் பதவி மோகமோ அன்றி பண ஆசை பிடித்தவரோ அல்ல.

பாரத தேசம் மீது பற்றுக் கொண்ட காந்தியவாதி. அவரது நீண்ட நெடிய அனுபவத்தை தமிழகம் இனியும் உணராது தொடர்ந்தும் டெல்லி காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பது ஈழத் தமிழ் இன அழப்பிற்கும், தமிழக மீனவத் தமிழர் கொலைகளுக்கும் துணை போகும் துரோகமாகும்.

இதற்கிடையில் சிறீலங்கா அமைச்சர் ஒருவர் தான் இனிச் சும்மா இருக்க மாட்டேன் என்று முழுத் தமிழகத்தையுமே எச்சரித்திருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு செய்தியாகும்.

தன் கன்றை இழந்த ஒரு பசுவுக்கே அன்று அடிக்க ஒரு ஆராய்ச்சி மணி இருந்தது. இந்த ஆளும் காங்கிரஸ் கட்சியும் அதன் நிர்வாகமும் இத்தனை ஆயிரம் அப்பாவித் ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க உலகே கொண்டு வந்த தீர்மானத்தை இரண்டாவது தடவையும் உலக அரங்கில் நீர்த்துப் போக வைத்த காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது பற்றி சிந்திக்க வேண்டும்.

இவர்களை நம்பி இன அழிப்புக்கே துணை போன கலைஞர் போல், மென்மேலும் இவர்களை நம்பாது, தொடரவுள்ள அநீதிகளுக்கு துணை போகாது, முதலிலேயே விலகுவது பற்றி சுய முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கனடாவின் இன்றைய எதிர்க்கட்சியான லிபறல் கட்சி, கனடா தேசம், கொழும்பு பொதுநலவாய அமைப்பு மகாநாட்டை பறக்கணிக்க வேண்டும் என்று ஒரு பலமான ஒரு அறிக்கையை ஏப்ரல் மூன்றாந் திகதி வெளியிட்டுள்ளது. அதன் கட்சியின் தலைவரான திரு பொப் றே அவர்கள் ஆதாரபூர்வமாக இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இது ஒன்றும் கனடாவின் உள் அரசியற் போட்டி அல்ல. 2002 இலிருந்து நீண்ட காலமாக, புலிகளுடன் சிறீலங்கா அரசு பேச்சுக்களை நடாத்திய வேளை, கனடா அரசின் சார்பில் அனுசரணையாளராக கொழும்பில் நீண்ட காலம் தங்கியிருந்தவரே திரு பொப் றே ஆவார்.

அச்சமயம் சிங்கள – தமிழ் இன ஒற்றுமையை நிலை நாட்ட முயன்ற இவர், சமஷ்டி ஆட்சி முறை மூலமாக தமிழரது இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் இல்லாவிடின் பிரிவினையைக் கோருவதைத் தவிர ஈழத் தமிழருக்கு வேறு வழியில்லை என்று பகிரங்கமாக கூறியவராவார்.

ஈழத் தமிழரின் ஜனநாயக ரீதியிலான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் சிறீலங்கா இப்படித் தான் புறக்கணித்தது. தேர்தல் வாக்களிப்பு மூலம் சென்றடைந்த ஜனநாயக மரபு ரீதியிலான இன இறைமை தொடர்பான முடிவை சிறீலங்கா "ஜனநாயக சோசலிசக்" குடியரசு மறுத்தது.

அதே தவறை இன்று இந்திய மத்திய அரசும் செய்கிறது. ஆட்சியாளர்கள் எங்கிருந்தாலும் ஒரு இனத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடாத்துவதாற்தான் தனிக் குடித்தனச் சிந்தனைகள் பிறக்கின்றன. இதனையே ஈழப் பிரிவினை வாதமாக இன்றைய உலகிற்கு இந்தியா சித்தரிக்கிறது.

ஈழத்தில் முப்பது ஆண்டுகளாக காந்தி வழியில் போராடியும் இயலாத போது தான், சுய இனப் பாதுகாப்பிற்காக தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது. இந்தியாவும் பயிற்சி அளித்தது. பின்னர் இதையே புலிப் பயங்கரவாதம், தமிழ்த தீவிரவாதம் என இந்தியாவும் சேர்ந்து அழித்து ஒழித்தது.

இந்த வரலாற்று அனுபவத்தை அற வழியிலப் போராடும் தமிழின தொப்புள் கொடி தமிழக மாணவ உறவுகள் கவனிக்க வேண்டும். இவ்வாறு ஏதாவது சூழ்ச்சி செய்தாவது தமிழக மாணவரின் போராட்டத்தை தமிழக மக்களே வெறுக்கச் செய்ய காங்கிரஸ் கட்சி முயலலாம்.

தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்பட்டவர்கள் முதலில் பொங்கி எழுவர் பின்னர் மறந்து விடுவர். அப்படி மறக்காவிடினும் அவர்களைப் பேசி சமாதானப்படுத்தி விடலாம் என அவர்கள் இன்னமும் நம்பியிருக்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனையும் திரு சிவ்சங்கர் மேனனையும் கலைஞரிடம் அனுப்பி அனுப்பியே முள்ளிவாய்க்கால் இன அழிப்பை இதே காங்கிரஸ் நடாத்தி முடித்தது.

நீங்கள் யாரைச் சென்று சந்தித்தாலும், யாரிடம் எத்தனை கடிதம் கொடுத்தாலும் இது இந்தியாவின் இராஜதந்திர நிலைப்பாடு என்பார்கள். தன் குடிமக்களை காக்காத அரச தந்திரம் எங்காவது உள்ளதா? இந்தக் கேள்வியை திரு ஜீ.கே.வாசன் உடனடியாக மாண்புமிகு பிரதமரிடம் கேட்டிருக்க வேண்டும்.

நீங்கள் கட்சிக்காரராக அல்லாமல் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்து இதை பிரதமரிடம் கேட்டிருக்க வேண்டும். கலைஞர் கருணாநிதியும் இவ்வாறே அரசியல்வாதியாக நின்றே டெல்லியுடன் வாதிட்டதாக செய்திகள் அன்றும் வெளியாகியிருந்தன.

எம்.ஜீ.ஆர் இருந்த போது கூட திமுக இப்படி ஆதரவு குறையவில்லை என்று தான் அவரும் கூறியிருந்தார். தமிழரைக் கொன்றால் டெல்லி அதைப்பற்றிக் கவலைப்படாதா? என்று கேட்கவில்லை.

தமிழக மீனவர் உயிர்களை இந்திய மத்திய அரசு காப்பாற்றாவிட்டால், தமிழகத் தாமிழர்கள் என்ன செய்வது? ஏந்த அரசிடம் போய் முறையிடுவது? இது அவர்கள் தாங்கள் தங்களுக்கு ஒரு தனியான அரசு வேண்டும் என்று சிந்திக்கத் தூண்டாதா என்று கேட்டிருக்க வேண்டும்.

பிரிவினைக்கு சிறீலங்காவைப் போல் நீங்கள் தான் வித்திடுகிறீர்கள் என்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதே கருத்தை இந்திய தேசிய ஊடகங்களிலும் வெளியிட்டிருக்க வேண்டும்.

என்றுமே சாம பேத தண்டம் எனச் சிந்திப்பதுடன், பின் புறம் மறைந்து நின்றே வாலியையும் அன்று அழித்தவர்கள், முதலிற் பேசிப் பார்ப்பார்கள். பின்பு அடுத்த படியாக தமிழகத் தலைமைகளையும், தமிழ் இனத்தையும் அரசியல் கட்சிகள் வாயிலாகப் பிரித்து ஆள முயல்வார்கள். அதுவும் கைகூடாவிடின், அடுத்த தான நிலைக்கு வருவார்கள்.

அது அனேகமாக 13 பிளஸ் தானமாகவே இருக்கும். கச்சதீவுத் தானம் போல் இதுவும் தமிழருக்கு கேடாகவே முடியும். திரு சுப்பிரமணிய சுவாமி அவர்கள் கூறியதைப் போலவே, அதிகம் படிக்காத தமிழகத் தலைமைகளை ஏமாறறலாம் என்றோ, தமிழர்களால் சர்வதேச மட்டத்தில் சிந்திக்க இயலாது என்றோ தான் கணக்குப் போட்டுள்ளார்கள்.

எனவே தமிழகத் தலைமைகளை இடையே " பேதங்களை" வளர்த்து அவர்களை பிரித்து இலகுவாக அமுக்கலாம் என டெல்லி நம்பியுள்ளது. தமிழர் போர் வாளான கருணாநிதியை வைத்துக் கொண்டு தானே முள்ளிவாய்க்கால் இன அழிப்பை நடாத்தினோம் என அவர்கள் உறுதியோடு இருப்பார்கள். எதுவுமே இயலாவிட்டால் தான் தண்டிக்க வருவார்கள். அதற்காக புதிய புதிய மேலதிக தடா பொடாச் சட்டங்கள் எல்லாவற்றையும் கொண்டு வரவும் கூடும்.

எனவே தமிழக மாணவர் அற வழியிலான நியாயமான போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழரின் ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களிற்குத் தேவை. இந்த வெளிநாட்டுத் தமிழர் ஆதரவையும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளிள் ஆதரவாக, புலிகளின் ஆதரவாக சித்தரித்து இலகுவாக சட்டத்துள் சிக்க வைப்பதே டெல்லியின் இறுதிக் கபடமாக இருக்கும்.

இதனை புலம்பெயர் தமிழர்களும் கூட கவனிக்க வேண்டும். எனவே உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் அடிப்படையில் பிற இன உலகத் தலைமைகளையும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயக தொடர் அணி தேவை. இதனை உருவாக்கக் கூடிய வாய்ப்பு புலம்பெயர் தமிழர்களிடம் உண்டு. இப்படி உதவி செய்வதாகக் கூட டெல்லியே வேஷம் போடலாம். அற வழியிற் போராடக் கூட தடைகள் பல வழிகளிலும் வர இடமுண்டு.
பழைய அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு தமிழ் இன அழிப்பை நிறுத்த முயலும் உங்களிற்கு புலம்பெயர் தமிழர் ஆதரவு உங்கள் போராட்டத்தை உலக அரங்கில் வைத்திருக்க என்றும் தேவை.

எனவே உலகளாவிய தமிழர் மனித உரிமை அமைப்பு ஒன்றை பூகோள ரீதியில் அமைப்பது தொடரபாக சிந்திக்க வேண்டிய காலமிது.

இவ்வாறே 2009 முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து, இலங்கைக்கு வெளியே ஒரு அரசை நிறுவலாம் என மே 31ம் நாள் கனடா சிஎம்ஆர் வானொலியில் தெரிவித்த கருத்தை தெரிந்து கொண்டதும், முறையாக ஈழத் தமிழர்கள் பலமாக ஒரு அரசை அமைப்பதை தவிரக்க தங்களிடம் பிடிபட்டவர்களை அரசுகள் பயன்படுத்தியமை இன்று ஒரு பகிரங்க இரகசியமாகியது குறிப்பிடத்தக்கதாகும்.

நமது தேவை தியாகமும் வீரமும் மட்டுமல்ல விவேகமும், கவனமும் தான். அதாவது உணரச்சி வசப்படுதலோடு தந்திரமும் தேவை. அதாவது இன உணரச்சியால் எழுச்சி பெற்ற தமிழக மாணவர்களிற்கு இன்று தேவையானது அரச (ராஜ) தந்திர விழிப்புணர்ச்சியே. இதனுடாகவே உலக அரசுகளின் சர்வதேச கவனத்தை ஈர்க்க இயலும்.

வெள்ளைக் கொடியோடு முள்ளிவாய்க்காலுள் நின்ற அவர்கள் காட்டிய இராஜதந்திர வழியில், அற வழியில் ஜனநாயக ரீதியில் தங்களின் போராட்டம் தொடர்வதாக! இதனையும் சிறீலங்கா எதிரி மட்டுமன்றி, கபட காங்கிரஸ் ஆட்சி நிர்வாகம்தான் ஏதாவது சூழ்ச்சிகள் மூலம் குழப்ப முயலும்.

எனவே இன்றைய தமிழக மாணவர் தேவை கண்ணியம் - கவனம் - நிதானம் - தந்திரம் போன்றனவாகவே இருக்க முடியும். ஏனென்றால் ஈழத் தமிழராகிய எம்மிடம் வெளிப்படாத இன எழுச்சி தமிழகத்தில் எழுந்துள்ளது.

முடிவாக இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள்த் தலைவர் திரு மூப்பனாரின் வாரிசு திரு வாசன் அவர்களே! ஆமார் காமராஜரின் அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு காமராஜ் தாசன் வாசனாகுங்கள். இதை விட வேற எந்த வழியையும் உங்களிற்கு இந்தியக் காங்கிரஸ் கட்சி விட்டு வைக்கவில்லை.
மூப்பனார் வாசனே ! கலைஞரைப் போல் நீங்களும் விலகுங்கள். இந்த விலகல் இந்தியாவை வெடிக்க வைக்க வேண்டும் என்று கூறவில்லை. சிறீலங்கா குயில் மீதான பிடிப்பையாவது குறைக்கட்டும். …..தமிழக மீனவரையும் ஈழத் தமிழரையும் காக்க வைக்கட்டும்.

பொதுநலவாய அமைப்பு மகாநாட்டை ஈழத் தமிழருக்கான நீதிக்காக, கனடாவும் இங்கிலாந்தும் எதிர்க்கையில் தமிழகத் தலைவர்களில் ஒருவரான நீங்கள் ஆதரிப்பதா? முடிவை ஜனநாயக ரீதியில் உங்களிடமே விட்டு விடுகிறோம்.

திரு ராகுல் காந்தி அவர்கள் தமிழக மக்களின் உணர்வை மதிக்கிறேன் என்பது உண்மையானால் அவரை கொழும்பு பொதுநலவாய அமைப்பு மாநாட்டை பகிஸ்கரிக்கக் சொல்லுங்கள். உடனடியாக பொதுநலவாய அமைப்புச் செயலாளர் திரு கமலேஷ் சர்மாவுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்யச் சொல்லும்படி கேளுங்கள்.

ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவான தமிழக அரசின் தீர்மானங்களை ஏற்கச் சொரல்லுங்கள். உங்கள் தந்தையாரின் மறைவுக்கு நீதி கேட்டு புலிகளை அழித்தீர்களே, முள்ளிவாய்க்காலுள் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களிற்கான சர்வதேச விசாரனையை இந்தியா தடுத்தது ஏன் என்று கேளுங்கள்.

நீதியைக் கேளுங்கள். நீதிக்காக கேளுங்கள். "நிதிகளும்" , நீங்களும் கேட்காவிடினும் தமிழக மக்களும் ஊடகவியலாளர்களும் திரு ராகுல் காந்தியிடம் நிச்சயம் கேட்பார்கள். முன்பு ஒரு நம்பியார். இன்று ஒரு கமலேஜ் சர்மாவா?

ஜீ கே வாசன் அவர்களே! முடிவாக , சவக்காலையே உலகின் ஒரு தலை சிறந்த நூலகமாக இயலும். கிங் மேக்கர் காமராஜரின் இந்திய காங்கிரஸ் அனுபவங்களை புரிந்து கொள்ளுங்கள்.
சென்னை உயர் நீதிமன்ற அந்தச் சிவப்புக் கட்டிடத்தின் முன்னுள்ள மனுநீதி கண்ட சோழனின் நீதியின் பெயரால், கண்ணகியின் ஒற்றை சிலம்பின் பெயரால் கேட்கிறோம் மூப்பனார் வாசனே கலைஞரைப் போல் ஆதரவை விலக்குங்கள் நீதிக்காக விலகுங்கள். தமிழக மீனவருக்காக அவர்களின் உயிர்களுக்காக விலகுங்கள்.

தமிழகத் தமிழர்களைக் காக்காத கட்சியும் வேண்டாம் அதன் இராஜதந்திரமும் வேண்டாம். அந்த இந்திய இராச்சியமும் வேண்டாம் அதன் அமைச்சர் பதவியும் வேண்டாம். அமருங்கள் உலகத் தமிழர் இதயங்களில்…. தமிழனாக ….நீதியுள்ள மனிதனாக….நீதி மானாக….. துடித்த பசு அடித்த மணிக்கு கிடைத்தது நீதி அன்று.

துடி துடித்து இறந்த உங்கள் உறவுகளுக்காக துறவுங்கள் பதவியை… மூப்பனார் வாசனே! உலகத் தமிழர் நெஞ்சங்களில் வாசம் செய்யுங்கள்.

தமிழ்த்தாயின் சார்பில் முன் கூட்டியே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேட்போம் நீதி! காப்போம் தமிழரை !! வாழ்க தமிழர் உலகெலாம். பாதுகாப்பாக!
kuha9@rogers.com

0 Responses to மூப்பனார் வாசனே! தமிழர் நெஞ்சங்களில் வாசம் செய்யுங்கள்: பூநகரான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com