Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..?

இந்த ஆண்டு கொமன் வெல்த்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் அது சனல் 4 நிருபர் கெலும் மக்ரேதான் என்று துணிந்து கூறலாம்.

அப்படிக் கூறுவதற்கான அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன, 2009 வன்னிப்போரில் சிறீலங்கா எவ்வளவு மடைத்தனமான தவறுகளைப் புரிந்து இப்போது கையறு நிலையில் நிற்கிறதோ.. அதைவிட பெரிய தவறை கெலும் மக்ரே விடயத்தில் இழைத்திருக்கிறது.

சரியாக நடந்திருந்தால்.. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன் வெல்த் கதாநாயகனாகியிருப்பார்… பாவம் தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சிறீலங்கா அனுப்பி அந்த வாய்ப்பை பறிகொடுத்தார்.

கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கும்வரை கதாநாகனாக இருந்தவர் கனேடிய பிரதமர் ஸ்ரெபன் கார்பரேதான் ஆனால் கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கியவுடன் அவருடைய புகழையும் விஞ்சிவிட்டார்.

மறுபுறம் கனேடிய பிரதமர் சிறீலங்கா மீது வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சரியானவையே என்பதை நேற்று தமிழர்கள் பேசினார்கள் இன்று உலகமே பேச ஆரம்பித்துவிட்டது.

எப்படியோ கெலும் மக்ரேவுடைய புகழை வானுயர கொண்டு சென்ற பெருமை தூரப்பார்வை செத்துப்போன சிங்கள இனவாதத்தையே சாரும்.

நாடகத்தின் முதற் காட்சியில்.. பிரிட்டன் நிருபர் குழுவில் இருந்த காரணத்தால் கெலும் மக்ரேக்கு பலத்த சங்கடத்துடன், வீசா வழங்கியது சிறீலங்கா..

அது முதலாவது கோணல்.. முதற் கோணல் இப்போது முற்றும் கோணலாகியிருக்கிறது..

வீசா வழங்கிய பின்னர் ஒருவரை நாட்டின் அந்தப்பகுதிக்கு போகக்கூடாது இல்லை இந்தப்பகுதிக்கு போக முடியாதென தடுக்க முடியாது.. அது வீசா நடைமுறைக்குற்றம்.

ஆனால் வீசாவை வழங்கிவிட்டு சிங்கள ஆட்சியாளர் அடுத்தடுத்து இழைத்த தவறுகள் அவர்களை வாழைப்பழத் தோலில் சறுக்கியது போல சர்ர்..ரென பாதாளம் நோக்கி இழுத்துச் சென்றது..

வடக்கிற்கு புறப்பட்ட மேலை நாடுகளில் நிருபர் குழுவை ஐந்து மணி நேரம் சோதனைச்சாவடியில் தடுத்து வைத்து, முதலில் தாம் யார் என்பதை புரிய வைத்தார்கள்.

அதன் மூலம் பொதுநலவாயத்தின் முகத்தில் வாரி எடுத்த கரியை பொதக்கென அப்பியது சிறீலங்கா..

இந்த நாட்டிடமா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாயத் தலைமையை கொடுக்கப் போகிறீர்கள் சீமான்களே..?

அடுத்த பெரும் தவறாக கொழும்பில் இருந்து வடக்கே செல்லும் விமான சேவைகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது, காரண காரியம் இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியானது.

இப்படித்தானே.. அன்று வன்னிக்கு போகவிடாமல் செஞ்சிலுவைச்சங்கத்தையும், ஐ.நா குழுவையும் திட்டமிட்டு தடுத்தீர்கள்.. அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு..?

வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..?

அதைத் தொடர்ந்து யூலைக்கலவர கூத்தாட்ட ரயில் பயண நாடகத்தை அரங்கேற்றியது.

கெலும் மக்ரே சென்ற ரயில் அனுராதபுரத்தைத் தாண்டியதும் மறிக்கப்பட்டது.. அவர் இதே ரயிலில் வருவதை ஆர்பாட்டக்காரருக்கு சொன்னது யார்..?

அதைவிட அவலம் இதுபோலத்தானே யூலைக்கலவரத்தின்போது ரயில் வண்டிகள் மறிக்கப்பட்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு ரயில் என்பது கொலை அச்சுறுத்தல் கொண்டது என்ற பயங்கரம் இன்றுவரை மாறவில்லையே.. இனியும் வேண்டுமா.. வடக்கிற்கு ரயில்…?

வடக்கே வாருங்கள் என்று மன்மோகன் சிங்கை அழைத்தார் கூட்டமைப்பு முதல்வர் விக்கினேஸ்வரன்..

மன்மோகன் சிங் வடக்கே வந்திருந்தால் அவரும் இதே ரயில் வண்டியில்தானா வரவேண்டும்..?

இந்தச் சீத்துவக்கேடு தெரியாமல் வடக்கிற்கு ரயில்பாதை போடுகிறதாம் இந்தியா..?

கொழும்பு திருப்ப்பட்ட கெலும் மக்ரே பொதுநலவாய சட்டதிட்டங்களுக்கு மாறாக சிறீலங்கா நடக்கிறது என்று தெரிவித்தார்.

வடக்கே செல்ல கெலும் மக்ரேக்கு விதிக்கப்பட்ட தடை வடக்கும் வன்னிபோல சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் கிடக்கிறது என்ற உண்மையை அம்பலத்தில் போட்டது.

அடுத்து என்ன நடந்தது..

கெலும் மக்ரே அளவு மீறி நடந்தால் அவருக்கு எதிராக தமது கரங்கள் நீளும் என்று கெகலிய ரம்புக்கவெல எச்சரித்தார்.

” அவருடைய பயணத்தைத் தொடர வழி செய்வோம்..” என்று கூற வேண்டிய கெகலியவின் தலைகால் புரியாத கருத்து பொதுநலவாயத்தின் ஜனநாயக பண்பின்மீது விழுந்துள்ள இன்னொரு அடி..

அத்துடன் நின்றார்களா..?

ஐ.தே.க உறுப்பினர் மங்களசமரவீரா கெலும் மக்ரேயை சந்தித்தது தவறு என்று அரசே பகிரங்கமாக கண்டித்தது..

இப்போது அரசின் உப குழுவொன்று சிறீகொத்தாவிற்குள் கற்களை வீசியபடி நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவையெல்லாம் எவ்வளவு நேரத்தில் நடந்தது..

வெறும் 48 மணி நேரத்தில்..

இதற்கெல்லாம் பொறுப்புக் கூறவேண்டிய மகிந்தராஜபக்ஷவோ பீ.பீ.சி நிருபர்களைக் கூட சந்திக்க மறுத்து மறைவாக நிற்கிறார் என்றால் இனவாதத்தின் முன் அவருடைய நிலையும் செல்லாக்காசுதான்.

இதுதான் இலங்கைத் தீவின் இரண்டாயிரமாண்டு கால தீரா தொழு நோய்..

அதற்கு முன்னதாக மகிந்தவிடம் போர்க்குற்றம் பற்றி கடுமையாக விசாரிக்கப்போவதாக பிரிட்டன் பிரதமர் கூறியுள்ளார்.

போயும் போயும் குற்றவாளியிடம் நீதி கேட்கப்போகிறாராம் கமரோன் பாவம் அவரால் வேறென்ன முடியும்.

இப்படி ஆளாளுக்கு அறுபத்து நாலு கருத்துக்களைத் தெரிவித்தாலும் அவை யாவுமே செல்லாக்காசான செப்படி வித்தைகளே…

இப்போது நமது முதற்கேள்வி.. இந்த ஆடுகளத்தின் கதாநாயகன் யார்..

யாருடைய கருத்தை வரும் வாரங்களில் உலகம் காது கொடுத்து கேட்கப்போகிறது..

பிரிட்டன் முதல் இந்தியா சிறீலங்கா தலைவர்கள் எவருடைய கருத்தையும் உலகம் கேட்காது.. கேட்கப்போவது கெலும் மக்ரேயின் தொகுப்புரையைத்தான்.

ஆம்..

2013 காமன்வெல்த்தின் கதாநாயகன் யார்..?

என்ற கேள்விக்கு பதில்.. கெலும் மக்ரேதான்.

ஓர் ஊடகவியலாளன் சரியாக செயற்பட்டால் அவனுக்கு முன்னால் உலகம் கால் தூசிக்கு சமம் என்பது நிதர்சனமாகியுள்ளது.

துப்பாக்கி முனையை விட எழுத்தாளனின் பேனா கூர்மையானது என்பது எவ்வளவு சரியான வாசகம்..

அலைகள்.

0 Responses to கொமன் வெல்த்தின் கதாநாயகன் கெலும் மக்ரே...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com