Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதியாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியையும் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் புத்த விஹாரை அமைக்கத் திட்டமிடுகிறது இலங்கை அரசு.

30வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் அடையாளமாக ஈழ மண்ணில் இப்போது எதுவும் இல்லை.

இந்த நிலையில், ஈழ மண்ணில் பெருகியோடிய குருதியாற்றின் சுவடை, தஞ்சையில் பதித்திருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!’
ஈழத் தமிழர்கள் அனுபவித்த போர்க் கொடுமைகள், நினைவு முற்றத்தின் சிற்பங்களாகப் பரந்து விரிந்திருக்கின்றன.

அந்தத் தமிழர்களின் வலியை, வேதனையை, கதறலை, ஆக்ரோஷத்தை அச்சு அசலாகப் படியெடுத்திருக்கிறது ஒவ்வொரு சிற்பமும்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் நேரடிக் கண்காணிப்பில் நூற்றுக்கணக்கான சிற்பிகள், பல ஓவியர்களின் கூட்டு உழைப்பில் உருவான முற்றத்தின் சிற்பங்களின் பிரமாண்டம் பிரமிப்பூட்டும் அதே சமயம், மனதின் ஈரத்தைக் கசியவைக்கின்றன!

முற்றத்தின் நடுவில், 40 தொன் எடையுள்ள தமிழ்ப் பாவையின் சிற்பப் பீடம். அதன் இரு பக்கங்களிலும் ஈழத்தின் அவலத்தையும், தமிழர்களின் உயிர்த் தியாகத்தையும் கற்சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். தமிழ்ப் பாவை சிற்பத்தின் பீடத்தினுள் எட்டிப்பார்த்தால், நமது முகத்தைப் பிரதிபலிக்கிறது முப்பரிமாணக் கண்ணாடி.

வெள்ளையர்களை எதிர்த்த தமிழ் மன்னர்கள், மொழிப் போர் தியாகிகளின் படங்களோடு விடுதலைப் புலித் தளபதிகளின் படங்களும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.

முற்றத்தின் அரங்கில் பிரதான மரியாதை, பார்வதி அம்மாளுக்கும் வேலுப்பிள்ளைக்கும்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் உள்ளேயே தங்கியிருந்து வேலைகளைப் பார்வையிடும் பழ.நெடுமாறன் தெரிவிக்கையில்,
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நல்லகண்ணுவும் வைகோவும் இந்த முற்றத்துக்கான அடிக்கல் நாட்டியபோது, ஒரே ஒரு நினைவுத் தூண் அமைப்பது மட்டும்தான் நோக்கம்.

ஆனால், தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ஈழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டதோடு, புலிகளின் வெற்றிச் சின்னங்களையும் அழித்து சிங்கள இராணுவத்தின் சின்னங்களை அங்கே நிறுவிவிட்டார்கள்.
அதன் பிறகே, ஈழத்தில் நிகழ்ந்த அவலம் ஆவணம் இன்றி கடந்துவிடக் கூடாது என்று இந்த முற்றத்தை வடிவமைக்கத் தீர்மானித்தோம்.

இந்தப் பெருங்கனவை நனவாக்க கல் கொடுத்தவர்கள், மண் கொடுத்தவர்கள், மரம் கொடுத்தவர்கள், புகைப்படங்களைச் சேகரித்துக் கொடுத்தவர்கள்... என இது மிகப் பெரும் உழைப்பு!

40 தொன் எடையுள்ள தமிழ்ப் பாவை சிற்பத்தை, 15 அடி மேடையில் ஏற்றி வைத்தோம்.

இந்த முற்றத்தினுள் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்கு ஆதாரமாக இருந்தவை ஓவியர் வீரசந்தானம் வரைந்த ஓவியங்கள்தான் என்றார் பழ. நெடுமாறன்.
ஓவியர் வீரசந்தானம் தெரிவித்ததாவது,

மகாபலிபுரத்தில் இருக்கும் 'அர்ஜுனன் தபசு’ போன்ற நீளமான கல்லின் இரண்டு பக்கமும் ஈழ வரலாற்றைப் பதிவுசெய்யும் ஓவியங்களை கோட்டோவியமாக வரைந்து கொடுத்தேன்.

ஈழத்தின் தேசியப் பறவை, தேசிய மரம், அந்த மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தார்கள் என்பது முதல், யாழ் நூலகம் எரிப்பு, ஜெகன், குட்டிமணி, தங்கதுரை படுகொலை, வெலிக்கடை சிறை உடைப்பு... என, தமிழர் போராட்ட வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளை வரைந்தேன்.

இன்னொரு பக்கம் இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்ட விதம், இரசாயனக் குண்டுகள் கொத்துக் கொத்தாக உயிரைப் பறித்த விதம்... என சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தை ஆவணம் ஆக்கினோம். அந்தக் கோட்டோவியங்களை ஆதாரமாக வைத்து சிற்பங்களை வடிவமைத்தனர்.
ஈழப் படுகொலைகள் குறித்து உலகம் இன்று வரை மௌனமாக இருக்கிறது.

ஆனால், இந்த முள்ளிவாய்க்கால் முற்றம், ஈழப் படுகொலையின் பின்னணியையும் வேதனைக் காட்சிகளையும் தலைமுறைகள் தாண்டியும் மக்களிடம் கொண்டு சேர்க்கும்!'' என்கிறார் வீரசந்தானம்.

முற்றத்தில் சிற்பங்களை வடிவமைத்திருப்பது, மாமல்லபுரம் ஸ்தபதி முருகன் குழுவினர். முருகன் கூறியதாவது,

பொதுவாக, சிற்பம் செய்ய கறுப்புக் கல்தான் சிறந்தது. அதிலும் இறுகிய கல் வேண்டும். தமிழகம் முழுக்க அப்படியான கல் தேடி அலைந்தோம். புதுக்கோட்டையில் அஸ்திவாரம் அமைக்கப் பயன்படும் வெள்ளைக் கல்லையும், ஊத்துக்குளியில் சிற்பங்களுக்கான கறுப்புக் கல்லையும் தேர்ந்தெடுத்தோம்.

தமிழ்ப் பாவை சிலையை அமைக்க 55 தொன் எடையுள்ள கல்லை ஊத்துக்குளியில் இருந்து கொண்டு வந்து, சீராக்கி, செதுக்கி முடித்தபோது, அது 40 தொன் எடையோடு நிலை கொண்டது.

நூற்றாண்டுகள் பல கடந்தாலும் நிலைத்து நிற்கும் தரத்தோடு உருவாக்கப்பட்டிருக்கின்றன இந்தச் சிற்பங்கள்!' என்கிறார் முருகன்.
நவம்பர் 8, 9, 10 தேதிகளில் மூன்று நாள் விழாவாக திறப்பு விழா காண இருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’.

0 Responses to துரோகிகளுக்கு அழைப்பில்லை! நவம்பரில் திறப்பு விழா காண இருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com