Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைதி என்பது ஜனநாயகச் சந்தையிற் கூட இலகுவிற் கிடைக்கக்கூடிய ஒரு பண்டம் அல்ல. அது ஜனநாயக வெளியில் கவனமாகத் தயாரிக்கப்படக் கூடிய ஒரு உற்பத்தி மட்டுமே. இப்பேற்பட்ட ஒரு அமைதியை நோக்கிய வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் வட மாகாண முதல்வரின் ஆரம்ப உரை அமைந்திருக்கிறது.

அது ஈழத் தமிழரின் இன்றைய நிலையையும் தற்காப்பையும் எதிர்காலப் பாதுகாப்பையும் பின்புல ஆதரவு வழங்கும் சர்வதேச சமூகத்தையும் வரலாற்றையும் எதிர்காலத்தையும் மனதிற் கொண்டு எழுதப்பட்ட ஒரு பன்முகப் பார்வை கொண்ட ஒரு முதிர்ந்த உரையென்பதை இன்றைய சர்வதேச கால நிலையை உணர்ந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

இந்த உரை உணர்ச்சி மயமானதாக அல்லாமல் சம கால உலகாயுத உரையானதாக அமைந்ததைக் கேட்ட பொழுது, கிழக்கு மாகாண மக்களும் இவ்வாறான ஒருவரை முதல்வராகத் தெரிந்திருக்கலாமே என எண்ணத் தோன்றிற்று.

இந்த வட மாகாண சபை என்பதும் 13வது திருத்தச் சட்டம் என்பதும் உறுதியான நிரந்தர அதிகார பலமற்றவை என்பது தெரியாத விடயம் அல்ல. ஆனால் வல்லவனிற்கு புல்லும் ஆயுதம் என்ற ரீதியில், புதிதாகத் தெரிவானவர்கள் இதனைப் பாவிக்க இடமுண்டல்லவா.

முன்னைய காலங்களில் தமிழர்கள் குறைவான தீர்வுகளைப் பெற்றால் இனப் பிரச்சினையே தீர்ந்து விட்டது என்ற மாயையை தோற்றுவிக்க கொழும்பு அரசுகள் முயன்றதால், அரை குறைத் தீர்வுகளை தமிழர் தரப்பு ஏற்க மறுத்து வந்தது.

ஆனால் இன்றைய நிலை மாறியுள்ளதால் கிடைப்பவற்றை ஏற்க மறுக்காது பெற்றுக் கொள்வதோடு அவற்றை வைத்து அதி உச்சப் பயன்பாட்டை பெற்றுக் கொண்டு அடுத்த படிக்குச் செல்ல முனைவதே விவேகமாக முடியும்.

இப்படிப் பார்க்கையில் வட கிழக்கு இணைந்த பொம்மை மாநில நிர்வாகத்தைக் கூட, பெயரளவிலாவது தக்க வைத்திருந்தால் வட கிழக்கு பிரிவு தவிர்க்கப்பட்டிருப்பதோடு, எல்லைகளும் நகராதிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் ஒரு மாகாண நிர்வாகமாக இருந்த போதிலும், சர்வதேசத்தை நோக்கிய ஒரு ராஜீக அம்சங்களை உள்ளடக்கியிருப்பது நிச்சயமாக உலகால் அவதானிக்கப்பட்டிருக்கும்.

இதன் வீச்சங்களையும் நோக்கங்களையும் தார்ப்பரியங்களையும் சரிவரப் புரியாது, கொழும்பு மேல் மட்டத்திலிருந்து கூட உடனடியாக மறுப்புக்கள் வெளிப்பட்டுள்ளது இது காலாகாலமாக தென் இலங்கை வாக்கெடுப்புக்களிற்கு மட்டும் ஜனநாயகத்தை பாவித்தமையும், பின்னர் ஜனநாயக விரோத சட்ட திட்டங்களையும் வகுத்து வந்தமையையுமே பிரதிபலித்துள்ளது.

தவிர, உலகில் பல்வேறு நாடுகளிலும் மாகாண ரீதியான பொலிஸ் நிர்வாகம் இயங்கும் போது, சிறிலங்கா மட்டும் பொலிஸ் திணைக்களத்தைப் பிரிக்க இயலாது என்பது நகைப்பிற்கிடமானதாகும்.

மேலும் இதற்கு பதிலளிக்க வேண்டிய தலைமைகள் மௌனமாக இருக்கையில் கூக்குரல்கள் ஒலித்துள்ளமை தென் இலங்கை தலைமைகள் எதையாவது ஒரு தீர்வை வழங்கினாலும் அரச நிர்வாக இயந்திரமும் தென் இலங்கை மக்களும் கூட பேரினவாத அரசியல்வாதிகளினதும் மேலாண்மை நினைப்பிலும், பேரின மதவாதிகளைப் போல மஹாவம்ச சிந்தனையிலும் இருக்கும் யதார்த்தம் தன்னை இனம் காட்டியுள்ளது. இத்தகைய மறுதலிப்புக்கள் சர்வதேச சமூக அழுத்தங்களை இனி சர்வதேச நெருக்கடிகளாகவும் தலையீடுகளாகவும் மாற்றாது என்று கூறிவிட இயலாது.

வர்த்தக மயப்பட்ட இன்றைய உலகக் கிராமம் அமைதியான உலகிலேயே சந்தைப்படுத்தலை தொடர இயலும். உற்பத்திகளோடு மூலதனங்களையும் தேசிய எல்லைகளைத் தாண்டி நகர்த்த இயலும். இதற்கு சர்வாதிகார அரசுகளை விட, ஜனநாயக அரசுகளே உகந்தவை என்பதால் இன்றைய உலகம் ஜனநாயகத்தை வலியுறுத்தி வருகின்றது. இங்கு ஜனநாயகம் உண்மையானதும் நியாயமானதுமாகும் போதே அமைதி பிறக்கும்.

அமைதி என்பது போர் போன்ற தீய அம்சங்களை அகற்றுவதால் தோன்றுவதாகும். அது புதிதாகப் பிறக்கும் ஒரு அம்சம் அல்ல. அது எற்கனவே இருந்த ஒன்றாகும். எனவே உண்மையான அச்சமற்ற அமைதி வட கிழக்கில் தோன்ற இராணுவம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோதாவில் அன்னாரின் உரை இராணுவ ஆளுனர் பிரசன்னமாக இருக்ககையிலேயே நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தவிர, இந்த அமைதிக்கான வாய்ப்பிற்கான உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை அடக்கியதாக திரு விக்னேஸ்வரன் அவர்களின் உரை அமைந்திருந்தது. எங்கள் இலங்கைத் தீவில் அமைதிக்காக வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் என்றுமே பாவிக்கப்பட்டதில்லை.

நமது மூத்த தலைவர் அமரர் திரு சேர் பொன் இராமநாதன் பெரும்பான்மையினரிற்கு வழங்கிய ஒத்தாசை, ஒத்துழைப்பு, புரிந்துணர்வு தொடக்கம் பிரபாகரன் 2002 சமாதான ஒப்பந்தத்தின் பின் வழங்கிய வாய்ப்புக்கள் வரை நமது ஒவ்வொரு தலைமையும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றது.

இதில் அமரர்கள் திரு ஜீ ஜீ, தந்தை செல்வா, தலைவர் அமிர், தம்பி பிரபா போன்ற அனைவரும் அடங்குவர். எனவே புதிதாகப் புறப்பட்டள்ள நீதவான் விக்னேஸ்வரன் என்னத்தைச் சாதித்து விடப் போகிறார் என்பது அறிவார்ந்த கேள்வியாக முடியாது.

காரணம் பலமான புலிகளை வீழ்த்திய அதே சர்வதேச சமூகம் இன்று தமிழர் தேசியக் கூட்டமைப்பின் வாயிலாக, தமிழர் தேசியக் கூட்டமைப்பையும் மாகாண சபையையும் ஜனநாயகக் கருவிகளாக்கி ஈழத் தமிழரிற்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க முயல்கின்றன என்பதில் உண்மையில்லாமல் இல்லை என்பதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதுடன் அதனை விரைந்து செயற்பட வைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இதே போன்ற ஒரு நம்பிக்கை அன்னை இந்திராவின் பின்புலத்தில் தலைவர் திரு அமிர்தலிங்கம் காலத்தில் தோன்றிய போதும் அது இந்திரா காந்தி அவர்களின் கொலையால் சிதறிப் போனதெனலாம்.

எனவே தமிழர் தேசியக் கூட்டமைப்பிற்கு மேலும் இடஞ்சல்களையும் தடைகளையும் உணர்ச்சி வசமான செயற்பாடுகளால் ஏற்படுத்தாது தமிழர் தேசியக் கூட்டமைப்பிற்கு சமாந்தரமான ஒரு சர்வதேச அனுசரணை நிலைப்பாட்டு புலம்பெயர் சிவில் அமைப்புக்கள் புலமபெயர் தேசமெங்கும் தோன்ற வேண்டும் அல்லது ஆதரவு அளிக்கப்பட வேண்டும். வெறும் உணர்ச்சிப் போக்கிலான முடிவுகளும் நகர்வுகளும் செயற்பாடுகளும் திருப்தியைத் தருமே ஒழிய பலன் எதையும் வழங்கிவிடப்போவதில்லை.

சுவரின்றி ஓவியம் வரைந்து விட இயலாது. தவிர, தமிழரின் தாகம் கை விடப்படக் கூடியதோ மறக்கப்படக் கூடியதோ அல்ல அது முதற் காதல் போல் என்றுமே தலை காட்டிக் கொண்டேயிருக்கும். எனவே இலட்சியத்தை கைவிடல் என்ற ஓலம் அர்த்தமற்றது என்பதுடன் உணர்வு பூர்வமானது என்றே கூற வேண்டும். மாந்தரின் முடிவுகள் உணர்ச்சி வேகமுள்ளவையாக இருப்பதைக் காட்டிலும் சமயோசிதமானவையாகவும் உலகாயுதமானவையுமாகவே அமைய வேண்டும்.

அத்தோடு இந்த நகர்வு அறிவாரந்து வளைந்து தொடர வேண்டும். அப்போது தான் முள்ளிவாய்க்காலுள் முன் மொழியப்பட்ட இராஜதந்திர நகர்வு புலம் பெயர்ந்தோரால் ஆரம்பிக்கப்படுவதாக கணிக்க இயலும்.

அதாவது எங்கு, யார் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுப்பது என்பதை விட, கிடைத்த மாகாண சபையையும் சர்வ தேச அனுதாப அனுசரணையையும் எவ்வாறு தமிழர் தரப்பு பருப்பை வேக பயன்படுத்தலாம் என்பதே அறிவார்ந்த அம்சமாக இயலும்.

அவ்வாறே பொதுநலவாய அமைப்பின் கொழும்பு மகாநாட்டிற்கு கனடா, இந்தியா மற்றும் இங்கிலாந்தின் பிரதமர்கள் போகாமல் விடுவதால் கொடுபடும் எதிர்ப்பை விட, அங்கு சென்று உரிய முறையில் பகிரங்கமாகப் பேசுவதால்  அதிக அழுத்ததத்தை பிரயோகிக்க இயலும் என்றொரு பக்கமும் உண்டு.

இதனால் ஒரிருவர் போகாமல் விடும் அதே சமயம் ஒரிருவர் அங்கு சென்று நேரடியாகக் கண்டிப்பதன் வாயிலாக  அதிக பலன் கிடைக்கவும் இடமுண்டு. எனவே போகக் கூடாது போன்ற உணர்ச்சி வேக முடிவுகளை விட உலகாயுத அறிவாரந்த முடிவுகளை எடுக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற படிப்பினை பற்றியும் ஒரு வசனம் பெரும்பான்மையினரை நோக்கியிருந்தமை அவதானிப்பிற்குரியது.

அத்தோடு, முதலாவது அமர்விலேயே இராணுவ ஆளுனர் அகற்றப்பட வேண்டும் என்று கோரியது அனாவசிய காலந்தாழ்த்தலை தவிர்ப்பதோடு, விவகாரத்தை சர்வதேசத்தை நோக்கி உடனடியாகத் தள்ளி உள்ளதெனலாம்.

எனவே இந்தக் கன்னி உரையை வல்லவனிற்கு புல்லும் அயதம் என்ற அடிப்படையில், வல்ல வட புலத்தின் அமைதிக்கான புல்லாயுத அமர்வென்றே சித்தரிக்க வேண்டியுள்ளது. அதாவது இந்த வட மாகாண சபை வாயிலாக ஏதாவது கிடைத்தாலும் சரி, கிடைக்காமல் போனாலும் சரி இரண்டுமே தமிழர் தரப்பிற்கு சாதகமாகது தான்.

ஏனென்றால் எதையுமே வழங்காத போது உலகம் தொடர்ந்தும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்று இந்தத் தடவையும் எதிர்பார்க்க இயலாது. இந்த நிலைக்கு முள்ளிவாய்க்காலுள் பலியான ஒவ்வொருவரினதும் உயிர்கள் வலுச் சேர்க்கின்றன எனலாம்.

இதுவரை காலமும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் சமாதானத்திற்காகவும் தமிழ் மக்களை மீட்கவும் என போர்களை கட்டவிழ்த்து விட்ட அரசுகள் அமைதிக்காக எந்தப் போர்களையும் நடாத்தத் தேவை இல்லை. போர் புரியும் மேலதிக இராணுவத்தை படிப்படியாகவேணும் விலக்கிக் கொண்டால் அதுவே சர்வ தேசத்தை திருப்திப்படுத்தும்.

பூநகரான் குகதாசன்

kuha9@rogers.com

0 Responses to வல்ல வடபுலத்தின் புல்லாயுத முதலமர்வு - பூநகரான் குகதாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com