Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தம்மைத்தாமே ஆளுகை செய்யும் தகைமையும் ஆளுகை செய்யத் தேவையான அனைத்து புவியியல்சார் தகைமைகளையும் தன்னகத்தே கொண்டு இலங்கைத் தீவில் வாழ்வீட்டிய எம் முன்னைத் தமிழினம் முதன் முதலில் ஐரோப்பியரிடம் தனது ஆட்சி இறைமை முழுவதையும் இழந்து நின்றதுடன்,

இறுதியில் பிரித்தானிய வெளியேற்றத்தின்போது ஒட்டுமொத்தத் தமிழினமும் சிங்கள ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்கப்பட்டது.

அன்று தொடக்கம் இன்றுவரை அந்த அடிமைநிலையிலிருந்து விடுபடவும் இழந்துபோன தம் இறைமையை வென்று தம்மைத்தாமே ஆளும் ஒரு பொற்காலத்தைத் தேடியும் தமிழினம் தம்மாலான அனைத்துப் பொறிமுறைகளின் ஊடாகவும் உலக நியதிகளுக்கு அமைவாக போர்தொடுத்து இன்றுவரை இழந்தவற்றை மீளப்பெறமுடியாமல் தோற்றுப்போன ஒரு துர்ப்பாக்கிய இனமாகவே கவலைகொள்கிறது.

தமிழ் தேசிய இனமானது தன்னுடைய இருப்புக்காகவும் உயிர் வாழ்தலுக்காகவும் இன்னுமோர் இனத்தின் இருப்பைச் சுரண்டவோ, அல்லது அவர்களின் உயிர்வாழ்தலைச் சிதைக்கவோ எண்ணாதபோதிலும் காலத்திற்குக்காலம் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் சிங்கள ஆட்சியாளர்கள் எம்மினத்தை இல்லாதொழிக்கவும் எமது பூர்வீக அடையாளங்களை மறுத்து அதில் சிங்கள பௌத்த முத்திரையைப் பொறித்து இலங்கைத்தீவு தனியே சிங்கள பௌத்தநாடு என்பதை நிலைநாட்டுவதற்காய் நன்கு திட்டமிட்டு மேற்கொண்டுவந்த தமிழின அழிப்புகளின் தொடர்ச்சியாகவே 2009 மே 18 இலும் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலம் அமைகின்றது.

மாவட்டங்கள் பிரதேசங்கள், கிராமங்கள் என தமிழர் தாயகப் பகுதியெங்கும் கூட்டாகவும் தனியாகவும் படுகொலை செய்யப்பட்ட தமிழினம் 2009ல் அதி உச்ச அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு குறித்த ஆண்டிலே மட்டும் 140000க்கு மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டதையும் அவர்களின் உடமைகள் சூறையாடப்பட்டதினதும் அடையாளமாகவே மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளாக தமிழ் மக்களால் உலகெங்கும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

காலத்துக்குகாலம் மேற்குலக நாடுகளின் இராசதந்திர இலங்கை வருகையும் அவர்களின் நவீன உலகியல் வளர்ச்சியின் ஊடான ஆலோசனைகளும் ஆயுத விநியோகமும் மனிதநேயம் தொடர்பான ஒருதலைப்பட்ச அறிவுரைகளும் வெறுமனே சிங்கள இனத்தை மாத்திரமே பலம் கொள்ள வைத்திருக்கிறது.

தமிழ் தேசிய இனத்தின் உண்மை நிலைகளை மிகத் துல்லியமாக அறிந்திருந்தும் ஏனோ உலக ஆட்சிப்பீடங்களை வரையறுத்துக் கொள்கின்ற வல்லரசுகளின் கருணைக் கண் அல்லது நீலிக் கண் திறக்கப்படவில்லை. இதனால் இறுக மூடியிருக்கும் இவ் உலக நிலைதான் சிங்களம் இன்றுவரை எம்மினத்தைச் சரண்டவும் அடிமைகொள்ளவும் சாதகமாக இருந்துவருகிறது.

வலி தணியாத தொடர் அவலங்களைத் தமிழினம் மீது காலத்துக்குகாலம் சிங்கள இனவாத அரசு புரிந்து வருகின்ற இனவன்முறைகளின் பதிவுகள் பல ஊடகங்களின் வாயிலாகவும் உலகப் பரப்பெங்கும் அறியப்படுகின்ற வேளையிலும் மேலும் பல விடயங்களை உலகு அறிய வேண்டுமென கால நேரங்களையும் கடினங்களையும் பொருட்படுத்தாமல் இன்றுவரை உழைத்துக் கொண்டிருக்கம் தமிழ் மற்றும் பிறமொழி ஆவலர்களின் ஆவணப் பதிவுகளையும் கணக்கில் எடுக்காத் தன்மையே நீண்டு செல்கிறது.

இன்னும் தமிழர் தாயகப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திறந்தவெளிச் சிறையில் சிக்குண்டு அனைத்து அடிப்படைச் சுதந்திரங்களும் மறுக்கப்பட்ட மக்களாகவே தமிழினம் வாழ்ந்திருக்க

அவ் இனத்தை வெற்றிகொண்ட மமதையினை தமிழினப் பகுதியிலே விழாவாக முன்னெடுக்கின்றது சிங்கள அரசு.
கல்வி, ஆய்வு தர்க்கரீதியாக சகலபுலத்திலும் மேன்மைகொணடிருந்த எம் இனமும் அவ் இனத்தின் அறிவியல் பலமும் இன்று உலகம் எல்லாம் பரவி அகதி என்னும் மூன்று எழுத்தினுள் புதையுண்டு போய்க்கிடக்கும் இவ்வேளையில் எமது அறிவியல் கூர்மையின் ஊடாக ஜனநாயக வழிமுறையிலான பொறிமுறைகளைத் தேர்ந்தெடுத்து தமிழின இருப்புக்காக உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதுவே தாயகத்தில் வாழ்ந்துவரும் எம் உறவுகளின் எதிர்பார்ப்பும் ஏக்கமும் ஆகும்.

தமிழின அழிப்பு நினைவு நாளில் உலகெங்கும் பரந்துவாழும் தமிழராகிய நாம் கொன்றொழிக்கப்பட்ட எம் உறவுகளுக்காய் வணக்கம் செலுத்தும் இவ்வேளையில் எங்கள் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மீண்டும் உலக நீதியின் முன் கையளிக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவுவரையான இதுவரை நட்களும் கண்டுகொள்ளாது மௌனித்திருக்கும் எங்கள் வலிகளை இனியாயினும் சீர்தூக்கிப்பார்த்து

நீதி வழங்கவேண்டுமென வேண்டுகிறோம்.
- சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழினப் படுகோலைக்கான தண்டனை வழங்கப்பட
வேண்டும்.திறந்தவெளிச் சிறையாக இராணுவ மயமாக்கலுக்குள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சர்வதேச கண்காணிப்புப் பொறிமுறையினை ஏற்படுத்த வேண்டும்.

- தமிழர் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் வெளியேற்றப்படுவதுடன் மக்களின் நாளாந்த செயற்பாடுகளில் இராணுவத் தலையீட்டை இல்லாது செய்தல் வேண்டும்.- தமிழர் தாயகப் பகுதிகளில் அபிவிருத்திசார் பணிகளையும் ஜீவனோபாய ஆதாரச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து தமிழ் மக்களின் உண்மைத் தன்மைகளைக் கண்டறியும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் செயற்பணிக்கான தடயை நீக்கி செயற்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.

- மிக நீண்ட காலமாக விசாரணையின்றி சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்தல் வேண்டும்.

- ஆரம்பகாலம் தொட்டு மெல்லமெல்ல உருவெடுத்து 2009ம் ஆண்டுக்கு பின்னர் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழர் பூர்வீக நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பையும் கடல்வள ஆக்கிரமிப்பையும் நிறுத்தவேண்டும்.

- தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து காணாமல்போகச் செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு நீதி வழங்கவேண்டும்.
- திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனச்சுத்திகரிப்பையும் கலாச்சார சீரழிவுகளையும் தடுத்துநிறுத்த வேண்டும்.

- தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளில் அரைகுறைத் தீர்வுகளைத் தவிர்த்து அவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

- திட்டமிடப்பட்ட வகையில் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஊடகங்கள்மீதான
தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் நிறுத்த ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

- தமிழர் தாயகப் பகுதிகளில் மனித உரிமை மற்றும் ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்தி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் வேண்டும்.

- இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்ட, சரணடைந்தவர்களின் முழுமையான விபரங்களை வெளிப்படுத்:துவதுடன் அவர்களின் விடுதலையை உறுதிசெய்ய வேண்டும்.

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு- ஜெர்மனி

0 Responses to தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18!- வலி தணியாத தொடர் அவலங்களின் மீள்பார்வை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com