'பாஜக கூட்டணி எம்பிக்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, எல்லையில் சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் படுகொலை இவற்றில் குடியரு தலைவர் என்ற முறையில் நேரடியாக தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணி எம்பிக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, இந்திய எல்லையில் ஊருருவும் சீன ராணுவ பிரச்சனை குறித்தும், பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால், தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த விவகாரத்திலும் தலையிடுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அத்வானி பேசுகையில் "பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் சரப்ஜித் சிங்குக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மரண தண்டனையில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டாலும் அதனை நிறைவேற்ற மிகவும் காலதாமதப் படுத்தினார்கள்.
லாகூர் சிறையில் சரப்ஜித் கொலை செய்யப்பட்டது, பாகிஸ்தான் சிறை அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் நடந்து இருக்காது. சிறை அதிகாரிகள பாகிஸ்தான் அரசு சம்மதம் இல்லாமல் ஒத்துழைத்து இருக்க மாட்டார்கள். சரப்ஜித் சிங் விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த இந்திய அரசு, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவும் விளக்கம் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.
அதேபோன்று லடாக் பகுதில் சீன ஊடுருவலில் அலட்சியத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. இந்த இரு பிரச்ச்னைகளிலும் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையை நிர்வகிக்கும் விதம் மிகவும் வேதனையாக உள்ளது. சரப்ஜித் சிங் கொலை, சீன ஆக்கிரமிப்பு ஆகிய இரு பிரச்சனைகள் குறித்தும், அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்." என்றும் குடியரசுத் தலைவரிடம் பேசியதாக அத்வானி கூறியுள்ளார்.
0 Responses to சீன ஆக்கிரமிப்பு, சரப்ஜித் சிங் கொலை : பாஜக கூட்டணி எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் அதிருப்தி