Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பாரா இல்லையா? என்ற கேள்விக்கு ஓரளவு விடை கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொமன்வெல்த மாநாட்டில் பங்கேற்க கொழும்பு செல்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம், இலங்கை மீதான இந்தியாவின் வெறுப்பு என்பதைவிட, தமிழ்நாட்டின் அழுத்தங்களும், அடுத்த சில மாதங்களில் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலுமேயாகும்.

அதற்காக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மீது இந்தியா திருப்தியான நிலையிலுள்ளது என்று அர்த்தமில்லை.

என்னதான் இருதரப்பு உறவுகள் பலமாக இருப்பதாக கூறிக்கொண்டாலும், இலங்கையின் நிலைப்பாடுகள் மீது இந்தியாவுக்கு ஆழமான வருத்தங்களும் அதிருப்திகளும் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் விடயத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கப் போகும் முடிவை இலங்கை அரசாங்கம் ஓரளவுக்கு கணித்து விட்டது என்றே தெரிகிறது.

அதனால்தான் கடந்த மாதம் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசுவதற்கு இலங்கை அதிகாரிகள் நேரம் ஒதுக்கக் கோரியிருந்தனர்.
ஆனால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை.

எதற்காக இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்புக்கு 25ம் தேதிக்கும் 27ம் தேதிக்கும் இடையில் நேரம் ஒதுக்கித் தரும்படி இலங்கை அரசாங்கம் கேட்டிருந்ததாகவும், ஆனால் தான் 27ம் தேதியே நியூயோர்க் சென்றதால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதைவிட வேறு காரணமில்லை என்று அவர் கூறியிருந்தாலும் கூட இது இலங்கை அரசாங்கம் திட்டமிட்டே சந்திப்பைத் தவிர்த்ததாக இந்தியத் தரப்பில் ஒரு கருத்து உள்ளது.

மன்மோகன் சிங் 27ம் தேதியே நியூயோர்க் செல்வதாக சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஐநா பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது சில நாட்களுக்கு முன்னர்தான்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியாக நினைத்திருந்தால் மன்மோகன் சிங்கைச் சந்தித்திருக்க முடியும் என்று இந்தியத் தரப்பு கருதுகிறது.
ஏனென்றால் ஐநாவுக்கு 22ம் திகதி புற்ப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த மாதம் 2ம் திகதியே கொழும்பு திரும்பினார்.

எனவே சந்திப்பை வேண்டுமென்றே தவிர்த்ததாக ஒரு கருத்து இந்தியத் தரப்பிடம் உள்ளது.

அவ்வாறாயின் எதற்காக சந்திப்புக்கு நேரம் ஒதுக்கும்படி கோரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

ஐநா கூட்டத் தொடருக்குச் சென்றிருந்த போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்து விட்டு இந்தியப் பிரதமரைச் சந்திக்காமல் போனால் அது வில்லங்கமான விவகாரமாகி விடும்.

அதைவிட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மூலமே அழைப்பு அனுப்பப்பட்டது.
நியூயோர்க்கில் அத்தகையதொரு அழைப்பை விடுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் சூழலில் அதனைப் புறக்கணித்தால் இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

அதனால்தான் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கும்படி இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து நேரில் அழைக்க வேண்டும் என்று அரசாங்கம் உறுதியாக இருந்திருந்தால் நியூயோர்க் வாய்பபைத் தாராளமாக பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால் இந்தியப் பிரதமர் நேரில் அழைத்தாலும் வருவது சந்தேகமே என்பதை தெரிந்துகொண்ட அரசாங்கம் நேரில் அழைத்தும் புறக்கணித்து விட்டார் என்ற விடயம் முதன்மைப்படுத்தப்பட்டு விடும் என்பதால் சந்திப்பிலிருந்து நாசூக்காக நழுவியிருக்கலாம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை கொழும்புக்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் இறுதிக்கட்ட முயற்சியும் தோலிவியைத் தழுவும் நிலைக்குள்ளாகியுள்ளது.

இந்தியப் பிரதமராக பதவி வகித்த காலங்களில் அவர் அயல் நாடான இலங்கைக்கு ஒருமுறை கூட அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.

சார்க் மாநாட்டுக்காக மட்டும் 2008ம் ஆண்டில் அவர் கொழும்பு வந்திருந்தார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் மன்மோகன் சிங்கை இலங்கைக்கு அழைத்துவர பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

புதுடில்லியில் வைத்து 2010ம் ஆண்டில் கொழும்பு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

ஆனாலும் அந்தப் பயணம் இன்று வரை கைகூடவில்லை.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வதில்லை என்ற உறுதிப்பாட்டில் மன்மோகன் சிங் இருப்பதாக சில காலங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.

எது எவ்வாறாயினும் அயல்நாடான இலங்கைக்கு இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பதற்கு வலுவான காரணம் அவசியம்.
அதுவும் கொமன்வெல்த மாநாட்டை புறக்கணிப்பதாக அவர் அறிவிக்காது போனாலும் இது ஒரு புறக்கணிப்பாகவே கருதப்படும்.

ஏற்கனவே கனேடியப் பிரதமரின் புறக்கணிப்பு அறிவிப்பின் பின்னர் மன்மோகன் சிங்கின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதிக்கு மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் மக்களின் உணர்வுகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட எல்லாக் காரணிகளையும் கருத்தில் கொண்டே கொமன்வெல்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஓரளவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு வரமாட்டார் என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது.

அதற்குப் பதிலாக துணை ஜனாதிபதி அன்சாரி அனுப்பி வைக்கப்படுவார் என்ற தகவல்களும் வெளியாகின்றன.

எவ்வாறாயினும் மன்மோகன் சிங் இல்லாமல் கொழும்பில் நடத்தப்படும் கொமன்வெல்த மாநாடு இலங்கைக்கு நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்யும்.
அதிகாரப்பகிர்வு 13வது திருத்தம் போன்ற விடயங்களில் மன்மோகன் சிங்கின் அழுத்தங்களில் இருந்து தப்பிவிட்டதாக இலங்கை அரசாங்கம் நினைத்தாலும் மன்மோகன் சிங் வராதுபோனால் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படுகிறது என்று உண்மையையும் உணர்த்தாமல் போகாது.

சுபத்ரா

0 Responses to மன்மோகன் சிங் வராமைக்கு என்ன காரணம்? - சுபத்ரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com