ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன்,
தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் ஆணையரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விளக்கம் கேட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு, கருணை மனு அனுப்பியிருந்தனர். ஆனால், மூவரின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது இதற்கு விளக்கம் வேண்டும் என்று பேரறிவாளன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு இருந்தார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நேரிடையாக பேச விரும்புவதாகவும் கூறியிருந்தார். அதன் படி, கடந்த வியாழன் அன்று, வீடியோ கான்பரன்சிங் மூலம், தனது கருணை மனுவை குடியரசுத்தலைவர் எந்த அடிப்படையின் கீழ் நிராகரித்தார் என்கிற விளக்கம் வேண்டும் என்று கேட்டார். சுமார் 30 நிமிடம் வீடியோ கன்பரன்சிங்கில் பேரறிவாளன் பேசியதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் மேலும் கூறியதாவது "வேலூர் மத்திய சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் மத்திய தகவல் ஆணையர் சுஷ்மா சிங், நிதி அமைச்சக இணை செயலாளர், உள்துறை அமைச்சகம் ஆகியோர் பேரறிவாளனிடம் சுமார் 30 நிமிடங்கள் வரை பேசியுள்ளனர். விவாதத்தின்போது தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதன் காரணம், உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற ஆலோசனை குறித்து விளக்கம் அளிக்க பேரறிவாளன் கேட்டு கொண்டார்." என்று கூறியுள்ளார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்றத்தில், தங்களது கருணை மனு மீதான முடிவு எடுக்க குடியரசுத் தலைவர் காலம் தாழ்த்தியதால் தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்று, மேல் முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to பேரறிவாளன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதம்: தகவல் ஆணையரிடம் விளக்கம் கேட்டார்