Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.

1997ம் ஆண்டு இதே மேமாதம் 13ம் திகதியன்று புத்த பிக்குகளால் நாள் நேரம் பார்த்து பிரித் ஓதி கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஜெயசிக்குறு நடிவடிக்கையாகும். இந்த இராணுவ நடவடிக்கையினால் தமிழ் மக்கள் பல கொடுமைகளை எதிர்கொண்டார்கள், இந்த இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைக்கும் நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டதாகும். ஆகக்கூடியது 4 மாதங்களே இப்போர், இது நீண்டநாள் நீடிக்காது என்பது சிங்களத்தின் கணிப்பாக இருந்தது.

ஆனால் இந்த இராணுவ நடவடிக்கை பல மாதங்களுக்கு நீடித்துக்கொண்டே சென்றது. விடுதலைப்புலிகள் செப்ரம்பர் 98 "ஓயாத அலைகள் 2" நடவடிக்கையின் மூலமாக கிளிநொச்சி நகரத்தை முற்றுமுழுதாகத் தங்களின் வசம் கொண்டுவந்து இராணுவத்தினரை வீழ்ந்தினார்கள், ஆயிரத்துக்குமதிகமான படையினர் இதனால் கொல்லப்பட்டனர். இந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலமாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை ஐந்து நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதனைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையின் ஊடாக புலிகளால் மீட்கப்பட்டன. புலிகளின் ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த மகா வெற்றியை நிகழ்த்துவதற்கு மிகமுக்கியமானவராக இருந்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்களே. இப்போர் வெற்றிகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரமிக்கத்தக்க வளர்ச்சிகளை அடைந்தார்கள். ஜெயசிக்குறு தந்த பாடத்தின் ஊடாக. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறையாக இந்த ஜெயசிக்குறுச் சமர்தான் இருந்தது.

2002 இல் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழத் தேசித்தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானதாக எதனை நீங்கள் கருதுகிறீர்கள்"?

பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.

ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு இப்போர் வெற்றியைத் தலைவரும் ஆழமாக நேசித்தார். அதனைப் போன்றே தலைவரும் இவ்வெற்றிக்கு வழிவகுத்த பால்ராஜ் அவர்களையும் ஆழமாக நேசித்தார்.

1983 - 1984 க்கும் இடைப்பட்ட காலம். புலிகள் இயக்கம் வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பிரிகேடியர் பால்ராஜ் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள். அக்கால கட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாகவும் பகுதி நேரப் போராளியாக மட்டும் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் நடைபெற்ற சம்பவம் அவரைப் போராட்ட வாழ்க்கைக்காக முழுமையானவராக மாற்றியது.

இயக்க வேலையாக தண்ணீரூற்று முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு மிதிவண்டியில் முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் இளைஞனாக இருந்த பால்ராஜ் அவர்களை இடைமறித்து அவரைச் சிங்களப் படைகள் கைது செய்து முல்லைத்தீவு முகாமில் மூன்று நாட்கள் சிறை வைத்தார்கள்.

அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும் சிறிலங்காப் படையினர் அவரை மிரட்டியும், துன்புறுத்தியும் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை விதைக்க விளைந்தனர். ஆனால் பால்ராஜ் அவர்களை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் என்றோ, அல்லது பகுதிநேரப் போராளியென்றோ அடையாளம் காணாத சிங்களப்படைகள் சிறுவன் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறி விடுவித்தனர். ஆனால் அதன்பின்னர் "வலியைத் தந்தவனிடமே திருப்பிக் கொடு என்ற தேசியத் தலைவரின் வாக்கின் அடிப்படையாக கொண்டு தன்னை முற்றுமுழுமையாக போராளியாக மாற்றிக்கொண்டு அதன்பின்னர் தளபதியாகி உயர்ந்தார் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள், தான் சிறைவைக்கப்பட்ட இராணுவ முகாமை பின்னாளில் தாக்கியழித்து வரலாற்றில் பதிவாகினார் மாவீரன் பால்ராஜ் அவர்கள். என்னால் அவரை எழுத முடியாது என்று புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறுவார். அவரின் வீரத்திறமைகள் அளப்பெரியவை. அவற்றை எழுத்தினுள் அடக்கிவிட முடியாது.

வன்னிப் போர்க் களத்தில் சுமார் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை புறமுதுகு காட்டவைத்து பல மைல்களுக்குத் தப்பி ஓடவைத்த மகாவீரன் பால்ராஜ், போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளைக் கொண்ட சிங்களப் படை உயிர் தப்பினால் போதும் என்று கதிகலங்கி ஒடிய வரலாற்றைச் சிங்களம் மறந்துவிடாது. தப்பி ஓடிய சிங்களப்படை விட்டுச் சென்ற போர்த் தளபாடங்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் மூலமாகவும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைந்தார்கள். அன்று பால்ராஜ் உயிருடன் இருக்கும்வரை வன்னியை நம்மால் பிடித்துவிட முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் சிங்களம் இருந்தது.

குடாநாட்டைப் பற்றிய நிலப்படமில்லாமலே (Map) முற்றுமுழுதாக அதனை துள்ளியமாக அறிந்து வைத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள் போரின் போது இராணுவம் வன்னியில் உள்ளே நுழைந்தால் அதனை வழிமறித்து போரிடும் உபாயங்களையும், உள்ளே சிங்கள இராணுவத்தை வரவைத்து தங்களின் பொறிக்குள் இராணுவத்தைச் சிக்க வைத்த பின்னர் சுற்றி வளைத்து தாக்கும் தந்திரங்களையெல்லாம் வெற்றிகரமான முறையில் செயல்படுத்தி போர்களில் பல வெற்றிகளைப் பெற்று வல்லாதிக்க அரசுகளின் இராணுவத் திட்டங்களையும் தகர்த்தெறிந்த மகாவீரன் தான் பால்ராஜ் அவர்கள். சிங்களத்தின் தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்ட வல்லாதிக்க அரசு சிங்களத்தின் மண் ஆக்கிரமீப்புப் போருக்கு உதவிகளை வழங்கி அதன் ஊடாக தமிழீழப் போராட்டத்தை அழித்துவிடலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டன அவற்றைப் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத நிலையில் கொண்டு சென்றார். இதன் காரணமாகவே அன்று வல்லாதிக்க அரசு யுத்தத்தினால் தீர்வு ஏற்பாடாது சமாதானத்தின் மூலமே தீர்வைப் பெறமுடியும் என்ற நிலைக்கு வந்திருந்தன.

கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர் மரவுவழிப்படையாக மாற்றியதில் பால்ராஜ் அவர்களுக்கும் பங்குண்டு. ஒருநாள் போரியல் அறிவை வளர்த்தெடுப்பதற்கு இளம்புலி வீரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தலைவர் விரும்பினார். அதற்குத் தகுதியானவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைத் தேர்ந்தெடுத்து அவரை அழைத்தார். பயிற்சிக்கல்லூரியில் கற்கும் போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால் தமிழீழத் தேசித்தலைவர் ஒரு நிபந்தனையும் வைத்தார். அது "நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம் நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் மிகப்பெரிய பாடமாக இருக்கும் என்றார்" அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக பால்ராஜ் தலைவரின் பார்வையில் மிளிர்ந்தார்.

போர் ராஜதந்திர முன்னெடுப்புகளில் பிரிகேடியர் பால்ராஜ் மேதையாக இருந்தார். தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்கள். தென்னாசியப் பிராந்தியத்திலேயே அவர் பெரும் தளபதியாக மிளிர்ந்தார். போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளுடன் பல மாதங்கள் போராடிக் கைப்பற்றிய நிலங்களை சில நாட்களுக்குள் கைப்பற்றி, முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை ஐந்தாயிரத்திற்கும் குறைவான போராளிகளைப் பயன்படுத்தி அவர்களை எதிர்கொண்டு போரிட்டு துரைத்தியடித்த பிரிகேடியர் பால்ராஜை உலகமகா வீரன் என்று கூறினால் அது மீகையாகாது.

விஸ்வா 

0 Responses to தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள் - விஸ்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com