ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் அணிக்கு வழங்கப்பட்ட ஹோட்டலை விட்டு தனியே மும்பை நட்சத்திர ஹோட்டல் ஒன்றை பதிவு செய்து அங்கு தங்கியிருந்தார்.
அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தி லேப்டாப், பணம், கைத்தொலைபேசி, ஐபேட் என பல சாதனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் மலையாளம், ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்த டைரி, மற்றும் பணத்தொகையையும் கைப்பற்றியுள்ளனர். மற்ற இரு கிரிகெட் வீரர்கள் வீடுகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
மும்பை போலீஸ் கமிஷனர் இது குறித்து பேசுகையில், "ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக ரமேஷ் வியாஸ் என்கிற தரகரை மே 14ம் திகதி கைது செய்தோம். அவரிடம் இருந்து 29 மொபைல் போன்கள், 18 சிம் கார்டுகள் ஒரு லேப்டாப் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் 5 தரகர்களை கைது செய்தோம். இன்று மேலும் ஒருவரை கைது செய்து உள்ளோம். மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீசாந்த் தனியாக மும்பை நட்சத்திர ஹோட்டலில் அரை எடுத்து தங்கி இருந்துள்ளார். அணி வீரர்கள் தங்குவதற்காக அந்த அறை எடுக்கப்படவில்லை. அந்த அறையில் இருந்து லேப்டாப், ஐபேட், பணம் மற்றும் சில டைரிகள் கைப்பற்றப்பட்டன. டைரியில் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் அவர் கைப்பட எழுதியுள்ளார்.
ஸ்ரீ சாந்தும் அவருடைய நண்பர்களும் சூதாட்ட தரகருமான ஜுஜுவும், மே 13ம் திகதி இந்த அறையை எடுத்துள்ளனர். கண்காணிப்புக் கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அவர்கள் மூவரும், தவிர தரகர்களும் மே 20ம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளார்கள். ஹோட்டலில் கைப்பற்றிய பொருட்கள் மிக முக்கியமானவை. இவற்றின் மூலம் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்." என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் டெல்லி போலீசார் இந்த விவகாரம் மீது மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தங்களுடைய அதிகாரிகளை அகமதாபாத், கொல்கத்தா மும்பை மற்றும் ஹைதராபாத் அனுப்பியுள்ளனர். மேலும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக போலீசார் மேலும் சில இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதே நேரத்தில் வேறு சில ஐபிஎல் போட்டிகளிலும் சூதாட்டம் நடந்துள்ளது என்றும், அதற்கான ஆதாரங்களை சேகரிக்க தாமதம் ஏற்படுகிறது என்றும், அப்படி ஆதாரங்கள் கிடைத்து விட்டால் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
நடைபெற்று கொண்டு இருக்கும் 6வது ஐ பி எல் 20 ஓவர் போட்டிகளில், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உட்பட மூன்று வீரர்கள் பிடிபட்டுள்ளனர். அதோடு 14 இடைத் தரகர்களையும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதேவேளை ஐபிஎல் சூதாட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட இந்தியாவின் ஏனைய முக்கிய வீரர்கள் அனைவரும் தொடர்ந்து பேச மறுத்துவருவதற்கு ஊடகங்கள் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளன. டிராகுல் டிராவிட் மாத்திரமே சூதாட்டத்தை எதிர்த்து வெளிப்படையாக குரல் கொடுத்திருப்பதாகவும் ஏனைய வீரர்கள் இது தொடர்பில் அமைதியாக இருப்பது இன்னமும் சந்தேகத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன எனவும் குறித்த ஐபிஎல் சர்ச்சையின் பின்னர் நடைபெறும் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் போதும், தவறவிடப்படும் கேட்ச், ரன் அவுட், வெற்றி பெறும் தருணங்கள் என அனைத்தும் மேட்ச்-பிக்ஸிங் கண்ணோட்டத்திலேயே ரசிகர்களால் பார்க்கப்படுவதாகவும் ஊடகங்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளன.
0 Responses to ஐபிஎல் சூதாட்டம் : ஸ்ரீசாந்த் தங்கியிருந்த தனியார் 5 ஸ்டார் ஹோட்டல் அறையில் பல இலட்சம் மீட்பு?