Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்குற்றவாளிகளான ஜப்பானும், சிறீலங்காவும் சந்தைக்கு வரப்போகின்றன..

ஆசியப்பிராந்தியத்தில் அதிக ஆளுமையுள்ள சக்தி யார்.. சீனாவா.. இல்லை ஜப்பான், தென்கொரியா, அமெரிக்க அணியா…? பலம் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.

சீனா, ஜப்பான் இரண்டு நாட்டு விமானப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, கடும் முறுகல் நிலை பசுபிக் பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது.

போர் ஒன்றை நடாத்துவதற்கான நோக்கம் இரு தரப்பிலும் இல்லையாயினும், கரணம் தப்பினால் மரணம் என்பது போல சிறிய அசம்பாவிதம் இடம் பெற்றாலே பெரும் பாரதுரமான விளைவுகள் ஏற்பட்டுவிடக்கூடிய நிலை இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு சீனக்கடற் பகுதியில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மூன்று தீவுகளும், அவற்றை அண்டிய கடற்பிராந்தியமும் இந்தப் பலப்பரீட்சையில் மைய இரிசாக மாறியுள்ளன.

கடந்த பத்து ஆண்டு காலமாக இப்பகுதியில் சர்ச்சையை உருவாக்கி வருகின்ற இரண்டு தீவுகளில் ஒன்று சீனாவுக்கு சொந்தமான டயாயு மற்றயது ஜப்பானுக்கு சொந்தமான சென்காக்கு.

தனக்கு சொந்தமான தீவில் விமானப்படைத் தளத்தை அமைத்த சீனா அதை அண்டிய பகுதியினால் செல்லும் போர் விமானங்கள், பயணிகள் விமானங்கள் கப்பல்கள் யாவும் இனி தனது அனுமதியைப் பெற்றே அப்பகுதியைக் கடக்க வேண்டும் என்று சென்ற வாரம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து இப்பிராந்தியத்தில் ஊமைக்கோபமாக கடந்த பத்தாண்டு காலமாக இருந்துவந்த நெருக்கடி சென்ற வாரம் யாரும் எதிர்பார்க்காமல் பசுபிக் சமுத்திரத்தின் ஓர் ஓரத்தில் சட்டெனத் தீப்பிடித்துக்கொண்டது.

ஜப்பானுக்கு சொந்தமான சென்காக்கு தீவிற்குள் தனது கடற்பிராந்தியத்தை ஊடறுத்து ஜப்பானிய பொருட்களை எடுத்துச் செல்ல முடியாதென சீனா தடுத்தது.

இதனால் வெகுண்டெழுந்த ஜப்பான் தனது பயணிகள் விமானங்களை அப்பகுதியால் சீன அனுமதியின்றி பறக்கவிட்டது, அமெரிக்காவும் தனது பீ 52 போர் விமானங்கள் இரண்டை ஆயுதங்கள் இல்லாமல் பறக்கவிட்டது.

பதிலடியாக ஏற்கெனவே இருந்த இந்தத் தீவுகள் குறித்த இரு நாடுகளுக்குமிடையேயான ஒப்பந்தத்தை சீனா மதித்து நடக்கவில்லை, மறுபடியும் சர்வதேசத்தில் கெட்ட பெயரை சம்பாதிக்கும் வழியில் சீன கம்யூனிஸ்டுக்கள் இறங்கிவிட்டார்கள் என்ற மேலை நாட்டு விமர்சனங்கள் சீனாவுக்கு எதிராகத் அனல்கக்க ஆரம்பித்தன.

மறுபுறம் இரண்டு நாடுகளும் தனது கருத்தை கடுகளவும் மதிக்காத காரணத்தால் சீனா தனது விமானப்படை, கடற்படைகளை ஆத்திரத்துடன் அப்பகுதிக்குள் நகர்த்தியுள்ளது.

பதிலடியாக ஜப்பானிய பிரதமர் அபே தமது தீவின் மேலால் ஆளில்லா விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு புறம் சீனா மறுபுறம் ஜப்பான், தென்கொரியா என்ற இரு பசுபிக்பபிராந்திய அணிகளுடன் அமெரிக்காவும் சேர முக்கோண முறுகலாக மாறியிருக்கிறது.

அடுத்த வாரம் அமெரிக்க உப அதிபர் யோய் பிடன் சீனா, ஜப்பான், தென்கொரிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ள இருக்கும் தருணத்தில் விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து பசுப்பிராந்திய சர்வதேச விவகார நோக்கர்கள் பின்வரும் கருத்துக்களைக் கூறுகிறார்கள்.

முதலாவது அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்திற்கான தனது புதிய ஆதிக்கக் கொள்கைகளை அமல் செய்ய ஆரம்பித்துவிட்டது, அதைத் தடுத்து தன்னை நிலை நிறுத்த வேண்டிய புதிய தேவை சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது இதுவே சீனாவின் தள்ளாட்டத்திற்குக் காரணம்.

இரண்டு உலகின் முதல் வல்லரசு என்ற கனவுகளுடன் உள்ள சீனா தன்னைச் சுற்றியுள்ள 360 பாகைகளிலும் தனது அயல்

நாடுகளை மதிக்காது ஆக்கிரமிப்பு கரங்களை எல்லை மீறிப்போட்டுள்ளதால் சீனாவைச் சுற்றிய 360 பாகைகளிலும் பதட்டம் காணப்படுகிறது – இது சீனாவின் பிரச்சனை என்கிறார்கள் அமெரிக்க நோக்கர்கள்.

ஜப்பான், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுடனும் பாரிய வர்த்தகத்தை வளர்த்துள்ள சீனா, அதற்கு முற்றிலும் முரண்பாடான காரியங்களிலும் இறங்கியுள்ளது, சீனாவில் தோன்றியுள்ள குழப்பநிலையின் அடையாளம் என்கிறார்கள்.

மேலும் இப்பகுதிக்குள் உள்ள பாதுகாப்பு சிக்கலானது பேசித்தீர்க்க முடியாதபடி விறைப்படைந்துள்ளதாக கொங்கொங் பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளர் கூறுகிறார்.

மறுபுறம் 2012 ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜப்பானிய பிரதமர் அபே பதவிக்கு வந்த நாள் முதலே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் என்று அமெரிக்க அதிபரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார், ரஸ்யாவின் சென்பீற்றஸ்பேர்க்கில் கடந்த செப்டெம்பர் நடந்து முடிந்த ஜி 20 மாநாட்டில் இது குறித்து பேசலாம் என்று ஒபாமா கூறினாலும் அந்த ஒற்றைச் சந்திப்பில் பத்தாண்டு சிக்கலையும் பேசி முடிக்க இயலவில்லை.

மறுபுறம் கடந்த அக்டோபர் ஜப்பான் விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு செயலர் யோன் கர்ரி ஜப்பானிய மண்ணில் இரண்டாவது உலக யுத்தத்தின்போது கொல்லப்பட்ட பெயர் தெரியாதவர்களின் சமாதியை சென்று பார்வையிட்டார்.

இந்தச் சம்பவத்தை ஆதாரமாக வைத்து புதிய குற்றத்தைச் சுமத்தியது சீனா..

இந்தச் சமாதிக்குள் கிடக்கும் சடலங்கள் அனைத்தும் 2ம் உலக யுத்த காலத்தில் ஜப்பான் நடாத்திய போர்க்குற்றச் செயல்களுக்குள் வருகிறது என்றது.

ஒரு போர்க்குற்றவாளி நாட்டுடன் அமெரிக்கா இராணுவ நடவடிக்கைக்கு துணை போக முடியுமா என்று சீனா புதிய துரும்புச் சீட்டை எடுத்துப் போட்டது.

இதற்கு பதிலளித்த அமெரிக்கத்தரப்பு ஜேர்மனியும் போர்க்குற்றவாளி நாடுதான் அதனுடன் சர்வதேச சமுதாயம் சேர்ந்தியங்குகிறது என்றுள்ளது.

இந்த இடத்தில்தான் இலங்கைத் தீவை கதறக்கதற இழுத்துச் செல்லப்போகும் இராஜதந்திரச் சுழி மெல்லென சுழிப்பெடுத்திருக்கிறது.

வரும் மார்ச் ஜெனீவாவில் சிறீங்காவுக்கு எதிராக வரவுள்ள போர்க்குற்ற பிரேரணை சிறீலங்காவுடன் சீனா சேர்ந்தியங்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

அப்படியொரு கேள்வி வரமுன்னர் ஜப்பானின் போர்க்குற்றத்தை இழுத்துவிட்டுள்ளது சீனா, பசுபிக்கில் உள்ள போர்க்குற்றவாளி தீவுகள் நாடான ஜப்பானுடன் அமெரிக்கா சேர்ந்தியங்க முடியுமானால், இந்து சமுத்திரத்தில் உள்ள போர்க்குற்றவாளி தீவான சிறீலங்காவுடன் சீனா சேர்ந்தியங்குவதில் என்ன தவறு.. என்ற துரும்புச் சீட்டு இதில் இருக்கிறது.

வகுத்தும் தொகுத்தும் பார்த்தால்..

பொதுநலவாய மாநாடு நடந்தபோது சிறீலங்கா என்ற தென்னை மரத்தில் கமரோன் என்ற தேள் கொட்ட இப்போது கிழக்குச் சீனக்கடலில் நெறி கட்டியிருக்கிறது என்று சிந்தித்தால் இது ஓர் அழகான தூரத்து அரசியல் ஓவியமாகக் காட்சியளிப்பது தெரியும்.

டேவிட் கமரோன் உட்பட மேலை நாடுகள் சிறீலங்காவின் போர்க்குற்றம் குறித்து மேலும் மேலும் இறுக்கமாகப் பேசப்போகின்றன.

காரணம் சிறீலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான இரக்கமா.. இல்லை..

அமெரிக்காவினால் போடப்பட்டுள்ள ஆசியப் பிராந்தியத்திற்கான 21 ம் நூற்றாண்டின் ஆதிக்க வலையமைப்பு அப்படியான சூழலை ஏற்படுத்துகிறது.

அன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆரம்பிக்கப்பட்டபோது உருவான அரசியல் சுழியில் தமிழர்கள் மாட்டுப்பட சிங்கள இனவாதம் ஆனந்தமாக பயணம் செய்தது.

இன்று அமெரிக்காவின் ஆசியப்பிராந்திய சுழிக்குள் சிங்கள இனவாதம் சிக்குப்பட்டு கதறியழ தமிழினம் ஆனந்தமாகப் பயணிக்கப்போகிறது.

உலகத்தின் முதலிடத்திற்கு வர கனவு காணும் சீனாவுக்கு முதலில் ஆசியாவில் முதலிடத்திற்கு வந்துபார் என்று அமெரிக்கா விடுத்துள்ள இந்தச் சவால் இலங்கைத் தீவிலும் அடிதலையான மாற்றங்களை ஏற்படுத்தினால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

அலைகள்.

0 Responses to சீனா – ஜப்பான் இரு நாடுகளுக்குமிடையே முறுகல்...

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com