சரப்ஜித் சிங் சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பில், லாகூர் கோத் லாக்பாத் சிறைச்சாலையின் மூன்று உயரதிகாரிகளை, பாகிஸ்தான் பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சின் செயலாளர் பதவிநீக்கம் செய்துள்ளார்.
கோத் லாக்பாத் சிறையின் உயர் கண்காணிப்பாளர் மோஷின் ரஃபீக், மேலதிக கண்காணிப்பாளர் இஸ்தியாக் கில், துணை கண்காணிப்பாளர் குலம் சர்வார் சும்ரா ஆகியோர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவெளை சரப்ஜித் சிங் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் நேர்மையான நீதி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1990ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கருதப்பட்டு கைது செய்யப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் கடந்த 22 வருடங்களாக லாகூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட போதும், பொதுமன்னிப்பு வழங்குமாறு கருனை மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் மரணமடைந்தார்.
இந்தியாவில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், பழிவாங்கும் முகமாகவும் பாகிஸ்தான் சிறைக்கைதிகளால் சரப்ஜித் சிங் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
0 Responses to சரப்ஜித் தாக்குதல் விவகாரத்தில் லாகூர் சிறை கண்காணிப்பாளர்கள் மூவர் பணி இடைநீக்கம்