புதன்கிழமை தொழிலாளர் தினமன்று சிங்கப்பூரின் ஹொங் லிம் பார்க்கில் 6000 பொதுமக்கள் ஒன்று கூடி மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் வயதானவர்கள் தொகை அதிகமாகி வருவதாலும் பிறப்பு வீதம் குறைந்து வருவதாலும் அந்நாட்டில் வெளிநாட்டினரைக் கொண்டு மக்கள் தொகையை உயர்த்துவர்தற்கு அரசு திட்டமிட்டுள்ளதுடன் அதற்கேற்றவாறு தனது குடியேற்றத் திட்டத்தையும் செப்பனிட்டு வருகின்றது. இத்திட்டத்தையும் அங்கு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கக் கோரியுமே அங்கு மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடந்துள்ளது.
சிங்கப்பூர் அரசு தற்போது 5.38 மில்லியனாக இருக்கும் மக்கள் தொகையை 2030 இற்குள் 6.5 மற்றும் 6.9 மில்லியனுக்கு இடையில் கொண்டு வரத் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது வருடத்துக்கு அங்கு குடியேறும் வெளிநாட்டினரின் தொகையை 15 000 இலிருந்து 25 000 இற்கு அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்லது. இதற்கான ஆவணம் இவ்வருடத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்தே அங்கு சமீப காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. மலேசியாவுக்குத் தெற்கே அமைந்துள்ள மிகச்சிறிய தீபகற்பமான சிங்கப்பூர் ஏற்கனவே சன நெருக்கடி மிகுந்த இடமாக உள்ளது எனவும் அங்கு அதிகளவு வெளிநாட்டினர் பணி புரிந்து வருவதால் அங்கு சாதாரண குடிமகனுக்குச் சம்பளங்கள் அதிகரிப்பதில்லை எனவும் வீடு, அபார்ட்மென்ட் ஆகியவற்றின் விலை இரட்டிப்பாகியுள்ளது எனவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.
1965 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்கப்பூரில் ஆளும் கட்சியாக இதுவரை ஒரேயொரு கட்சியே திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மட்டுமன்றி எதிர்க்கட்சியினரும் கலந்து கொண்டனர். 2011 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டான் ஜீ சாய் எனும் முன்னால் மூத்த மக்கள் சேவையாளரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to மே தினத்தில் சிங்கப்பூரின் குடியேற்றத் திட்டத்தை எதிர்த்து ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம்