அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை முற்றாக ஒழித்து, மாகாண சபை முறைமையை அகற்றும் திட்டத்தோடு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை 2014ஆம் ஆண்டு நடத்தி, 13வது திருத்த சட்டத்தை அகற்றுவதற்கான பெரும்பான்மையின மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன்மூலம் மக்களின் ஆணைக்கு அமைய செயற்படுவதாக சர்வதேசத்திடம் கூறிக்கொள்ள முடியும். இது, சிறுபான்மை மக்களின் உரிமைகளை முற்றாக பறிக்கும் செயற்பாடு என்றார் அவர்.
மோதல்கள் முடிவுக்கு வந்த காலம் முதல், 13வது திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று இனமுரண்பாடுகளுக்கான தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமும் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை வழங்கி வந்துள்ளது. ஆனாலும், சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதில் அரசாங்கம் ஆர்வம் கொள்ளவில்லை. மாறாக, வழக்கப்பட்ட கொஞ்ச அதிகாரங்களையும் பறிக்கும் முகமாக சதித்திட்டங்களைத் தீட்டுகிறது என்று மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை ‘அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம்’ நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
0 Responses to மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்க மஹிந்த அரசாங்கம் திட்டமிடுகிறது: மனோ கணேசன்