Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எறிகணைகளின் முழக்கங்களும் வேட்டோசைகளின் இரைச்சல்களும் வடபுலத்தின் புலர்வை நிச்சயப்படுத்திய காலம் மறைந்து செல்பேசிகளின் சீண்டல்களுடன் வலைத்தளங்களில் குறிப்பாக முகநூல்களின் அரவணைப்புக்களுடன் பொழுது புலரும் இவ்வேளைகளில் மீண்டும் அவல மரணங்களின் பதிவுகள் குடாநாட்டை அச்சுறுத்தி வருகின்றன.

அமைதியான நிலையிலிருந்து ஆதுரமான நிலைக்கு கடந்து போன சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலை ஞாபகப்படுத்தி நிற்கின்றன.

இம்மாதம் 1ம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் காங்கேசன்துறை வீதியின் மேற்குப் பக்கத்தில் நாச்சிமார் அம்மன் கோயில் அமைந்துள்ளது. அக்கோயில் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள தேர்முட்டிப் பகுதியில் நிறைந்த சனக்கூட்டம்.

மாலைக் கருங்கல்லில் எனது மோட்டார் வண்டி அவ்வீதி வழியே விரைந்து கொண்டிருந்தது. வீதியின் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு அகல விரித்துப் பார்வையை கூர்மைப்படுத்தியபடி விரைகிறேன்.

’என்ன...என்ன....என்ன பிரச்சினை ஏதேனும் அக்சிடனனே!’ என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி கூட்டத்தை சற்று விலக்கி அந்தக் கோரக் காட்சியைக் காண்கிறேன். கண்டபோது என்மனம் திடுக்குற்றது. சித்த பேதமிழந்து அப்படியே அந்தச் சனக்கூட்டத்துக்குள்ளே ஒருகணம் உறைந்து விடுகின்றேன்.

பேயறைந்தது போன்ற உணர்வு, கை கால்கள் நடுநடுங்க வந்த வேகத்திலேயே திரும்பி வந்து விடுகின்றேன். ஆ! என்ன கொடுமை! ஆடைகள் கலைந்த நிலையில் பெண்ணொருத்தியின் வெற்று உடல் கண்காட்சிப் பொருளாக அந்தத் தேர்முட்டியில் கிடத்தப்பட்டிருந்தது. அந்த உடலத்தை வேடிக்கை பார்க்கவென்று ஒரு கூட்டம்.

என்ன கொடுமை இறைவா! என்று மனதுக்குள் புழுங்கியவாறு எனது பயணத்தை தொடர்ந்தேன். அன்றிரவு முழுவதும் நித்திராதேவியின் வருகையை என்னால் நிச்சயப்படுத்த முடியவில்லை.

சபலமடைந்த என் மனது தேற்றுவாரின்றித் தவித்தது. அடுத்த நாள் விடியற்காலையில் பத்திரிகையை புரட்டும் போது நான்கண்ட அந்த நிட்டூரமான காட்சி பத்திரிகையின் முன்பக்கத்தை நிறைத்திருந்தது.

யார் அந்தப் பெண்? என்ற வினாவுக்கு விடைதேட என் கண்கள் பத்திரிகையை மேய்ந்தன. அரியாலைப் பகுதியில் அநாதரவான நிலையிலிருந்த மனநிலை பாதிப்படைந்த 45 வயதான பெண்தான். வன்புணர்வின் பின் மிகக் குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளாள் என்ற செய்தி என் மனதை ஆழமாக வருத்தியது.

யாழ்.குடாநாட்டில் அவல மரணங்களின் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது யாழ்ப்பாண மரணங்களின் தேசம் என்பதனை நிதர்சனப்படுதி நிற்கின்றது. வீதி விபத்துக்களால் விளையும் மரணங்கள், கொலைகள், தற்கொலைகளால் ஏற்படும் சாவுகள் என அவல மரணங்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற ஏக்கம் கலந்த தவிப்பு வடபுல மக்களின் மனங்களை குடைகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களது வாழ்வு சோகத்துடன்தான் விடியும்.

அந்தளவுக்கு இழப்புக்கள் துயரங்கள் கழுத்தை நெரிக்கும். நெஞ்சம் கொதிக்கும். வன் செயல்கள், கொலைகள் எல்லாவற்றையும் கண்டு பழக்கப்பட்ட எம்மினத்திற்கு தற்போதும் சாவு பற்றிய செய்திகள் காட்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

வடபுலம் அபிவிருத்தி அடைந்துள்ளது என்ற கோஷத்தை அர்த்தப்படுத்துவதற்காக வெறுமனே வீதிகளையும் கட்டடங்களையும் அமைப்பதனால் நிலைபேறான அபிவிருத்தியை எய்த முடியாது.

மக்களின் உள்ளார்ந்தமான நலன்களில் அக்கறை கொண்டு சட்டம் ஒழுங்குகள் சிறந்த முறையில் இயங்குவதற்கான இயங்குதளத்தை செப்பனிட வேண்டியது நல்லாட்சியின் தனித்துவமான பண்பு என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.குடாநாட்டை மையப்படுத்திய செய்தி பத்திரிகைகளைப் புரட்டும்போது தினமும் ஓரிரு அவல மரணங்கள் பற்றியதான செய்தி செய்தித் தாள்களை அணி செய்யும். குறிப்பாக வீதி விபத்துக்களால் உண்டாகும் சாவுகள்.

உயிரின் பெறுமதியினை மலினப்படுத்தி விடுகின்றன. யாழ்.போதனா வைத்தியாலை புள்ளி விபரப் பதிவுகளை நோக்கும்போது அவல மரணங்களின் எண்ணிக்கை உச்ச நிலையில் இருப்பதனை அவதானிக்கலாம்.

வீதி ஒழுங்குகள் சீரின்மையினால் உண்டாகும் வீதி விபத்துக்களை இயன்றவரை குறைக்கமுடிந்தும் கவனயீனமான வாகனம் ஓட்டுதல்கள் சவக்குழிகளை நிரப்பும் ஏதுக்களைத் தூண்டி விடுகின்றன.

இதற்கு மக்களை மாத்திரம் குறை கூறினால் மட்டும் போதாது. வீதி ஒழுங்கைப் பேணும் பொலிஸாரின் கைகளிலும் பொறுப்பு உண்டென்பதை யாரும் மறுதலிக்கமுடியாது.

சட்டம் ஒழுங்கைப் பேணுகின்ற பெருந்தகையினரான பொலிஸார் கவனமெடுத்து வீதி ஒழுங்கைப் பேணினால் அவல சாவுகளின் எண்ணிக்கையை இயன்றளவு குறைக்கமுடியும்.

அதுமட்டுமல்ல இப்பிரதேசத்தை அச்சுறுத்தும் அடுத்த பயங்கரமாக வன்செயல்களால் விளையும் கொலைகள் சாவுகளின் தொகையை கூட்டி நிற்கின்றன.

சினிமாக்களில் காட்டப்படும் கொலைக் காட்சிகள் போல கர்ண கொடூரமான கொலைகள் அரங்கேறி வருகின்றன.

தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்ற நிலையில் சில வன்முறையாளர்கள் சட்டத்தை தம் கையில் எடுக்க முற்படுகின்றனர். விளைவு கொலைகள் விழும் தேசமாக இப்பூமி மாறுகின்றது.

சினிமா பாணியிலான காடைத் தனங்கள், சண்டித்தனங்கள் கோலோச்சுவதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது அதிகார வர்க்கம். ஒழுக்கம் மிகுந்த கல்வியே கருந்தனம் என்றிருந்த நம்மவர்கள் அச் செயலொழுங்கில் நின்று பின்வாங்கி புறமொதுக்கி வாழத் தலைப்படும் துர்ப்பாக்கிய சூழமைவு எமது பிரதேச அபிவிருத்தியை பின்னகர்த்தி நிற்கின்றது.

அல்லும் பகலும் சதா பெண்ணுடலை வேட்டையாடுவதற்கென அலையும் காமக் கழுகுகளின் பார்வைகள் சிலவேளை ஏதுமறியாத அப்பாவி பிஞ்சுகளின் உடல்கள் மீதும் விழுகின்றன.

தினமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறி வரும் சிறுமிகள் மீதான பாலியல் வேட்டைகள் இப்பிரதேசத்து பெண்களின் எதிர்கால வாழ்வை சூனியப்படுத்தி நிற்கின்றன.

பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அச்சமூட்டும் சூழல் இங்கு கருக்கொள்வது எமது இனத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக அமையாது. மாறாக யுத்த வேளையில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதை விடவும் மோசமான அதிர்வுகளை எம்மினம் உணரும் காலம் வெகு விரைவில் வரலாம்.

யுத்தத்திற்கு பின்னரான சூழலில் வட பகுதி பல்வேறு குற்றச் செயல்களின் அரங்கமாக விளங்குவது சமூக ஆர்வலர்களை கவலையிலும் விசனத்திலும் ஆழ்த்தி வருகிறது.

மது, போதைப் பொருட்கள் முதலிய வகையறாக்களுக்குள் அடிமைப்பட்டிருக்கும் இன்றைய இளம் சந்ததியினை மீட்டெடுக்கும் மீட்பர்களின் தேவை பெரிதும் உணரப்படுகின்றது. வேண்டப்படுகிறது.
தரமற்ற சினிமாக்களின் கட்டற்ற வரவினால் அவற்றின் சாயல்களைத் தழுவியதான குற்றச் செயல்களின் பெருக்கம் நாள் ஒன்றும் பொழுதொன்றுமாக வேகமெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறான குற்றச் செயல்களுக்குத் தீனிபோடும் தரமற்ற தமிழ் சினிமாக்களின் வரவை தடைசெய்வதுடன் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் குறைப்பதற்குச் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடன் நடவடிக்கையில் இறங்கவேண்டிய தருணமிது.

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் மனித பண்பாட்டுக்கே உதவாத இக்குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தாமல் வாளாது இருந்தால் அதன் தாக்கத்தை முழு நாடுமே அனுபவிக்கும் காலம் விரைவில் வரும் என்பதையும் மறுதலிக்க முடியாது.

சட்டங்கள் சிலவேளை ஏமாந்து போனாலும் போகலாம். ஆனால் தர்மம் நிச்சயம் பழிவாங்கியே தீரும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இருத்திச் செயற்பட வேண்டும்.

எஸ். நதிபரன

0 Responses to மீண்டும் மரண பூமி­யாகும் யாழ்.குடா­நாடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com