கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு, வைகோ அவசர வேண்டுகோள்!
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு,
வணக்கம்.
துபையில் இருந்து 19 ஈழத்தமிழர்களைக் கொழும்புக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, ஏப்ரல் 2 ஆம் நாள், தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். தற்பொழுது மற்றொரு துயரம் நிகழ்ந்து உள்ளது. இன்று, (6.4.2013 ) அதிகாலையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் இருந்து, 120 ஈழத்தமிழர்கள், இரண்டு படகுகளில் ஆவுதிரேலியாவுக்குச் செல்ல முயன்று உள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையோர், பெண்கள், குழந்தைகள்.
தமிழகக் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல்கள் தொலைவில், அவர்கள் சென்ற
படகுகளில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, படகுகள் மூழ்கும் நிலையில்
இருப்பதாகத் தகவல் கிடைத்து உள்ளது. 120 பேர்களுடைய உயிருக்கும் ஆபத்து
ஏற்பட்டு உள்ளது.
இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையின் உதவியோடு, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தங்களை வேண்டுகிறேன்.
‘தாயகம்’ தலைமை நிலையம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.
06.04.2013
பிரதமருடன் வைகோ பேச்சு!
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன், மறுமலர்ச்சி
தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை11.30 மணி அளவில்,
தொலைபேசியில் பேசினார்.
தனிப்பட்ட முறையில் நான் உங்கள் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும்
வைத்து இருக்கின்றேன். ஆனால், அண்மைக்காலமாக உங்களை நான் மிகக் கடுமையாக
விமர்சித்து வருகிறேன். ஆயினும், நான் பேச முனைந்தபோது, உடனே நீங்கள் பேச
முன்வந்ததற்கு நன்றி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அங்கயற்கண்ணி என்ற ஒரு தமிழ்ப்பெண்ணை, சிங்கள
இராணும் கைது செய்தபோது, உங்களிடம் கோரிக்கை வைத்தேன். அவர் பாதுகாப்பாகத்
திரும்ப ஏற்பாடு செய்தீர்கள்.
இப்போது, துபையில் உள்ள 19 ஈழத்தமிழர்கள் கொழும்புக்கு
அனுப்பப்பட்டால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள். ஏற்கனவே,
இசைப்பிரியா என்ற தமிழ்ப்பெண், சிங்கள இராணுவத்தால் கொடூரமாகக்
கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள், சேனல் 4 தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகியது, தமிழ் மக்களை மிகவும் வேதனை அடையச் செய்து உள்ளது.
அதேபோன்றதொரு கொடூரம் இப்போது துபையில் உள்ள ஹரிணி என்ற பெண்ணுக்கும்
மற்றவர்களுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக உங்களை வேண்டுகிறேன்.
அவர்களை எக்காரணம் கொண்டும் கொழும்புக்கு அனுப்ப விடாமல் தடுத்து நிறுத்துங்கள் என்று வைகோ கேட்டுக்கொண்டார்.
‘நான் வெளிவிவகாரத்துறை மூலம் இதுகுறித்துக் கவனிக்கிறேன்’ என்றார் பிரதமர்.
அடுத்து, இன்று காலையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் இருந்து
சென்ற, 120 ஈழத்தமிழர்கள் பயணித்த படகு மூழ்கும் நிலையில் உள்ளது.
அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
தாம் உடனே கவனிப்பதாக, பிரதமர் உறுதி அளித்தார்.
‘தாயகம்’ தலைமை நிலையம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.
06.04.2013




0 Responses to பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு, வைகோ அவசர வேண்டுகோள்! - பிரதமருடன் வைகோ பேச்சு!