முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.
விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
கடந்த புதன்கிழமை (15-05-2013) அன்று தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதோடு பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளனர்.
எமது மக்களின் தன்னாட்சி உரிமையினையும் தேசத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் அவர்களின் கண்ணியம்மிகு வாழ்வினையும் பாதுகாப்பதற்காக இராசதந்திரம் எனும் ஆயுதத்தினை எமது கைகளில் ஏந்தக் கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவதற்காகவே இன்று இங்கு நாம் கூடியிருக்கின்றோம் என தொடக்கநாள் அங்குராப்பண நிகழ்வுரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரையில் தெரிவித்ததாவது :
எங்களது புலமைகளினையும் பெருமைகளினையும் நாங்கள் கொண்டிருக்கும் ஞானத்தினையும் பறைசாற்றுவதற்காக இங்குநாம் வரவில்லை. ஓர் உன்னதமான கடமையினை நிறைவேற்றுவதற்கான வழிகளையும் வடிவங்களினையும் மூலோபாயங்களினையும் கண்டறியவே நாம் இன்று இங்கு கூடியுள்ளோம்.
எங்களது குறிக்கோள் தர்மத்தின்பாற் பட்டதாக இருந்தும், வஞ்சனையான இராசதந்திரங்களினால் எம்மவர்கள் களத்தினில் நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.
எமது மக்களின் தன்னாட்சி உரிமையினையும் தேசத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் அவர்களின் கண்ணியம்மிகு வாழ்வினையும் பாதுகாப்பதற்காக இராசதந்திரம் எனும் ஆயுதத்தினை எமது கைகளில் ஏந்தக் கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவதற்காகவே இன்று இங்கு நாம் கூடியிருக்கின்றோம்.
எங்களுக்கு, எமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்ட நீதியினை, பறிக்கப்பட்ட உயிர்வாழ்வதற்கான உரிமையினை, இனத்தின் தன்னாட்சிக்கான இறைமையினை மீண்டும் பெற்றுவலுவூட்டி செழுமைப்படுத்துவதற்கு ஏதுவான வாய்ப்புகளினை சர்வதேசத்தின் நீதி நெறிமுறைகளுக்குள்ளும், அவ் நீதிநெறிமுறைகளினை வகுத்துள்ள அரசியல் பொறிமுறையின் சட்டகங்களுக்குள்ளும் தேடியறிவது எமது முதன்மையாக பணியாக உள்ளது.
எமது உடன்பிறப்புக்கள், இளவல்களின் அர்ப்பணிப்பினையும், அச்சமில்லா பெருவீரத்தினையும் தளராத உறுதியினையும் மீறி போர்க்களத்தில் நாம் வஞ்சிக்கப்பட்டோம். இவ்விடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய விடயத்தினை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 'இந்தஉலகம் தர்மத்தின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்கள் சார்ந்த அச்சிலேயே சுழல்கின்றது'.
இங்கு கூடியுள்ள நாம் சர்வதேசத்தின் நலன் சார் பூகோள அரசியலுக்கும் எமது தேசிய தாயகத்தினதும் மக்களினதும் நலன்களுக்குமிடையில் காணக்கூடிய ஒத்திசைவான தன்மைகளினையும் ஒருங்கிணையக்கூடிய புள்ளிகளினையும் கண்டறிவோம்.
தமிழ்மக்களுடைய வன்மையான சக்தி தற்போது எம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருந்தாலும் எங்களிடமுள்ள மென்சக்தியினை இராசதந்திரவழிமுறைகளுடாக ஆளுமையுடன் பிரயோகிப்போம்.
தற்போது உருவாகியுள்ள சீனா, இந்தியா, சிறீலங்கா என்ற முத்தரப்புகட்டமைப்பில் உலகத் தமிழர்களினையும் நான்காவது கட்டகமாக இணைத்து தமிழரின் தேசியநலன்களினையும் பூகோள, பிராந்திய நிலையில் உறுதிப்படுத்துவோம்.
நாம் எங்கள் நிலையினை புறநிலையிலிருந்து அகநிலைக்கு மாற்றும் போது எதிர்கால பூகோள அரசியலில் நிகழ்ச்சித்திட்டங்கள் யாவும் தமிழ்மக்களுக்கு சார்பாக மாறும் நிலைதோன்றும்.
மேன்மைக்குரிய விருந்தினர்களே! நாங்கள் இங்கு புலமையாளர்களாக மட்டுமன்றி செயற்பாட்டாளர்களாகவும் இணைந்துள்ளோம். எங்களுடைய கல்விப்புலமையும் ஞானமும் அர்ப்பணிப்பும் நிச்சயமாக தமிழர் தேசத்தின் விரைவான பிறப்புக்கு பங்களிக்கும். முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ்மக்களினையும் நினைவில் நிறுத்தியவாறு திடசங்கற்பத்துடன் கூடிய அர்ப்பணிப்புடனும், தளராத உறுதியுடனும் முள்ளிவாய்கால் அழுகுரல்களுக்கு காணிக்கையாக இன்று இவ் மாநாட்டினை தொடக்கிவைக்கின்றேன்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது உரை அமைந்திருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகத் தமிழர்களின் முரறைவாக தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே-18 நாள் அமெரிக்க நேரம் மதியம் 12மணிக்கு முரசறையப்படவிருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
0 Responses to தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது!