Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சனைகள் குறித்தும், தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் தீரவும் காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித் குரல் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:-

வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க செல்வதை நியாயப்படுத்தி சில காரணங்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்தமிழர் பிரச்சனைகள் உள்பட பல்வேறு பிரச்சனைகளை இலங்கை அரசுடன் பேச வேண்டியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது பற்றியும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்கிற போது எதிர்கொள்கிற தாக்குதல்கள் குறித்தும், இந்தியாவின் கருத்துக்களை இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்கிற வாய்ப்புக் கிடைக்கும்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை, அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வெற்றியடையச் செய்வதில் உறுதி கொண்டுள்ளோம். தமிழர்களுக்கு அரசியல் சட்டத்தின்படியும், இந்திய இலங்கை உடன்பாட்டின்படியும் கூடுதல் அதிகாரம் வழங்குவதை உறுதி செய்யும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு என்பவை சல்மான் குர்ஷித் வெளியிட்டிருக்கும் காரணங்கள் ஆகும்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொது செயலாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தற்போது அளித்த பேட்டியில், இலங்கை அரசின் 2 லட்சம் ராணுவ படையினரில் சுமார் ஒன்றரை லட்சம் பேர், தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முகாமிட்டுள்ளனர். அமைதியை நிலைநாட்டுதல், கண்ணி வெடிகளை அகற்றுதல் என்ற போர்வையில், தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் ராணுவமயமாக்கப்பட்டுள்ளன.

10 லட்சம் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில், தமிழர்களுக்கு சொந்தமான 6,500 ஏக்கர் நிலங்களை சிங்கள ராணுவம் தன்வயப்படுத்தி உள்ளது. போரினால் விதவைகள் ஆக்கப்பட்ட 84 ஆயிரம் பேரில், 54 ஆயிரம் பேர் இலங்கை வடக்கு மாகாணத்தில் மட்டும் வாழ்கின்றனர். 12 ஆயிரம் அனாதை குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் 2 ஆயிரம் பேர், கதியற்று வாழவழியற்று வாடி வருகின்றனர்.

பெரும்பான்மையினராக தமிழர்கள் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 78 சதவீதமாக இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்று 48 சதவீதமாக குறைந்துள்ளது. 10 லட்சம் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் குடியேறி, புலம்பெயர்ந்தவர்களாகிவிட்டனர்.

இந்த 2 மாகாணங்களிலும் தற்போது சுமார் 18 லட்சம் தமிழர்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினார். இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக இந்தியா பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக சல்மான் குர்ஷித் சொல்லி இருக்கிறார். அந்தத் திட்டங்களின் பலன் பெரும்பாலும் சிங்களவர்களுக்கே செல்கிறது. குறைந்தது 4 பேருக்கும் அதிகமாக இருக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்படும் என்று சட்டம் இயற்றி, புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெரும்பாலானவை சிங்களவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஐ.நா. அவை பொதுச்செயலாளர் பான் கீ மூனால் அமைக்கப் பெற்ற, இந்தோனேஷியாவைச் சேர்ந்த தரூஸ்மான் தலைமையிலான மூவர் குழு 2011 ஏப்ரல் மாதம் அளித்த அறிக்கையில், ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் வெளிஉலகுக்குத் தெரிந்து விடாமல், தடயங்கள் அனைத்தையும் அழிக்கும் முயற்சிகளை பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கை வெளிவந்த பிறகாவது, இலங்கை அரசு விழிப்புணர்ச்சி பெற்றதா? ஐ.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு அமைக்கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன் பிறகாவது, அதன் பிறகாவது இலங்கை அரசு தனது மனசாட்சியின்படி நடந்து கொண்டதா? கடந்த செப்டம்பர் மாதம் ஒருவார காலம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஆணையாளர் திருமதி நவநீதம் பிள்ளை, சுற்றுப் பயணத்தை முடித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, இலங்கையின் பாதுகாப்புப் படைகளால் மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், போர்க்குற்றம், பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளின் பேரில் யாரும் கைது செய்யப்படவில்லை. பத்திரிகையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளதை எண்ணி இலங்கைச் சிங்கள அரசு வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டாமா? உலக நாடுகளும், சர்வதேச சமூகமும், ஐ.நா. அவை போன்ற உலக நாடுகளின் அமைப்புகளும் இலங்கைச் சிங்கள அரசின் மனக்கதவைத் திறந்து, நீதியையும் நியாயத்தையும் உணர்ந்து நடந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமானதும் நம்பகமானதுமான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண் டும் என்பதும் ஈழத் தமிழர்கள், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, ஐ.நா. அவை மேற்பார்வையில், ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும்; இவையே ஈழத்தமிழர்களுக்கு, பன்னெடுங்காலமாக உருவாக்கப்பட்டு வரும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வாக அமைந்திடும் என்பதும்தான் திமுக சார்பிலும் டெசோ அமைப்பின் சார்பிலும் முன்வைக்கப்படும் கோரிக்கை ஆகும்.

எனினும் இப்போதைக்கு, இலங்கை சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அவரே சுட்டிக்காட்டியுள்ளபடி இலங்கை அரசோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை முழுமையாக விலக்கிக் கொள்ளவும்; 13 ஆம் திருத்தத்தின்படி அனைத்து உரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கிடவும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு நிதி, காவல்துறை, நிலம் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் கிடைத்திடவும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் ஓய்ந்திடவும் ஆக்கப்பூர்வமான ஏற்பாடுகளை செய்வதோடு; சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், ராணுவத்தினர் நடத்தியுள்ள பாலியல் கொடுமைகள் குறித்து காமன்வெல்த் மாநாட்டில் குரல் கொடுத்திடவும் முன்வருவாரா? என்பதே தமிழ் மக்களிடையே கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

இந்தப் பிரச்சனைகளைப் பற்றி விவாதித்து, அடுத்து செய்ய வேண்டியது குறித்து முடிவெடுக்கவே, நாளை (17.11.13) டெசோ அமைப்பின் கூட்டம் என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 Responses to மனித உரிமை மீறல், மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் சல்மான் குர்ஷித் குரல் கொடுக்க வேண்டும் - கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com