Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”




பாஜகவின் பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் கொலையை நேரில் பார்த்து, தகவல் தெரிவித்தவர் காவலாளியாக வேலை பார்த்து வந்த 73 வயது  ஜெயராமன் தான். இவரைப் போலீசார் விசாரித்த போது பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சேலத்தில் கொலையுண்ட பாஜக பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் கொலையை நேரில் பார்த்த காவலாளி தனது வாக்கு மூலத்தில், "நான் சேலம் அம்மாப்பேட்டையில் வசித்து  வருகிறேன்.ஆடிட்டர் ரமேஷ் வீடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பை பகல் நேரத்தில் கவனிப்பேன். இரவு 9 மணிக்கு மேல், ஆடிட்டர் ரமேஷ் அலுவலகம் கீழ்ப் பகுதியில் இருந்து கண்காணிப்பேன்.

நேற்று முன்தினமும் வழக்கம் போல ஆடிட்டர் ரமேஷ் அலுவலகத்துக்கு சென்று அமர்ந்து இருந்தேன். அப்போது ஆடிட்டர் ரமேஷ் அலுவலகத்துக்குள் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அலுவலகத்தைப் பூட்டி மாடியில் இருந்து கீழே வந்து அவரது  வண்டியை ஸ்டார்ட் செய்தார். அப்போது 3  வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கு வயது 20 இலிருந்து 23 வயதுக்குள் இருக்கும். ஆடிட்டரிடம் ஏதோ பேசவருகிறார்கள் என்று நினைத்து என்ன என்று கேட்டேன்.

ஒருவன் என்னை பேசாதே என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மற்ற இருவர் இரும்புக் கம்பியால், ஆடிட்டர் ரமேஷை தாக்கினர். அவர் நிலை குலைந்து போனார். பின்னர் அவரை கத்தி போன்ற ஆயுதத்தால் சரமாரியாக குத்தினார்கள். இதில் அவர் கீழே விழுந்து இறந்துவிட்டார். பின்னர் 3 வாலிபர்களும் அரசு கல்லூரி மெயின் ரோட்டுக்கு சென்று விட்டனர்.

3 பேரும் தமிழில் பேசினார்கள். ஒருவன் மட்டும் என்னை மிரட்டி கீழே அமர வைத்தான்.மற்றவர்கள் ஏதும் பேசவில்லை. 3 பேரும் ஆடிட்டரை கொன்றுவிட்டு மெல்ல நடந்து சென்றனர். பின்னர் நான் ஆடிட்டர் அலுவலகம் கீழ் பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவர் வீட்டுக் கதவைத் தட்டி, அவரது மனைவியிடம் விஷயத்தைக் கூறினேன். அவர் போன் செய்து மற்றவர்களுக்கு விவரத்தை தெரியப்படுத்தினார்." என்று  கூறியுள்ளார்.இவர் கொடுத்த அடையாளத்தை வைத்து கொலையாளியின் முகம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் வரையப்பட்டு, குற்றவாளிகள் மூவரின் மாதிரி வரைபடங்களும் தமிழ்நாட்டில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு தேடும் பனி தீவிரமடைந்து வருகிறது.

பொதுமக்கள் கூடும் இடங்களிலும் இந்த படங்கள் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு, தேடப்படும் நபர் குறித்த தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டிய தொலை பேசி எண்கள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புலன் விசாரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 Responses to பாஜகவின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் கொலையை நேரில் பார்த்த காவலாளி பரபரப்பு வாக்கு மூலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com