பாஜகவுடன் இரகசிய உறவு வைத்துள்ளார் என்று மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா மீண்டும் முலாயம் சிங்கை வம்புக்கு இழுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பெனி பிரசாத் "பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் முலாயம் சிங் யாதவ், பிரதமர் வீட்டை பெருக்குவதற்கு கூட தகுதியற்றவர்." என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு முலாயம் சிங் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் முலாயம் சிங்கிடம், பிரசாத் மன்னிப்பு கேட்டதாக கூட கூறப்பட்டது.
ஆனால், இதை மறுத்துள்ள பெனி பிரசாத் வர்மா, முலாயம் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த சொன்னால் நான் காங்கிரசிலிருந்து கூட விலகத் தயார் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பெனி பிரசாத் வர்மா,
"பாஜகவுக்கும், சமாஜ்வாதிக் கட்சிக்கும் 1990ம் ஆண்டில் இருந்தே ரகசிய உறவு உள்ளது. உத்திரப் பிரதேசத்தில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து, இந்து-இஸ்லாமியர் இடையே மோதலைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது மக்களவை தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பலன் அளிக்கும் என்று கருதுகிறேன். உத்திரப்பிரதேசத்தில் ராமர் கோயில் விவகாரத்தை கிளப்பி பதற்றத்தை ஏற்படுத்தி, இரு கட்சிகளும் குளிர்காய நினைக்கின்றன.
பாபர் மசூதி இடிப்பு விவகாரத்துக்கும், முலாயம் சிங் யாதவுக்கும் உள்ள தொடர்பு பற்றி பொது மேடையில் முலாயம் என்னுடன் விவாதிக்கத் தயாரா? பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தன்மீது கூறப்படும் குற்றசாட்டு பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும், என்று முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். மாநில அரசுகள் பரிந்துரை செய்தாலோ, அல்லது நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலோதான், சிபிஐ அல்லது என் ஐ ஏ விசாரணை நடத்தப்படும் எனவே முலாயம் சிங்கின் கோரிக்கையை ஏற்று என் ஐ ஏ விசாரணைக்கு உபி பரிந்துரை செய்யவேண்டும்.
கோத்ரா வன்முறை சம்பவத்துக்குப் பிறகு சமாஜ்வாதி-பஜகவிடையே ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் குஜராத் தேர்தலில் சமாஜ்வாதி போட்டியிட்டது. நாடளுமன்றத்தில் நடந்த விவாதங்களுக்கு முலாயம் சிங்குக்கு ஆதரவாக சுஷ்மா செயல்பட்டார்.
இந்து-இஸ்லாமியர் இடையே பதற்றம் ஏற்படுவதை தடுக்கவே, சில விஷயங்களை நான் தெளிவுபடுத்துகிறேன். எனவே, மக்களவைத் தேர்தலில் மக்கள் தகுதி அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
0 Responses to பாஜகவுடன் ரகசிய உறவு : முலாயம் சிங் யாதவ் மீது பெனி பிரசாத் மீண்டும் பாய்ச்சல்