ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரின் புறநகர்ப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் பேரணி ஒன்றை இலக்காகக் கொண்டு தீவிரவாதிகள் மேற்கொண்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப் பட்டும் 25 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் சனிக்கிழமை பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சார்தாரியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவென தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்திருக்கும் வேளையில் நிகழ்ந்துள்ள இக் குண்டு வெடிப்பு சற்று பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதல் நடைபெற்ற இடம் தலிபான்-அல்கொய்தா தீவிரவாதக் குழுக்களின் பாசறைகள் அமைந்துள்ள பழங்குடியினரின் பகுதியில் இருந்து சொற்ப தூரத்திலேயே அமைந்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் கொல்லப் பட்டவர்களில் 3 சிறுவர்களும் ஒரு போலிசாரும் அடங்குவர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரிட்டன் பிரதமர் கெமரூனின் பாகிஸ்தான் விஜயத்தின் முக்கிய நோக்கமாக பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே அரசியல் இராஜதந்திர உறவை மேம்படுத்துவது அமைந்துள்ளது. கெமரூன் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ள முன் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருந்தார். இதன்போது அவர் ஆப்கானில் நிலை கொண்டுள்ள பிரிட்டன் துருப்புக்களைப் பார்வையிட்டதுடன் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் ஹமிட் கர்சாய் இனையும் சந்தித்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகளுடன் இணைந்து பிரிட்டன் துருப்புக்களும் வாபஸ் பெற உள்ளதையும் உறுதிப் படுத்தினார்.
0 Responses to பிரிட்டன் பிரதமரின் பாகிஸ்தான் விஜயத்தின் மத்தியில் கார் குண்டு வெடிப்பு:15 பேர் பலி