Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இளவரசி டயானா கொலை வழக்கின் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக பிரிட்டன் போலீசார் வெளியிட்ட தகவல் தமக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக டயானாவின் மெய்ப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

மற்றவர்களைப் போலவே இதுவரை விபத்து மரணம் என்று முடிவு செய்திருந்த அவர் பிரிட்டன் அதிஉயர் படைப்பிரிவான எஸ்.ஏ.எஸ் சிற்கும் டயானா மரணத்திற்கும் தொடர்பிருப்பதாக வெளியான சந்தேகத்திற்குப் பின் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது உண்மையாக இருந்தால் டயானாவின் மெய்ப்பாதுகாவலரின் கண்களில் மண்ணைத் தூவிட்டே கொலை நடந்திருக்க வேண்டும், ஆகவே அவர் அதிர்ச்சியடைவது யதார்த்தமானதே..

ஆனால் அதற்கும் அப்பால் இந்த விவகாரம் சூல் கொண்ட மேகமாகி, அந்த நேரம் மெய்ப்பாதுகாவலர் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வியையும் எழுப்பும் ஆகவேதான் அவர் களமிறங்கியுள்ளார்.

இந்த விவகாரத்தில் போலீசார் விசுவாசமாக நடக்கிறார்கள் என்றால் இப்படியொரு கடிதம் கிடைத்தவுடன் முதலில் போலீசார் என்ன செய்திருக்க வேண்டும்..?

கடிதத்தில் குறிக்கப்பட்ட நபர்களிடம் அது குறித்து பூரண விசாரணை செய்திருக்க வேண்டும்.. அதற்குப் பிறகே விவகாரத்தை பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அத்தகைய முயற்சிகள் எதையும் செய்ய முன்னரே தடயம் ஒன்று கிடைத்துள்ளதென அவசரமாக அறிவிக்க வேண்டிய பின்னணி என்ன..? இதுவே அவரது அதிரடிக் கேள்வி.
எங்கோ எதிர்பாராத ஓரிடத்தில் இருந்து இந்த உண்மை கசியப்போவதை அறிந்தே போலீசார் இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டார்களா..?

மெய்ப்பாதுகாவலர் விடயத்தை நோகாமல் போட்டுடைத்துள்ளார்.

ஆனால் அவருக்கு முன் இப்படியொரு தகவல் வந்தால் முதலில் அதிர்ச்சி தெரிவிக்க வேண்டியது யார்..? அவருடைய பிள்ளைகள், கணவர், அரச குடும்பத்தினர் என்று பொறுப்புள்ள பலர் இருக்கிறார்கள், அவர்கள் உறைந்த மௌனம் காக்கிறார்கள்… ஏன்..?

அப்படியானால் அவர்களுக்கு இது முன்னரே தெரிந்திருக்கிறதா..?
இப்படி பல சர்ச்சைகளை எழுப்புகிறது விவகாரம்…
ஆனால் டயானா மரணத்தில் பின்வரும் ஏழு கேள்விகள் தொடர் சந்தேகமாக உள்ளன..

01. டயானா இருந்த காரின் பாதுகாப்பு பெல்ற் செயற்படாமல் இருந்துள்ளது, ஆகவே விபத்து நடந்தால் பெல்ற்றினால் வழங்கப்படும் உயிர்ப்பாதுகாப்பு அவருக்கு இல்லை.
02. மரணிப்பதற்கு முன்னரே டயானா எழுதிய டயறியில் தன்னை செயற்கையான கார் விபத்து ஒன்றின் மூலமாக கொல்ல முயற்சிக்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

03. டயானாவின் கார் விபத்துக்குள்ளானபோது இன்னொரு வெள்ளை நிறமான பியற் யூனோ கார் அதனுடன் மோதியது.. அந்தக் கார் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இன்னொரு காரும் இதில் சம்மந்தப்பட்டது பின் அது எரிந்தபடி கண்டு பிடிக்கப்பட்டது.

04. விபத்து நடந்த இடத்தில் இருந்து வெறும் ஐந்து கி.மீ தொலைவில்தான் வைத்தியசாலை இருந்தது, ஆனால் பிரான்சிய அம்புலன்ஸ் பிரிவு 1 மணி 43 நிமிடத்திற்குப் பின்னரே அவரை வைத்தியசாலை கொண்டு சென்றது.. ஏன்..? இது திட்டமிட்ட தாமதமா..?

05. பிரான்சிய போலீசார் விபத்து நடந்த ஆறு மணி நேரம் தகவல் எதையும் வெளியிடவில்லை. உலகின் பார்வையில் இருந்து டயானா ஆறு மணி நேரம் தடயம் இல்லாமல் பிரான்சியரால் மறைக்கப்பட்டது ஏன்..? விபத்தில் சிக்கியவர் டயானா என்று வெளியிட ஆறு மணி நேரம் எதற்கு..? அவருடைய வயிற்றில் இருந்த குழந்தை பற்றி பேசப்படாதது ஏன்..?

06. டயானாவின் காதலர் டொடி அல் பயட்டின் சாரதி மாற்றப்பட்டு போதையில் இருந்த குடிகாரன் கென்றி போல் மாற்றப்பட்டது ஏன்..?

07. கடந்த 1992ல் சேர்பிய அதிபர் செயற்கையான கார் விபத்தில் கொல்லப்பட்டது போல ஒரு வியூகம் இங்கும் வகுக்கப்பட்டுள்ளது, இதன் பின்னணியில் பிரிட்டன் உளவுப்பிரிவின் முக்கிய அதிகாரி றிச்சாட் ரொம்லின்சன் பெயர் சந்தேக நிழலில் இன்னமும் இருக்கிறது.

1997 ஆகஸ்ட் 31ம் திகதி நடந்த டயானா டொடி அல்பயட் மரணத்தின் உண்மை 16 வருடங்களின் பின் உலகின் முன் தானாகவே பிரசவிக்கப்போகும் பிரசவவலி ஏற்பட்டுள்ளது, பன்னீர்க்குடம் உடைந்துவிட்டது, இனி எப்போது பிள்ளை பிறக்கும் என்பதே ஆவல் தரும் கேள்வி.

இதுபோல யோன் எப் கெனடி கொலை, சுவீடிஸ் பிரதமர் ஓலப்பாமே கொலை மர்மம் துலங்காத கொலைகளும் வெளிவர வேண்டிய நிலை உள்ளது.

உலகம் பாதுகாப்பானது, ஜனநாயகமானது என்ற கருத்துக்களுக்கு இந்த கொலைகள் பெரும் சவாலாக இருப்பது கவனிக்கத்தக்கது.

0 Responses to டயானா கொலை மெய்ப்பாதுகாவலர் அதிர்ச்சி ஏழு மர்மத் தகவல்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com