Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவம், தமிழர்கள் மீது இரசாயனத் தாக்குதலை நடத்தியதாக, 2009ம் ஆண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

அத்துடன், இதுவரை அதனை ஆராய்வதற்கு எந்தவொரு தரப்பும் அல்லது நாடும் முயலவில்லை. சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானவுடன், உடனடியாகத் தமது ஆய்வாளர்களை அங்கு அனுப்பிவைத்த ஐ.நா. கூட, போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்டதன் பின்னர் கூட முள்ளிவாய்க்கால் மண்ணிற்குச் சென்று, அங்கு எவ்வாறான அழிவு நடந்தது என்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், முள்ளிவாய்க்காலில் இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ‘ஈழமுரசின் சிறப்பு ஆய்வாளர் வீரமணி’ தாயகத்தில் இருந்து தகவல்களை அனுப்பிவைத்துள்ளார். இந்த ஆதாரங்களைக்கொண்டு இறுதி இன அழிப்புப் போரில் தமிழர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரால் சர்வதேசத்தினால் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தச் சர்வதேசம் விசாரணையில் இறங்குமா..? என்ற கேள்வியே எழுந்துள்ளது.



முள்ளிவாய்க்காலில் உள்ள கிணறுகளின் தண்ணீரில் அதிக செறிவுள்ள இரசாயனம் கலந்துள்ளது என்ற கவலைக்குரிய விடயத்தை இன்று நாங்கள் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். புலம்பெயர் தேசத்தில் மட்டுமன்றி தாயகத்திலும் எவருமே அறிந்திராத இந்த உண்மைச் சம்பவத்தை இன்று நாங்கள் உலகுக்கு அம்பலப்படுத்துகின்றோம். பேராதனைப் பல்கலைக்கழகமும் யாழ். பல்கலைக்கழமும் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட உண்மைகளை நாங்கள் இன்று வெளிப்படுத்துகின்றோம்.

ஆம், முள்ளிவாய்க்காலிலுள்ள நிலத்தடி நீரில் மக்களுக்கு கொடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் இன்று சர்வதேசத்தின் காதுகளை எட்டுகின்றது. உலகில் எவருமே அறியாமல் இருந்த முள்ளிவாய்க்கால் இன்று உலகில் எவராலுமே மறக்க முடியாத இடமாக மாறியிருக்கின்றது. இந்த இடத்தின் பெயரை உலக மக்கள் உச்சரிப்பதற்காக இலட்சக்கணக்கான எமது மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் தமது உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. பெருமளவான சொத்துக்களை இழக்க வேண்டியிருந்தது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை ஊனமாக்க வேண்டியிருந்தது. இந்த இழப்புகளுக்கு பின்னர் தான் முள்ளிவாய்க்கால் மிகுந்த வலிகளைச் சுமந்து, அதிக குருதியில் குளித்து உலகில் ஒரு குழந்தையாக பிறந்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் குறியீடாக உள்ள முள்ளிவாய்க்கால் இன்று மட்டுமல்ல என்றைக்குமே எமது போராட்டத்தின் அழிவுகளை உலகத்திற்கு எடுத்தியம்பக்கூடிய இடமாக மாறியிருக்கின்றது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்க என்ற ஏகாதிபத்திய நாடு யப்பானின் நாகஷாகி மற்றும் ஹிரோசிமா ஆகிய இடங்களில் வீசிய அணுகுண்டினால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் நாகசாகி, ஹிரோசிமா ஆகிய இரண்டு நகரங்களும் இன்றும் அந்த யுத்த வடுக்களை எடுத்தியம்பும் சாட்சியங்களாக விளங்குகின்றன. அதேபோன்று வன்னியிலும் ஆனந்தபுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்கள் தமிழ் மக்களால் என்றும் மறக்க முடியாத இடங்களாக மாறியிருக்கின்றன.
போராட்டத்தின் இறுதிக் கட்டங்களுக்கு முன்னதாக ஆனந்தபுரம் என்ற இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் ஒன்றுகூடி அடுத்த கட்டத் தாக்குதல் உத்திகள் தொடர்பாக ஆராய்ந்துகொண்டிருந்தனர். இதன்போது சிறீலங்கா இராணுவத்தினர் திடீரென்று அந்த இடத்தைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். புலிகளும் பதில் தாக்குதல்களை நடத்தினர். புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத படைத்தரப்பு இங்கு இரசாயனத் தாக்குதல்களை நடத்தியது. இதன் தாக்கத்தால் எமது பல தளபதிகளை நாம் இழக்க நேரிட்டது. இந்த விபரீதத்தை தமிழ் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் பேரவலம்.

புலிகளின் தாக்குதல் உத்திகளுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்காப் படையினர் முள்ளிவாய்க்காலிலும் இரசாயனத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த தாக்குதல்களால் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். மக்களின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டன. மக்களைக் கொன்றொழித்த பின்னரும் படையினர் முள்ளிவாய்க்காலில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஏனெனில், எஞ்சிய புலிகள் பதுங்கியிருந்து தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவார்களோ என்று அஞ்சிய படையினர் முள்ளிவாய்காலில் உள்ள பற்றை மறைவிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் இரசாயனத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதல்களின் தாக்கங்களால் முள்ளிவாய்க்கால் மனிதர்கள் வசிக்க முடியாத இடமாக மாறியிருக்கின்றது.





ஆனாலும், தாங்கள் பிறந்து வளர்ந்த இடங்களை கைவிடத் தயாராக இல்லாத தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மீள்குடியேறியிருக்கின்றனர்.

பொதுமக்களின் மீள்குடியேற்றத்தைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் அதி நவீன இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற உண்மை தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து பேராதனை பல்கலைக்கழக பௌதீகவியல் மாணவர் குழாம் ஒன்று  கல்விச் சுற்றுலா மேற்கொண்டு முள்ளிவாய்க்காலுக்குச் சென்றுள்ளது. அங்கே வெள்ளா முள்ளிவாய்க்கால் என்ற இடத்திற்குச் சென்ற மேற்படி மாணவர் குழாம் அங்குள்ள கிணறொன்றில் தண்ணீர் அள்ளிக் குடித்துள்ளனர். அதன்போது நாக்கில் எரிவுத் தன்மையை உணர்ந்த மாணவர்கள் அது தொடர்பாக தங்கள் விரிவுரையாளருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நீரை ஆய்வுக்குட்படுத்த விரும்பிய மேற்படி மாணவர்களும் விரிவுரையாளரும் அந்த தண்ணீரில் சிறிதளவை எடுத்துச் சென்றனர்.

அதனை தமது பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த தண்ணீரில் அதிகளவில் இரசாயனச் செறிவு படிந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மீண்டும் வெள்ளாமுள்ளிவாய்க்காலுக்குச் சென்று மேலும் பல கிணறுகளிலிருந்து நீரை எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது அனைத்துக் கிணறுகளிலும் அதிக இரசாயனச் செறிவு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.



மேற்படி இரசாயனச் செறிவுள்ள தண்ணீரையே முள்ளிவாய்க்கால் மக்கள் குடித்துக்கொண்டிருந்தனர். தற்போதும் அதையே குடிக்கின்றனர். இதனைப் பொறுக்க முடியாத பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் குழுவினூடாக இந்த விடயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேள்வியுற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அங்குள்ள கிணறுகளில் நீரை எடுத்துச் சென்று யாழ்.பல்கலைக்கழ ஆய்வுகூடங்களில் ஆய்வுக்குட்படுத்தியபோது அந்த நீரில் இரசாயனம் கலந்திருந்தமையை அவர்களும் அவதானித்தனர்.





இதன் பின்னரும் இந்த மாணவர்கள் அங்கு சென்று வேறு கிணறுகளில் இருந்து ஆய்வுக்காக தண்ணீரை எடுத்து வந்தனர். இதன் போது அங்குள்ள மக்கள் சிலரிடம் இந்தத் தண்ணீரில் நச்சுத் திராவகம் படிந்திருப்பதால் இதனைக் குடிக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில், யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல்துறை மாணவர்கள் இந்த விடயத்தை தமது விரிவுரையாளர்களுக்கு கூறியபோது குறித்த நீரில் இருந்த இரசாயனத்தின் தாக்கம் மிகவும் வீரியம் மிக்கது என்பதை உணர்ந்த போதிலும் விரிவுரையாளர்கள் அதை நம்பவில்லையென்றும் தெரியவருகின்றது. நாங்கள் நேரில் சென்று நீரைப் பெற்று வந்து ஆய்வு செய்தால் மட்டுமே இதனை நாம் நம்புவோம் என்று கூறிய அவர்கள் தாங்கள் நேரடியாகச் சென்று நீரைப் பெற்று வந்து ஆய்வு செய்ததில் அவர்களாலேயே ஊகிக்க முடியாத அளவிற்கு அந்த நீரில் இரசாயனத் தாக்கம் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



மேற்படி இரசாயனம் கலந்த நீரைக் குடித்தால் அது மனித உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று இதனை ஆய்வு செய்த மாணவர்களும் விரிவுரையாளர்களும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கர்ப்பவதிப் பெண்கள், சிறுவர்கள் போன்றோர் இந்த நீரைப் பருகினால் மிகவும் உடனடிப் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய நிலை ஏற்படும் என்றும் மேற்படி மாணவர்களும் விரிவுரையாளர்களும் எச்சரித்துள்ளனர்.

வன்னியில் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் உலகத்திலேயே தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தியிருந்தனர். புலிகள் வன்னி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்ளைப் பயன்படுத்துகின்றார்கள் என்று கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னரே படையினர் தெரிவித்திருந்தனர். புலிகள் படையினருக்கு எதிரான தாக்குதல்களின் போது பயன்படுத்திய குண்டுகளினால் படையினர் கண் எரிவுக்கு உள்ளாகினர் என்றும் படையினரின் உடல் தோல்களில் எரிவுகள் ஏற்பட்டன என்றும் அப்போதைய படைகளின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

படையினர் இவ்வாறு பெரிய பொய் ஒன்றைக் கூறியபோதே யாழ்.குடாநாடு உட்பட கொழும்பிலிருந்து வெளியாகின்ற தமிழ் ஊடகங்களின் ஊடகவியலாளர்களும் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும், படையினர் இவ்வாறு கூறுவதன் அர்த்தம் என்ன என்பதை உடனடியாகவே கண்டுபிடித்தனர்.




அதாவது, படையினர் தாங்கள் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்காகவே புலிகள் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்துவதாக முந்திக்கொண்டு கூறுகின்றார்கள் என்று மேற்படி தரப்புகள் தெரிவித்திருந்தன. இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போன்று சில வாரங்களிலேயே படையினர் ஆனந்தபுரத்தில் ஒன்றுகூடிய தளபதிகள் மீது இரசாயனக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இறுதியாக யுத்தம் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் வரை புலிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் படையினர் இரசாயன ஆயுதங்களையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தியிருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் படையினர் அதிகமாகவே இரசாயனத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது முள்ளிவாய்க்கால் வரை சென்று திரும்பிய நிலையில் தற்போது சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற பொது மக்களின் உடல்களில் இருந்து இரத்த மாதிரியை எடுத்து சோதனைகளுக்கு உட்படுத்தினால் அதில் இரசாயனக் குண்டுகளின் தாக்கம் இருப்பதை கண்டுபிடிக்க முடியும்.



வன்னியில் இத்தனையும் நடந்த நிலையில், யுத்தம் முடிந்த கையோடு சிறீலங்காவிற்கு வந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராணுவ உலங்குவானூர்தியில் வன்னியை, முள்ளிவாய்க்காலை சுற்றிப் பார்த்தார். பின்னர் கொழும்பிற்குச் சென்ற அவர் அங்கு வைத்து கருத்து தெரிவிக்கையில், வன்னியில் இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்றார்.

உண்மையிலேயே இவர் ஐ.நா செயலாளர் நாயகமா அல்லது சிறீலங்கா ஜனாதிபதி மகிந்தவின் சித்தப்பாவா என்று தமிழ் மக்கள் கேள்வி கேட்டனர்.

ஆய்வுகளுக்கு பின்னர் தான் இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டதாக இல்லையா என்பதை அறிய முடியும். ஆனால், இவரோ வன்னி மண்ணில் கால் பதிக்காமலே மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக கருத்துச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பின்னரும் ஐ.நா சபை சிறீலங்காவிற்கும் அதன் ஜனாதிபதி மகிந்தவுக்கும் ஆதரவாகச் செயற்பட்டது என்பதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் கொழும்பில் வைத்து வெளியிட்ட கருத்து ஒன்றே போதுமானதாக இருந்தது. நாங்கள் இன்று ஐ.நா செயலாளர் நாயகத்தைப் பார்த்துக் கேட்கின்றோம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைப் பார்த்துக் கேட்கின்றோம் பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு முள்ளிவாய்க்கால் கிணற்றிலுள்ள இரசாயனங்களின் வகைகளைக் கண்டுபிடிக்க நீங்கள் முன்வருவீர்களா? அல்லது, சர்வதேச நாடுகளின் உதவியுடன் முள்ளிவாய்க்காலில் ஒரு ஆய்வை மேற்கொள்வீர்களா?

யுத்தம் நடந்த பிரதேசமொன்றில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் ஆய்வுகளை நடத்துவதற்கு உங்களுக்கு சிறப்புரிமை இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சாசனத்தில் சிறிலங்காவும் கைச்சாத்திட்டிருக்கின்ற காரணத்தால் இங்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு உங்களுக்கு இருக்கின்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி இந்த செயற்பாட்டையாவது செய்ய உங்களால் முடியுமா? அப்படிச் செய்தால் யுத்தத்தின் போது தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய குற்றச்சாட்டுக்கு பிரதியுபகாரமாக இது அமையும். அதை ஐ.நா செய்யத் தவறும் பட்சத்தில் கனடா போன்று ஈழத் தமிழ் மக்களில் உண்மையான அக்கறையுள்ள நாடுகள் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு முள்ளிவாய்க்காலில் உரிய ஆய்வுகளைச் செய்ய முன்வருமா? இதுவே தமிழ் மக்களின் இன்றைய கேள்வி.

நன்றி: ஈழமுரசு (22/10/2013)

2 Responses to முள்ளிவாய்க்காலில் இரசாயனத் தாக்குதல்! ஆய்வுகளில் உண்மை கண்டறியப்பட்டது - சர்வதேசம் விசாரணையில் இறங்குமா..?

  1. Brutal sri lankan army.Very-very sad see this pictures

     
  2. It is all instructed by Sonia Italian widow of Rajiv Gandhi who is also a mixture of Arabs Muslims and mixed Kashmir Brahmin. These unwanted elements should be removed from the Indian political scene.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com