Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“ராதிகா” – கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா.

புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

இதைச் சாதனையாக மட்டுமன்றி, ஈழத் தமிழரின் இதயங்களில், கன்னித் தமிழின் வன்னி நிழலரசு சிதைக்கப்பட்ட பின் சூழந்த கொடூரமான பயங்கர அரசியல் இருளில் மின்னிக் கொண்டிருக்கும் தமிழரிற்கான ஒரு ஜனநாயக வழியாகவே நான் ராதிகாவைப் பார்க்கிறேன்.

மேலும் சொல்லுவதானால் நமது போராட்டத்தின் தோல்வி என்ற உடல் புண்ணில் மருந்து தடவி நம்மைத் தேற்றியவர் ராதிகா என்றால் அது மிகையாகாது.

ராதிகா சிற்சபைஈசனூடாக, ஜனநாயக வழியில் சர்வதேச மட்டத்தை எட்ட கனேடியத் தமிழர் சமூகம் தவறி விட்டது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். அதாவது அதற்குரிய இராஜதந்திரக் கட்டமைப்புக்களை ஸ்தாபிப்பது தொடர்பிலான சிந்தனை வரட்சி இன்று வரை தொடர்வதே உண்மை.
எங்கள் இனம் போல் சிங்கள இனம் கனடாவில் இருந்திருந்தால் இவரது ஜனநாயக ரீதியிலான தெரிவின் அதி உச்சப் பயன்பாட்டை அவர்கள் இதுவரைக்குள் அறுவடை செய்திருப்பார்கள் என்று தயங்காது கூறலாம்.

அதாவது இவரின் வெற்றிக்கு பிற்பாடாவது இந்தத் தேவைக்காகவாவது, இன்னனொரு புறத்தில், அரசியல் கலப்பற்ற, இன ரீதியலான ஒரு பொது சமூக அமைப்பை, தேவையை ஒட்டி நாம் அமைத்து நகர தவறி விட்டோம் என்பதே உண்மை.

அதே சமயம் இங்கு நிகழ்வது யாதெனில், இவரை, நம் தமிழ் இனத்தின் தனிமங்களாக பிரிந்து நகர முயலும் இங்குள்ள சிறு சிறு குழுக்கள், தங்கள் தங்கள் பக்கம் இவரை இழுக்க முனைவதும், ஏனைய குழுக்களுடனான தொடர்பை இவர் துண்டிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதுமேயாகும்.

இதனை நிறுத்தி, எல்லாக் குழுக்களும், இவரை நமது தமிழ் இனத்தின் ஜனநாயக இராஜதந்திரப் பாதையின் ஒரு முன்னோடியாக்கி, இங்குள்ள ஜனநாயக அரசியலின் அணைத்துப் பிரிவினரும் தமிழ் இனத்தின் பொதுத் தேவைகள் விடயங்களிலாவது ஒரே முடிவை ஏற்று, அவற்றை இவரோடு சேர்ந்து அமுலாக்க முயலும் பக்குவத்தை இனியாவது பெற வேண்டும் எனப் பிராரத்திப்பதோடு, அதற்கான அழுத்தங்களை இங்கே இருக்கின்ற அனைத்து அமைப்புக்களிற்கும் கொடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறேன்.

ஜனநாயக நாடொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஒரு அதிகாரியோ, ஒரு நிர்வாகியோ அல்ல. ஆம், ராதிகா தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதி. ஆனால் தமிழரிற்கு மட்டும் உரித்தான பிரதிநிதி அல்ல.. அந்தத் தொகுதியில் வாழும் அனைத்து இன மக்களிற்கும் அவர் தான் எம் பி.
அவரது தொகுதியில் ஒரு சிங்களவரோ அன்றி, ராஜீவ் சம்பவம் காரணமாக ஈழத் தமிழரை வெறுக்கும் இந்திய வம்சாவழியினரோ இருந்தால் அவர்களின் மனதையும் புண்படுத்தாது அரவணைத்துச் செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் “ ஆதரவுத் தேவையும் கூட” எங்கள் ராதிகாவிற்கு இருப்தை நாம் மறந்து விடக் கூடாது.

எனவே தேசிய மட்டத்திற்கும், சர்வதேச தளத்திற்கும் நமது இனக் கோரிக்கைகளை உயர்த்தும் போது அவற்றிற்கு இசைவாக்கமும் செம்மையாக்கலும் தேவை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தவிர, இவர் ஒரு பரந்த தேசத்தின் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில், ரொறன்ரோப் பெரும்பாகம், ஒன்ராறியோ மாகாணம், கனடா தேசம் என அவரது கடமைகளும், பொறுப்புக்களும் பரந்து விரிந்து செல்கின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

அதாவது உலகம் உண்மையை உணராது எற்க மறுக்கின்ற ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஜைகளையும் தேவைகளையும் தமிழரின் அவலங்களையும் இவரால் வெளிப்படுத்த முடியுமே தவிர அதையே கோஜமாகக் கொண்டு ஈழத் தமிழரை மட்டும் மையப்படுத்தி தடைச் சட்டங்களை மீறி அரசியல் நகர்வை மேற்கொள்ள முடியாது என்பதை நாங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இருந்த போதும் இயன்றளவில் அதைக் கூட இவர் தனிமனித கருத்தச் சுதந்திர மற்றும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் தொடர்வது பாராட்டிற்கும் புரிதலிற்கும் உரியதாகும். ரொறன்ரோ பகுதியில் உள்ள அரசியல்த் தலைமைகள் கட்சி வேறுபாடின்றி, ஈழத் தமிழர்களின் வேதனைகளையும், தேவைகளையும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர்.

ஆனால் அவற்றை தங்கள் கட்சியின் நாடளாவிய தேசிய மட்ட மகாநாட்டில், தயங்காது முன் வைக்க இயலாத அளவில் ஈழத் தமிழரின் அரசியல் போராட்டம் பற்றி தவறான எண்ணக் கருக்கள் பிற கனேடிய மகாணங்களில் ஆழமாக விதைக்கப்பட்டு வேறூன்றிக் காணப்படுகின்றன.

இந்த விடயத்தைப் பொறுத்தவரை , ஒப்பீட்டளவில், என் டி பி கட்சியானது இதர கட்சிகளை விட ஈழத் தமிழர் சிக்கலை தன் கட்சியினரிற்கு அதிகமாக உணர்த்தியுள்ளது என அஞ்சாது கூறலாம். அதற்காக அமரர் திரு மைக் லையிற்றனிற்கு நன்றியையும் அஞ்சலிகளையும் செலுத்தி தொடர்வோம்.
நம்மில் பலர், கனடா போன்ற முன்னணி நாடொன்றின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் ராதிகா சிற்சபைஈசனால் அதிகமாக பல காரியங்களைச் செய்ய முடியும் என நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையில் இலகுவானதோ, சாத்தியமானதோ அல்ல.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்ற போதும் ஒரு சிலவற்றை மட்டும் தேவை கருதி தொட்டுச் செல்ல வேண்டியுள்ளது.
எந்தக் கட்சியைச் சார்ந்த தலைமைகளான போதும், ஈழத் தமிழர்களின் அவலத்தை உணர்ந்து அவர்களிற்காக குரல் கொடுக்கவோ, அனுசரனையாகவோ இருக்க விரும்பினாலும், அதற்காக தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சில யோசனைகளை முன் மொழிந்தாலும் அதை அவர் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் செய்ய இயலாத அளவிற்கு உலகளாவிய ரீதியில் மேன் மட்டத்திலிருந்து அடி வரை ஈழத் தமிழரிற்கு ஒரு பெரிய தடையாக இந்தியா தொடரந்து இருக்கிறது என்பதையும், இந்தியா சிறீலங்கா போன்ற தேச அரசுகள் காலா காலமாக விதைத்த விசமத்தனமான பரப்புரைகளின் விம்பங்கள் இன்னும் அழியவில்லை என்பதையும் சனல் 4 இன் காட்சிகளே நீதிக்கான தேவையையும் அனுதாபத்தையும் மட்டும் தேடித் தந்துள்ளன என்பதையும் நாம் சரிவரக் கணித்துக் கொள்ள வேண்டும்.

அதாவது சர்வதேச நிர்வாகங்களும் உலக மக்களும் ஈழத் தமிழர் மீது அனுதாபம் கொண்டுள்ளனரே தவிர, அவர்களது அரசியல் இலட்சியத்தை தேவையானது தான் என்று இன்னமும் உணரவில்லை என்பது அவதானிப்பிற்குரியதாகின்றது. நிற்க!.
இந்தளவில், கனடா உதயனின் வேண்டுகோளிற்கு அமைய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் ஏப்ரல் 30 ம் தேதி தொலைபேசி வாயிலாக ஒரு நேர்காணலை நமது உதயன் பததிரிகைக்கு வழங்கினார் அதுபற்றிய குறிப்பிற்கு வருவோம்.

திட்டமிட்டபடி இடமாற்றமின்றி, கொழும்பில்த் தான் பொதுநலவாய அமைப்பின் மாநாடு நடக்கும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் , இந்தச் சம்பாஜனை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஓட்டாவாவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்தவாறு கனடா உதயனின் ரொறன்ரோ அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு செல்வி ராதிகா அவர்கள், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு பதிலளித்தார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மகாநாட்டை முழமையாக புறக்கணிக்க வேண்டும் என கொன்சவேற்றிவ் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நாடளாவிய “என் டீ பீக் கட்சியின் பரப்புரை” தொடர்பான கேள்வியுடன் கனடா உதயன் ஆசிரியர் திரு ஆர் என் லோகேந்திரலிங்கம் தனது உரையாடலை தொடங்கினார்.

உதயன் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது ராதிகா மிகவும் அழுத்தமாகச் சொன்னார். ஆதன் தாக்கும் தொலைபேசியின் ஒலியை இன்னும் அதிகமாக கேட்கச் செய்தது. “இலங்கை அரசாங்கம் தான் மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள்; ஆகியவை தொடர்பாக தனது நாட்டிற்குள் விசாரணைகளை நடத்த வெளிநாட்டு பிரதிநிதிகளi அனுமதிக்காவிட்டாலோ அன்றி மேற்படி விடயம் தொடர்பான விளக்கத்தை அளிக்காவிட்டாலோ இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடருக்கு கனடா செல்லக்கூடாது. வேறு எந்த நாட்டில் நடத்தப்பட்டாலும் கனடா பங்குபற்றலாம்;. இலங்கையில் நடத்தப்பட்டாலும் பிரதமர் தனது பிரதிநிதிகளைக் கூட அனுப்பக்கூடாது.” இதையே மிகவும் அழுத்தமாக அவர் சொன்னார்.

அடுத்த படியாக , நேரமில்லாத போதும் உதயனின் வேண்டுகோளிற்கு இணங்கி உரையாட முன் வந்தமைக்கு செல்வி ராதிகாவிற்கு நன்றி தெரிவித்த உதயன் தொடர் கட்டுரையாளர் ப+நகரானும் ஈற்றில் ஒரிரு கேள்விகளை கேட்டு பதி;லைப் பெற்றுக் கொண்டார்.

கனடாவின் ஆளும் கொன்சவேற்றிவ் கட்சி, பிரதான எதிர்க் கட்சியான லிபறல் கட்சி , மற்றும் என்டிபி கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் பகிரங்கமாக கொழும்பு மகாநாட்டை பறக்கணிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக அறிக்கைகளையும் செய்திகளையும் வெளியிட்டுக் கொண்டிந்த போதும், இதனை கனடாவின் ஏகமனதான ஒரு முடிவாக மாற்ற ஏன் எங்களால் முடியவில்லை என்று கேட்டதிற்கு, கனடாவின் தற்போதைய அரசாங்கம் எப்போது எங்கே இதனை அறவித்தது என்ற கேள்வியே பாராளுமன்ற உறுப்பினரின் பதிலாக வந்தது.
2011 ல், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்புக்களின் மாகாநாட்டிலேயே இந்த முடிவை கனேடியப் பிரதமர் என்ற முறையில் மாண்புமிகு திரு ஸ்ரீபன் ஹாபர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதாவது மனித உரிமைகள் தொடர்பில் தீவில் முன்னேற்றம் எற்படாதவிடத்து, தன்னால் கொழும்பில் 2013ல் நடைபெறும் மகாநாட்டில் கலந்து கொள்ள இயலாதிருக்கும் என அவர் தெரிவித்திருந்தார் என்பதை பூநகரான் சுட்டிக் காட்டிய போது, எம்பி செல்வி ராதிகா அவர்கள், அது அவரது தனிப்பட்ட முடிவாக மட்டும் இருக்கிறதே ஒழிய அது கனேடிய அரசின் முடிவாக வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை என்று பதிலளித்தார்.

மேலும் தனது பதிலிற்கு ஆதாரமாக கனடாப் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் தான் கேள்வி எழுப்பிய போது , கனடாப் பிரதமர் தான் கலந்து கொள்ளமாட்டேன் என்று மட்டும் கூறியிருந்ததாகவும் , ஆனால் கனடாவின் பிரதிநிதிகள் சமூகமளிப்பார்கள் என்றும் கௌரவ பிரதமர் பதிலளித்தததாகவும் தெரிவித்தார்.

அப்படியானால் இதனை கனடா தேசத்தின் முடிவாக்க என்ன செய்ய வேண்டும் என்று பூநகரான் கேட்டதிற்கு பதிலளித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா அவர்கள், தற்போது வெளியாகியிருக்கும் முறைப்பாட்டுக் கோரிக்கையில் அனைவரும் ஒப்பமிட்டு அந்தக் கோரிக்கையைப் வலுப்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

இது என்டிபி என்ற ஒரு கட்சியின் “பெட்டிஸனாக” இருக்கிறதே இதனை அரசியலிற்கு அப்பால் , கட்சி பேதங்களைத் தாண்டி, ஒரு பொதுவான மனித உரிமை தொடர்பான மனிதாபிமான கோரிக்கையாக, கடசி சார்பற்று கனடா மக்களின் பொதுவான கோரிக்கையாக வெளிக் கொண்டு வர இயலாதா? ஏன்று பூநகரான் கேட்டதிற்கு பதிலளித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் “ கொண்டு வந்தால் அதனை தான் நிச்சயம் ஆதரிப்பதாக ஆர்வத்துடன் கூறினார்.

இன்றைய கனடா அரசு சிறீலஙகாவின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அப்பால் , கொள்கை வழுவாத, ஒரு உறுதியான நிலைப்பாட்டை கனடாவின் கொனசவேற்றிவ் எடுக்க வேண்டும் என்பதே அவசியம் என்றும் , அதற்காகவே என்டிபி கட்சி , நாடாளாவிய ரீதியில் ஒரு பரப்புரையை ஆரம்பித்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த உரையாடலில் , நாடுகளின் தேசிய நடைமுறைகள், இராஜதந்திர வழமைகள் மற்றும் நகர்வுகள், சர்வதேசச் சட்டங்கள் மற்றும் உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றின் மத்தியில், இவ்வாறான ஒரு பொது நீதிக்கான கோரிக்கையை ஒரு இனமானது மனிதாபிமான ரீதியில் அரசியல் கலப்பற்று தூய்மையாக வெளியிடும் போதே அதனை எதுவித சங்கடமுமின்றி அனேக நாடுகளினால் வெளிப்படையாகவும், உண்மையாகவும் ஏற்க முடியும் என்றும், தற்போதைய அறிவிப்புக்களை வெளிவிடுபவர்கள் தமிழரிற்கான தனது ஆதரவையும் அனுதாபத்தையும் வெளியிடுகின்றனரே ஒழிய வேண்டிய கருமங்கள் எதையும் செய்வதாகத் தெரியவில்லை என்பதை ஒத்துக் கொண்ட பூநகரான் , அவ்வாறான அரசியல் கலப்பற்ற ஒரு பொது அமைப்பை ஏற்படுத்தினால் ஆதரிப்பீர்களா என்று கேட்டதிற்கு , தான் நிட்சயமாக அதனை ஆதரிப்பேன் என்றும் செல்வி ராதிகா அவர்கள் மகிழச்சியோடு தெரிவித்தார்.

அரசியல், கொள்கை வேறுபாடுகள் தான் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் என்பதோடு, அதுவே ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது ஆன போதும் , இவ்வாறான ஒரு மனித நீதிக்கான கோரிக்கைகளை பொதுமைப்படுத்தி அரசியற் கலப்பின்றி உரிய முறையில் ஒரு இனம் உலக நாடுகளின் சட்டங்களிற்கு உட்பட்டே வெளியிட வேண்டும் என்றும், அவர்களின் எதிர்பார்ப்புகளை தமிழர் தரப்பும் கவனத்தில் கொள்ளும் போது உலக ஆதரவுடன் உள்ளார்ந்த செயற்பாட்டு ஆதரவும் நிட்சயம் கிடைக்கும் என்ற புரிதலோடு சம்பாஜனை நிறைவிற்கு வந்தது.

இந்தச் சம்பாஜனை கூட ஒரு ஊடகத்தின் ஏற்பாடாக இல்லாமல், கட்சி பேதமற்ற ஒரு அரசியல் கலப்பற்ற மனிதாபிமான அமைப்பு ஒன்றின் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பின் அதன் செயற்திறனும் பலனகளும் பரந்தும் விரிந்தும் தேசிய மட்டங்களிறகும் அதனைத் தொடரந்து சர்வ தேச மட்டத்திற்கும் உயரச் செல்வதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே உள்ளன என்ற கருத்தை உங்கள் முன் சமர்ப்பிப்பதோடு ஒரே ஒரு கருத்தை முன் வைத்து நிறைவு செய்யவுள்ளேன்.

ஈழத் தமிழராகிய எங்களிற்கு பல விதமான தேவைகள் இருப்பதால் அந்தத் தேவகளிற்கு எற்ப அமைப்புக்கள் நமக்கு தேவை.

எனவே ஜனநாயக ரீதியில் உலக நாடுகளை சங்கடமின்றி அணுகிப் பேசவும் நகரவும் இங்குள்ள அனைத்து அமைப்புக்களையும் அடக்கிய ஒரு பொது அமைப்பு பற்றி கனடா உதயன் ஆழமாகச் சிந்திக்கிறான் என்பதை மட்டும் தெரிவித்து நிறைவு செய்கிறேன்.

0 Responses to பூநகரான் பார்வையில்… தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com