Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர், தமரா குணநாயகம் அவர்கள் ஓர் செவ்வியில் 'ஐ. நா. மனித உரிமை சபையினால்  இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது, ஓர் உள்நாட்டு விசாரணைகளை சர்வதேசம் கண்காணிப்பதற்கானது எனக் கூறியுள்ளார்.

ஐ. நா. மனித உரிமை சபையினால் இலங்கை மீது கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் என்பது, பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
இவ் கண்டனத் தீர்மானம், ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்திற்கு, இலங்கையினால்
மேற்கொள்ளப்படவிருக்கும் உள்நாட்டு விசாரணைகளை கண்காணிப்பதற்கான அதிகாரத்தை கொடுத்துள்ளது.
இத் தீர்மானத்தின் அடிப்படையில், ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் தனது குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு, இலங்கை அரசிடம் முன்வைக்க முடியும். அத்துடன், கொழும்பில் தமது காரியாலயம் ஒன்றை திறப்பதற்கான வேண்டுகோளை முன் வைப்பதற்கு வழிவகுத்துள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை இவரது காரியாலயம் உள்நாட்டிலிருந்தே கண்காணிப்பதற்கு வழிவகுக்கிறது.

இதேவேளை ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் முழு அதிகாரத்துடன் இலங்கைக்கு ஒரு முறை அல்ல பல முறை விஜயம் செய்வதற்கும் வழிவகுத்துள்ளது. இவரது முதலாவது விஜயம் கூடிய விரைவில் இடம்பெறும்.

ஆனால்…. மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையுடைய இலங்கைக்கான விஜயம் என்பது, முன்னைய ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபாருடைய இலங்கை விஜயம் போல் அல்லாது, மனித உரிமைச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கண்காணிப்பு அதிகாரத்தை அடிப்படைய கொண்டதாகவே அமையும். 

இவரது விஜயத்தை மறுக்கவோ அல்லாது காலநேரத்தை இழுத்தடிக்க இலங்கை முனைந்தால், அதன் பெறுபெறுகளை அவர்கள் மேலும் அனுபவிக்க வேண்டிய சங்கடங்களை உருவாக்கும். இவை மட்டுமல்லாது  இலங்கை மீதான இவ் கண்டனத் தீர்மானம் பல சூத்திரங்கள் அடக்கியதே.
விடயங்களை அலசி ஆராய முடியாதவர்கள, குருட்டுத்தனமாக இவ்விடயங்களை தீர்மானத்தில் காணவில்லை என்ற விதண்டாவாதங்களை முன்வைப்போருக்கு ஒர் உதராணத்தை இங்கு கூற முடியும்.

கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி, ஐ. நா. மனித உரிமை ஆணையாளரினால் இலங்கை பற்றி வெளியிட்ட அறிக்கையின் பின்ணனியை பலர் அறிவது, அவ் அறிக்கையை பாராட்டியது மட்டுமல்லாது அதை தமது பிராச்சார வேலைகளுக்கும் பாவித்தனர்.

அதாவது கடந்த வருடம், மார்ச் மாதம், ஐ. நா. மனித உரிமை சபையினால் நிறைவேற்றபட்ட இலங்கை மீதான கண்டன தீர்மானமே, இவ் அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் வெளியிடுவதற்கு வழிவகுத்தது. இல்லையேல் இவ் அறிக்கை ஒரு பொழுதும் வெளியாகியிருக்க முடியாது.

இது போன்றே கண்டன தீர்மானம் என்பது, பல நெழிவு சுழிவுகளை உள்ளடக்கிய சூத்திரங்களை கொண்டது என்பதை விதண்டாவாதம் பேசுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையும் கண்டன தீர்மானமும்
 
இவ் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே, மனித உரிமை சபையில் உரையாற்றிய ஜனதிபதி ராஜபக்சவின் பிரதிநிதி, தாம் இவ் பிரேரணையை ஏற்க மாட்டோம் என்பதை உடனேயே கூறிவிட்டார்.

இதேவேளை இலங்கை அரசு, 12,000 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு செய்துள்ளதாகவும், வடமாகாணத்தின் பொருளாதார 27 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். உண்மையில் இவை யாவும் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றுவதற்கான புள்ளி விபரங்களே அல்லாது இவற்றில் எந்தவித உண்மைகளும் இல்லை.

வடக்கின் பொருளாதார வளர்ச்சியில் பங்குகொள்பவர்களும் பயனடைபவர்களும் தெற்கை சார்ந்த சிங்கள வர்த்தகர்களே. இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாக்காரர்களை கவர்வதற்காக, வேறுபட்ட பிரச்சார வேலைகளை இலங்கை அரசு பயன்படுத்துகிறது. பாதிப்பிற்கு ஆளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் மக்களில் பெரும்பான்மையானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழுகிறார்கள்.

முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு என்பது, சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றுவதற்கான இன்னுமொரு கபடமான செயற்பாடும் புள்ளி விபரங்களும். இலங்கை அரசினால் தடுப்புக்காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் யாவரும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பிலேயே தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மிக வேடிக்கையான விடயம் என்னவெனில், 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையின் இராணுவத்திடம், தமது குடும்ப அங்கத்தவர்களின் முன்னிலையில் சரணடைந்த பெரும்பான்மையோனேர் பற்றிய விபரங்கள் ஒன்றையும் தமக்கு தெரியாதுவென  இலங்கை அரசு கை விரித்துள்ளது.

ஆனால் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட முறையை பார்க்கும் எவரும், சரணடைந்த பெரும்பான்மையான போராளிகளுக்கு என்ன நடத்திருக்கலாம் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.

ஆகையால் 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முதுமொழிக்கு அமைய - இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள கண்டனத் தீர்மானத்தை, இலங்கை அரசுடன் கைகோர்த்து நின்று எதிர்ப்பதை தவிர்த்து, அதில் உள்ள நன்மையான விடயங்களை, சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு சர்வதேசத்துடன் இணைந்து நின்று, இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதே உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரது கடமையாகும்.

கண்டனத் தீர்மானமும் தமிழரும்

இலங்கை மீதான கண்டனத் தீர்மானம் பற்றி நாம் ஆராயும் வேளையில் சில ஈழத் தமிழர் உலகத் தமிழரிடையே, மூன்று முக்கிய விடயங்கள் இவ் தீர்மானத்தில் இணைக்கப்படாததையிட்டு மனக்கசப்பு உள்ளது.

இதில் விடயங்கள் விளங்கிய சிலர் யதார்த்தங்களை புரிந்து கொண்டும், தமது சுயநல அரசியலுக்காக, மற்றவர்களை பிழையான வழிகளில் நகர்த்துவதை நாம் காண்கின்றோம். இவர்கள் எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விடயங்களாவன -
சர்வதேச சுதந்திர விசாரணை, பொருளாதார தடை அடுத்து சுதந்திரத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு. இவ் கண்டனத் தீர்மானத்தை முன்னின்று நடத்தி வரும் உலக வல்லரசான அமெரிக்கா, அடுத்த கட்ட கண்டனத் தீர்மானத்தில், தாம்; சர்வதேச சுதந்திர விசாரணையை முன்வைக்கவிருப்பதாக ஏற்கனவே வெளிப்படையாக கூறிவிட்டார்கள்.

ஆனால் பொருளாதார தடை, சுதந்திரத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஆகிய இரு விடயங்களும,; ஐ.நா.மனித உரிமை சபையினால் எந்த நாடு மீதும் நிறைவேற்றும் அதிகாரம,; இச் சபைக்கு கிடையாது.

ஆகையால், பொருளாதார தடை, சுதந்திரத்திற்கான சர்வசன வாக்கெடுப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும,; இவ் விடங்களை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் பொதுச் சபை அல்லது ஐ.நா.வின் பாதுகாப்புச்சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எது என்னவானலும், நாம் ஒன்றை மட்டும் மனதில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

ஐ.நா. பொதுச்சபையில் 193 நாடுகளும், ஐ. நா. பாதுகாப்பு சபையில் வீற்ரோ அதிகாரத்துடன் சீனா, ராஷ்யா ஆகிய நாடுகளும் உள்ளன. ஆகையால் இவ்விரு சபைகளிலும் ஈழத் தமிழர் விடயத்தை தற்போதைய நிலையில் கவனத்தில் கொள்வார்களா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

மனித உரிமை சபையினால், தமது அதிகாரத்திற்கு உட்பட்ட சகல விடயங்களும் உள்ளடக்கிய  இலங்கை மீதான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை யாவற்றையும்  இலங்கை தொடர்ந்து அலட்சியம் செய்யும் கட்டத்தில், நிட்சயம் ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு சபை ஆகியவை அக்கறை கொள்ள ஆரம்பிக்கும் என்பதே யாதார்தம்.

இதற்கு ஈழத் தமிழர் உலகத் தமிழர், ஒருங்கிணைந்த ஒற்றுமையான குரலுடன் வேலைத்திட்டங்கள் அமைவது மிக மிக அவசியம். நாம் இவற்றை செய்யத் தவறிவிட்டு, சர்வதேச சமுதாயத்தையும், ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து குறை சொல்வதினால், இலங்கைதீவில் தமிழர் தாயாகபூமியில் வாழும் மக்களுக்கு எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் புலம்பெயர் தேசத்தில் புதிது புதிதாக முளைத்துள்ள தமிழ் மின் மினி அமைப்புக்களின் பிரமுகர்கள் பொய் பிரட்டுகள் சொல்லி தம்மை வளர்பதற்கும், மக்களை மடையர்களாக்குவதற்கு மட்டுமே இவை பயன்படும்;.
புலம்பெயர் தேசத்தில் தமிழ் அமைப்புகளிடையே ஒற்றுமை என்பது மிக தூரத்திலேயே காணப்படுவதற்கு காரணங்கள் பல! இவ்வேளையில், தமிழ்நாட்டில் ‘துக்ளக்‘ பத்திரிகையின் ஆசிரியர் 1980களில் ஒரு கேள்விக்கு எழுதியிருந்த பதில் தான் நினைவுக்கு வருகிறது.

கேள்வி - இந்தியாவில் அரசியல் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம்? பதில் - இந்தியாவின் உத்தியோக மொழியாக இந்தியை வைத்தால,; தமிழ், மலையாளம், தெலுக்கு, மராட்டி, பெங்காலி போன்ற மற்றைய மொழி பேசுவோர் எதிர்ப்பார்கள் ஆகையால் ‘அராபிய‘ மொழியை இந்தியாவின் உத்தியோக மொழியாக வைப்பதே சிறந்தது.

இதேவேளை, பெரும்பான்மையானோருக்கு தகமை இருந்ததோ இல்லையோ, தாம் தலைமை வகிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆகையால், ஒருவரை மட்டும் பிரதமராக நியமித்து விட்டு, மற்றைய யாவரையும் உதவி பிரதமராக நியமித்தால், இந்தியாவின் அரசியல் பிரச்சினை தீர்ந்துவிடுமென பதில் கூறியிருந்தார்.

நான், துக்ளக் சஞ்சிகையுடைனையதோ அல்லது ஆசிரியர் சோ வினுடைய பிரியன் அல்ல. இதே பிரச்சினையை தான் நாம் புலம்பெயர் தேசத்து தமிழ் அமைப்புகளிடையே காணுகிறோம். இவர்கள் யாவரையும் ஒன்றுமைப் படுத்துவதற்கு, சோவின் ஆலோசனை தான் சிறந்த வழியோ தெரியவில்லை.

வெட்கம், எமது உடன் பிறவா சகோதர சகோதரிகள் தமது உயிரை பணயம் வைத்து எமது தயாக பூமியிலும், தடுப்பு காவலிலும், முகாம்களிலும் வாழ்கின்ற வேளையில, இவர்கள் பதவி, பணத்திற்கு போட்டி போடுகிறார்கள். இவர்கள் தான் தமிழீழ மக்களின் விமோசனத்திற்கு வேலை செய்பவர்களா?

பொருளாதார தடையும் அகதி விவகாரமும்
 
பொருளாதார தடை, பகிஷ்கரிப்பு என்பவை இரு வேறுபட்ட விடயங்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டு;. ஓரு நாட்டின் மீதான பொருளாளதார தடையை, ஐக்கிய நாடுகள் சபையின் முதுகெலும்பான பாதுகாப்பு சபையினலேயே கொண்டுவர முடியும்.

அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கு நிகராக, நாடுகளின் அங்கத்துவத்தை கொண்ட ஐரோப்பியா யூனியன், பொதுநாலவாய அமைப்பு போன்றவற்றினாலும் கொண்டுவர முடியும். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்படும் பொருளாளதார தடையே உலகில் சகல நாடுகளும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் பகிஷ்கரிப்பை நடைமுறைபடுத்துவதற்கு உலகில் எந்த அமைப்பினுடைய அனுமதி, யாருக்கும் தேவை இல்லை. இவ்விடயத்தை ஒவ்வொரு பொருளின் பவனையாளர்களால் நடைமுறைப்படுத்த முடியும். உதாரணத்திற்கு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்பம். அதில் பெரிதாக நாடுகள் அங்கத்துவ வகிக்கவில்லை.
இவவேளையில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை சாத்வீக வழியில் முன்னின்று நடத்திய மாகத்மா காந்தி அவர்கள், பிரித்தானியா உற்பத்திப் பொருளான புடவையை பகிஷ்கரித்து, தாம் இந்தியாவில் தயாரித்த புடவையை மட்டுமே அணிந்தார். இவ் பகிஷ்கரிப்பில் மற்றைய இந்தியர்களும் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர்.

இந்தியா சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்கு சுபாஷ் சந்திரபோஸின் பங்கும் அளப்பரியது. ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை  இலங்கை தொடர்ந்து நடத்துவதற்கும், இறுதியில் வெற்றி பெறுவதற்கும் இலங்கையின் பொருளாதாரம் நன்கு வளர்ச்சி பெறுவதற்கு, புலம்பெயர் வாழ் தமிழர்கள், இலங்கையின் உற்பத்திப் பொருட்களை கோடிக் கணக்கில் இறக்குமதி செய்து உதவினார்கள் என்பதே உண்மை.

தற்போதைய நிலை இன்னும்; மோசமானது. புலம்பெயர் தேசங்களில் உள்ள பெரும்பாலான தமிழ் கடைகளுக்கு சென்று பார்த்தால், குறைந்தது 50 வீதத்திற்கு மேல், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களே காணப்படுகிறது. புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் உணவகங்களின் நிலையும் இதே.

இவற்றை இறக்குமதி செய்பவர்கள் யார்? இதன் பாவனையாளர்கள் யார்? இவர்கள் தான்  சர்வதேச சமுதாயமும், ஐக்கிய நாடுகள் சபையும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய முன்வருகிறார்கள் இல்லையென்று முதலைக் கண்ணீர் விடுபவர்களா? 2005ம் ஆண்டு, பிரான்ஸின் ஸ்ராஸ்பேக் நகரில் நடந்த ஓர் பொதுக்கூட்டத்தில் தயவு செய்து  இலங்கை உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரித்து, வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் குளிர், குடி பானங்களையும், உணவு வகைகளை வாங்கி பாவியுங்கள் எனக் கூறியிருந்தேன்.

அன்றைய கூட்டத்தை, ரி.ரி.என். தொலைகாட்சியினர் நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதனால் பகிஷ்கரிப்பு பற்றிய எனது உரையை பெரும்பான்மையான விற்பனை ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் உடன் அறிந்தார்கள். அவ்வளவு தான்….. இவ் வியாபரிகளில் பெரும்பான்மையானேர் என் மீது போர் கோடி தூக்கிவிட்டனர்.

எமது களஞ்சியங்களில் உள்ள ஆயிரங்கள் பெறுமதியான  இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு, கிருபாகரன் பணம் தருவாரா? என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். சிலர் இவர்கள் மீது பரிதாபப்பட்டு இவர்களது களஞ்சியங்களில் உள்ள பொருட்கள் விற்பனை செய்து முடிப்பதற்கு கால அவகாசம் கொடுப்போம் என்றனர்.

இன்று எத்தனை வருடங்கள்? அவ்வேளையில் வேறுசிலர் கூறினார்கள், இறக்குமதி செய்பவர்களும் அவர்களே, கடைகளுக்கு விநியோகிப்பவர்களும் அவர்களேயென இவர்கள் யார் என்பது இன்றும் எனக்கு புதிராகவே உள்ளது. தற்பொழுது  இலங்கை உற்பத்திப் பொருள்களின் இறக்குமதி முன்னைய விட பல மடங்கு கூடியுள்ளது.

இவற்றின் இறக்குமதியாளர், விற்பனையாளர், பாவனையாளர் இன்றும் இவற்றை பகிஷ்கரிப்பதற்கு முன்வரவில்லை. இதை யாராவது உணர்கிறீர்களா? புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ் மின் மினி அமைப்புக்களின் பிரமுகர்கள,; தலைவர்கள் இவ்விடயத்தில் என்ன செய்கிறார்கள்? ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை மீதான பொருளாதார தடைக்கான வேண்டுகோள் வைப்பதற்கு முன், நீங்கள் இலங்கையின் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரியுங்கள்.

இது தான் நீதி, இது தான் வழிமுறை. இலங்கை உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களும், விற்பனை செய்பவர்களும், பாவனையாளர்களும் ஒரு யதார்த்தத்தை உணர வேண்டும். இவ் உற்பத்திப் பொருட்கள் யாவும், உங்கள் சகோதர, சகோதரிகள் பெற்றோர், நண்பர்கள் ஆயிரக்கணக்கான உடன்பிறவா ஈழத் தமிழர்களை, ஈவிரக்கமின்றி படுகொலை செய்த, முகாம்களிலும,; தடுப்பு முகாம்களிலும் வாடவைத்த  இலங்கை அரசின் பொருளாதாரத்தை பலப்படுத்தவே நீங்கள் யாவரும் துணை போகிறீர்கள்.

மானம் கௌரவம் உணர்ச்சியுள்ள தமிழர் ஒவ்வொருவரும், இலங்கை உற்பத்திப் பொருட்களை உடன் பகிஷ்கரிக்க வேண்டும். மிக அண்மையில், கனடாவில் ஓர் சந்தையில், சில தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் சென்று, இலங்கையின் உற்பத்திப் பொருட்களை அங்கு விற்கப்படாது என கட்டளையிட்டதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தனா.

இப்போராட்டத்தினை ஒழுங்கு செய்த செயற்பாட்டாளர்கள், முதலில், தமிழ் கடைகள், உணவகங்களுக்கு சென்று இவ்வேண்டுகோளை முன்வைத்திருக்க வேண்டும். இதேவேளை, இலங்கை பாதுகாப்பு படைகளின் கைது, சித்திரவதை, பாலியல் வன்முறை, படுகொலை ஆகியவற்றிலிருந்து தப்பித்து கொள்வதற்காக, பெரும் தொகையான ஈழத் தமிழர், இலங்கையிலிருந்து தப்பி வந்து அரசியல் தஞ்சம் கோருகின்றனார்.

ஆனால், தினமும் நூற்றுக் கணக்கான புலம் பெயர் வாழ் தமிழா,; சிறிலங்காவின் விமானம் மூலமாக இலங்கைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலைமையில் சர்வதேச மனித உரிமை, மனித அபிமான அமைப்புகள், தஞ்சம் கோரிவந்த தமிழர்களை, சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பாதீர்கள் என்ற வேண்டுகோளை முன் வைப்பது வலுவிளக்கிறது.

இதுபற்றி சிறிலங்காவிற்கு சுற்றுலா சென்றுவரும் புலம்பெயர்வாழ் தமிழர் சிறிது சிந்திக்க வேண்டும். தயுவ செய்து சுயநலத்துடன் வாழாதீர்கள். இது எமது இனம் இலங்கைதீவில் பூண்டோடு அழிவதற்கே வழிகோலுகிறது.

இரு தசாப்தங்களுக்கு பின்னார் இந்தியா
 
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக, இலங்கை விடயத்தில் அமைதிகாத்து வந்த இந்தியா, கடந்த மார்ச் மாதம் ஐ. நா. மனித உரிமை சபையில் தனது அமைதியை குலைத்து, இலங்கை தமிழர் சார்பாக குரல் கொடுத்ததை, ஈழத்தமிழர், உலகத் தமிழர் அலட்சியம் செய்ய முடியாது.

தமது சுயநலத்திற்காக விதண்டவாதம் பேசுவோருக்கு, இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இது ஓர் முக்கியமான நிலைபாடு. இந்தியாவினுடன் எமக்கு உருவாகிய நீண்டகாலப் பகை, இன்று எமது இந்த நிலைக்கு ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எமக்கு இந்தியாவுடன் ஏற்பட்ட பகையை, இராஜதந்திரம், கபடம் தெரிந்த ராஜபக்ச அரசு செவ்வையாக பாவித்து, எமது கட்டுமானங்கள் யாவற்றையும் நிர்மூலமாக்கி, தாயகத்தில் வாழ்ந்த சகலரையும் அநாதரவாக்கியுள்ளது. ஆகையால் இந்தியாவினால் காட்டப்பட்ட பச்சை விளக்கை, நாம் வரவேற்று, அனுசரித்து செல்வதே சரியான இராஜதந்திரம்.

 இல்லையேல் நாம் மீண்டும் உலகில் யாருடைய உதவியுமின்றி அநாதைகள் ஆக்கப்பட்டு, எமது இனமும் இலங்கைத்தீவில் பூண்டோடு அழிக்கப்படுவதற்கு காரணமாவோம். கடந்த ஐ. நா. மனித உரிமை சபையில் உரையாற்றிய, இந்தியாவின் ஜெனிவாவிற்கான பிரதிநிதி திரு. டீலிப் சிங்கா, இலங்கையில் நம்பிக்கை வாய்ந்த ஓர் விசாரணையை வலியுறுத்துவதாகவும், ஐ. நா. மனித உரிமைச் சபையில் இலங்கையினால் 2009ம் ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணயில் கூறப்பட் விடயங்களை கூட இன்னும் நடைமுறைப் படுத்தவில்லையென  இலங்கையை கடுமையாக சாடியிருந்தார்.
திரு. டீலிப் சிங்கா தொடர்ந்து கூறுகையில், தமிழர்கள் உட்பட சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அங்கு ஓர் நீண்டகால அரசியல் தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும்,

தனிப்பட்ட நிலங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமெனவும், இலங்கையினால் மேற்கொள்ளவிருக்கும் - தடுத்து வைக்கப்பட்டோர், காணமல் போனோர், கடத்தப்பட்டோர் போன்றவற்றவற்றின் உள்நாட்டு விசாரணைகள் யாவும், சர்வதேச பொறிமுறைகளை திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டுமென கூறியதோடு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இலங்கையுடன் உறவுகளை கொண்ட அயல்நாடானா இந்தியா, அங்கு நடப்பவை பற்றி அலட்சியமாக இருக்க முடியாதெனவும், இந்தியா தொடர்ந்து விழிப்பாக இருக்குமென கூறியிருந்தார்.

ஐ.நா.வின் 'ஆர் 2 பி"
 
கூடிய விரைவில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது. ஆகையால் இவரின் விஜயத்தின் பொழுது, இவரை நேரில் சந்திக்க விரும்பிய, மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்கள், சந்திப்பதற்கான ஒழுங்களை உடன்செய்ய வேண்டும்.

இதனது முதல் கட்டமாக, ஜெனிவாவில் உள்ள அவரது காரியாலயத்தினுடன் உடன் தொடர்புகளை ஏற்படுத்தி, உங்கள் விபரங்களை அவரது கவனத்திற் காலம் தாழ்த்தாது கொண்டுவர வேண்டும்.

இவ்வேலைத்திட்டத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள், சமய சமூக அமைப்புக்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து கொடுக்க முடியும். ஐ. நா. மனித உரிமை சபையின் 23வது கூட்டத் தொடர் இவ் மே மாதம் 27ம் திகதி முதல் மூன்று வாரம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத் தொடரில் சில அரச சார்பற்ற நிறுவனங்களும், ஒர் இரு நாடுகளும் உரையாற்ற முன் வரலாம்.

இலங்கையின் விடயத்தை பொறுத்த வரையில 24வது கூட்டத் தொடர் முக்கியமானது. இவ் கூட்டத்தொடர் பற்றி, இலங்கை மீதான கண்டனப் பிரேணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 25வது கூட்டத் தொடர் மிக முக்கியமானது. இக் கூட்டத் தொடரில், இலங்கை வழமைக்கு மேலான பல சர்ச்சைகள் எதிர்கொள்ளும். இது ஈழத் தமிழர்கள் விடயத்தில் பல திருப்பு முனைகளை உருவாக்கலாம்.

அதாவாது ஏற்கனவே  இலங்கை மீது நிறைவேற்றபட்ட கண்டனத் தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொறிமுறையான ஆர் 2 பி யுடன் மறைமுகமாக தொடர்பு படுத்தப்படுகிறது. இவ் 25வது கூட்டத் தொடரில் நடக்கவிருக்கும் சம்பவங்களுடன், இலங்கை நிச்சயம் ஆர் 2 பி பொறிமுறைக்குள் அகப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொறிமுறையான, 'ஆர் 2 பி" என்பது (R2P – Responsibility to Protect)  ஓர் ஐ. நா. அங்கத்துவ நாட்டினால், தமது பிரஜைகளை இன அழிப்பு, போர்க்குற்றம், படுகொலைகளிலிருந்து காப்பாற்ற முடியாவிடில், சர்வதேச சமூதாயம் நேரடியாக களம் இறங்கி, பாதிக்கபடுபவர்களை காப்பாற்றுவதற்கு உரித்துடையவர் ஆவார்கள்.

ஆகையால்  இலங்கை மீது நிறைவேற்றபட்ட கண்டனத் தீர்மானத்தை, குருட்டுத்தனமாக தமது சுயநல அரசியலுக்காக எதிர்ப்பவர்கள், இவ்விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில் உங்களுக்கு ஒன்றும்
விளக்கமில்லையானால், கேளுங்கள் சொல்லித் தருகிறோம்.
இறுதியாக என்னால் எழுதப்பட்ட '13வது திருத்த சட்டமும், இடைகால நிலைமாற்று நிர்வாகமும்" என்ற
கட்டுரையில், இலங்கை அரசு தினமும் தமக்கு எதிரானவர்களை விசாரிப்பதும், தொல்லை கொடுப்பதுமாகவுள்ளது. ஆனால் இவர்கள் மீது  இலங்கை அரசு எந்தவித விசாரணை நடத்துவதாக நாம் அறியவில்லை என எழுதியிருந்தேன்.

இக் கட்டுரை வெளியாகி சில தினங்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான, திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு சிறிதரன் ஆகியோரை, இலங்கையின் பயங்கரவாதப் பிரிவினால் விசாரணக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே பயங்கரவாத பிரிவினால் விசாரிக்கபட்டுள்ளதாக அறிகிறோம்.

திரு சிறிதரன் முன்பு பல தடவை விசாரிக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மே 1ம் திகதி அன்று, பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்கள் நெல்லியடியில் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், இவரது வீட்டிற்கு நான்கு முகமூடியணிந்த மர்ம நபர்கள் சென்று, கஜேந்திரகுமார் எங்கேயென விசாரித்ததாக, ஒரு சில தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இச் சம்பவம் பற்றிய எந்தச் செய்தியையும், இவர்களுடைய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வரும், மாமனிதர் சிவராமின் ஆங்கில இணையதளம்
பிரசுரிக்கவில்லை? இச் சம்பவத்தை தொடர்ந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை, சிவராமின் ஆங்கில இணையதளம் பிரசுரிக்குமானால், இச் சம்பவம் பற்றிய சர்வதேச நடவடிக்கைக்கு மிக உதவியாகவிருக்கும்.

TCHR France

tchrfrance@hotmail.com

0 Responses to அதிகாரத்துடன், மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வார்!- ச. வி. கிருபாகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com