வன்னியில் சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்துவிட்டு வன்னியைக் கைப்பற்றிய சிங்கள இராணுவம் தற்போது அந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கே தடை விதித்துள்ளது.
ஆயினும் சிறிலங்கா படையினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பீடாதிபதிகள்,
விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தமிழர்களின் போராட்டம் வெற்றிகொள்ளப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தம்பட்டம் அடித்த தினத்தை தமிழ் மக்கள் துக்க தினமாகவும் வன்னியில் சிறிலங்காப் படைகளால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கான அஞ்சலி செலுத்தும் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்று இன்றும் அஞ்சலி செலுத்தப்படுமென்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அஞ்சலி நிகழ்வு ஒரு அமைதியான, இறந்த தமது உறவுகளை நினைந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக மாத்திரமே அமையுமென்றும் இதனை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைவிட யாழ். குடாநாட்டில் சில பொது இடங்கள் மற்றும் வீடுகளிலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
யாழ். குடாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள பிரதேச சபைகளிலும் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் பிரதேச சபை, நகர சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவான பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வவுனியாவில், வவுனியா நகர சபை மண்டபத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளதாக வவுனியா நகர சபையின் உப தவிசாளர் எம்.ரதன் தெரிவித்துள்ளார்.
இந்த அஞ்சலி நிகழ்வு வருடாந்தம் நடைபெறும் நிகழ்வு என்றும் இந்த நிகழ்வில் எவரும் கலந்துகொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியாலும் உலக நாடுகள் சிலவற்றின் ஒத்துழைப்போடும் அழிக்கப்பட்ட இந்த நாளை தமிழ் மக்கள் நினைவுகூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய அனுமதியை வழங்கவில்லை.
இதனால் மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே இந்த அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எது வந்தாலும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுமென்று தமிழர் தாயத்திலுள்ள மக்கள் உறுதியெடுத்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் வரை துரத்திச் செல்லப்பட்டு கொன்று குவிக்கப்பட்ட தினத்தை தமிழ் மக்கள் நினைவுகூர்வதை தடுக்கும் நோக்கத்துடன் சிறிலங்கா இராணுவம் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. மக்களை அச்சுறுத்துவதன் மூலம் அஞ்சலி நிகழ்வுகளைக் குழப்பும் வகையில் படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Responses to உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகமெங்கும் அஞ்சலி