7 கோடிப்பேர் இருக்கிற தமிழ்நாட்டு அரசியலை வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிவிட்டு பக்கத்தில் இருக்கிற சில லட்சம் தமிழர்களுக்கு ஈழத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்பது கற்பனையே! தமிழ்நாட்டு அரசியலை சீர் செய்து தமிழர்கள் ஆட்சியுரிமை பெற்றாலேயே ஈழம் மலரும்! தமிழருக்கென்று நாடு புலரும்” என்று அரிமாவளவன் குறிப்பிட்டார்.
அறிஞர் குணா எழுதிய எண்ணியம் என்ற அரியதோர் ஆய்வுநூலின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் தமிழர் களத்தால் நடத்தப்பட்டது. அதில் தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தலைமையுரை ஆற்றினார்.
திராவிடம் என்ற நச்சு நாகத்தின் உச்சந்தலையில் ஓங்கி அடித்தவர் அறிஞர் குணாதான். சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூல்தான் தமிழக இளைஞர்கள் நடுவிலும் அறிஞர்கள் நடுவிலும் மிகப்பெரிய ஒரு மாற்றத்திற்கு வித்திட்டது.
இன்றைக்கு பல்லாயிரம் மாணவர்கள் ஈழ விடுதலை வேண்டி எழுந்து நிற்கிறார்கள் என்றால் இவரைப் போன்ற பலர் தங்களது உழைப்பையும் வாழ்வையும் ஈகத்துடன் வித்திட்டதுதான் காரணம். ஆனால், உழைக்காத ஒருசிலர் அறுவடைக்காக மட்டுமே இன்று களம் இறங்கியிருக்கிறார்கள்.
தமிழர்கள் பன்னெடுங்காலமாக மாயைகளில் மயங்கிக் கிடந்தவர்கள்! திரைக்கூத்துகளைப் பார்த்து முடங்கிக் கிடந்தவர்கள். விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் எம்ஜிஆர் படத்து கதாநாயகன் போல பார்த்தவர்களும் ரசித்தவர்களும் மேடையில் முழங்கியவர்களும் உண்டு.
ஈழத்தில் புலிகள் வெற்றி ஈட்டிய போதெல்லாம் ஏதோ ரசினிகாந்த் படத்தில் ஒரே அடியில் ஒன்பது பேர் விழுவது போலக் கற்பனை செய்து கொண்டு தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழ்த் தேசியம் பேசியவர்களும் கைதட்டிச், சீட்டியடித்து ஆர்ப்பரித்தனரே தவிர புலிகளின் போராட்டத்திற்கு ஆக்கபூர்வமாய்க் களமிறங்கவில்லை.
புலி ஆதரவு என்பது சிலருக்கு மேடை வசனங்களுக்கு உதவியது. சிலருக்கு வருமானத்திற்கு உதவியது. பன்னாட்டுக் கூட்டுப்படைகள் ஈழத்தில் புலிகளுக்கு எதிராக வரலாறு காணாத ஒரு போரைத் தொடுத்திருந்த போதும்கூட தமிழக அரசியல்வாதிகள் சிலர் “விடுதலைப் புலிகள் முறியடித்துக் காட்டுவார்கள்” என்று கற்பனைகளை விற்றுக் கொண்டு இருந்தார்கள்.
கிளிநொச்சி விழுந்த போதும் எதிர்பார்ப்புகளை இங்கே எகிற வைத்தார்கள். அப்படிப்பட்ட வசன வணிகர்களைத் தான் ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் நம்பினார்கள்.
இறுதியில் முள்ளிவாய்க்கால் குருதியில் தோய்ந்து பல்லாயிரம் தமிழ் மக்கள் மடிந்தபோதுதான் புலிகளும் பிரபாகரனும் எப்படித் தனிமையில் விடப்பட்டனர் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் புரிந்தது.
அந்தக் குழந்தைகளும், பெண்களும், அப்பாவிகளும் சீரழிக்கப்பட்டு சிதைந்ததை பார்வையாளர்களாக பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை.
இந்தியாவில் 10 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். அதில் 7 கோடிப் பேர் தமிழகத்தில் இருக்கிறோம். ஆனால் தமிழகமோ ஆரியம் திராவிடம் என்ற வந்தேறிக் கொள்கைகளுக்கு அடிமைப்பட்டு ஆட்சியுரிமை இழந்து கிடக்கிறது.
48 பேர் வாழ்கிற பிற்காரித் தீவுகள் ஒரு நாடாக இருக்கிறது.
900 பேரைக் கொண்ட வத்திக்கானை ஐ.நா. அவை ஒரு நாடாக மதிக்கிறது.
72 லட்சம் பேர் இருக்கிற இஸ்ரேல் உலகின் வலிமையான ஒரு நாடு.
12 கோடித் தமிழர்கள் இருந்தும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை.
நாடு இல்லாத காரணத்தால்தான் ஈழத்தில் 3 லட்சம் மக்களை இழந்தோம். இன்னும் பல்லாயிரம் மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் சிக்கித் தவிக்கும்போது மீட்க முடியாமல் இருக்கிறோம்.
நமது மீனவர்களை சிங்களக் காடைப்படைகள் சுட்டு வீழ்த்தும்போது சும்மா இருக்கிறோம்.
தமிழர்களின் பல்வேறு உரிமைகள் நசுக்கப்படும்போது ஏன்? எதற்கு? என்று கேட்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
7 கோடிப்பேர் இருக்கிற தமிழ்நாட்டு அரசியலை வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிவிட்டு பக்கத்தில் இருக்கிற சில லட்சம் தமிழர்களுக்கு ஈழத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்பதும் கற்பனையே.
தமிழ்நாட்டு அரசியலை சீர் செய்து தமிழர்கள் ஆட்சியுரிமை பெற்றாலேயே ஈழம் மலரும்! தமிழருக்கென்று நாடு புலரும்” என்று அரிமாவளவன் குறிப்பிட்டார்.



0 Responses to ஈழ விடுதலைக்குத் தமிழகமே திறவுகோல்! - அரிமாவளவன்