Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எந்த நாடும் எங்களுக்கு உத்தரவிட முடியாது. போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று எங்களை நிர்ப்பந்திக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என, முன் எப்போதையும் விட திமிருடன் ஒலிக்கிறது இலங்கை அதிபர் ராஜபக்சவின் குரல்.

பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட பதற்றமோ, பதில் சொல்ல வேண்டுமே என்ற குற்ற உணர்ச்சியோ, அந்தக் குரலில் இல்லை.

மாறாக, அறநெறிகள் மிக்க அரசன் தன் மீது கூறப்படும் அவதூறான குற்றச்சாட்டுகளைக் கண்டு வெகுண்டு எழுவது போன்று அவர் பேசுகிறார்.

ஆனால், ராஜபக்சவிடம் இருப்பது அறநெறியா, இனவெறியா என்பதை வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ராஜபக்சவின் தற்போதைய திமிர்ப் பேச்சு, திடீரெனத் தொடங்கியது அல்ல.

2008-ல் மாவிலாறில் தொடங்கி, 2009-ல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்த வரையிலும் ராஜபக்சவின் அத்தனை இரக்கமற்ற கொடுங்கோன்மைகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் துணை நின்றன.

பொருள் கொடுத்து, கருவி கொடுத்து, தோள் கொடுத்தன. ஓர் இனப்படுகொலையை, 'பயங்கரவாத ஒழிப்பு’ என்று ராஜபக்ச நியாயப்படுத்தியதை ஏற்றுக்கொண்டார்கள்.

இலங்கை அதிபரின் வாய்க்கொழுப்புக்கு அடியுரம் இட்டவர்கள் இவர்கள்தான், இப்போது மனித உரிமையும் பேசுகிறார்கள்.

அந்த நியாயத்தின் வரம்பு, கேலிக்குரியது. அது, கொலை செய்தவனிடம் தன்னைத்தானே விசாரித்துக் கொள்ளச் சொல்கிறது.

அந்த நாடக விசாரணைக்கு ஒத்துழைக்கவும், பெயர் அளவுக்கான தீர்வுக்கு இணங்கி வரக்கூட இலங்கை அதிபர் சம்மதிக்க மறுக்கிறார்.

பல்லாயிரம் உயிர்களை ஆற, அமரக் கொன்று முடித்து ஒரு நாட்டையே சுடுகாடாக மாற்றி வைத்திருக்கும் பேரினவாத அரசனிடம், கோரிக்கை வைத்து நியாயம் பெற முடியுமா? 'முடியாது  என்பதை கடந்த நான்கு ஆண்டுகளில் ராஜபக்ச எத்தனையோ முறை தன் சொந்த வார்த்தைகளில் நிரூபித்திருக்கிறார்.

இதோ இப்போதும், 'போர்க் குற்ற விசாரணையை ஏற்க முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் கமரூனின் கோரிக்கையை நிராகரித்து, மற்றொரு முறையும் நிரூபித்திருக்கிறார்.

எனினும், போருக்குப் பிந்தைய புனரமைப்பு என்பதில் இருந்து போர்க்குற்ற விசாரணை என்பதை நோக்கி இந்தக் கோரிக்கை மாறுவது ஒரு நல்ல அறிகுறியே.

இதை, இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கும் இடத்தை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும்.

அதற்கு, இலங்கையின் அராஜகப் போக்கைக் கண்டிக்கும் குரல்களின் எண்ணிக்கையை ஒற்றைப்படையில் இருந்து பன்மைக்கு உயர்த்த முயல வேண்டும்!

0 Responses to எந்த நாடும் எங்களுக்கு உத்தரவிட முடியாது! இனவெறியின் அறநெறி முகம்! விகடன் ஆசிரிய தலையங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com