Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குற்றம் செய்தால் பொதுநலவாயம் என்பதும் தண்டிக்கும் அமைப்பாக மாறும்..

நீதியான, சுதந்திரமான, போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று பொதுநலவாய மாநாட்டு மண்டபத்தில் இருந்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.

நீதியான சுயாதீன விசாரணை அல்லது சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற அவருடைய கருத்து குற்றவாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த எச்சரிக்கையாகும்.

பொதுநலவாயம் என்பது பிரிட்டனால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும், ஆகவே உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்களின் காதுகளில் இந்தச் செய்தி முக்கிய பதிவாக மாறியுள்ளது.

இந்தக் குரல் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஆறுதல் மொழியாகும், இதை ஆதரமாக வைத்து அவர்கள் அடுத்த கட்டத்திற்குள் நுழைய புதிய வழி பிறந்துள்ளது.

முன்னதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துவிட்டுத்தான் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னர் போர்க்குற்ற விசாரணை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று கூறிய இந்தியரும், பொதுநலவாய செயலருமான கமலேஸ் சர்மாவின் முதுகில் கமரோனின் கருத்துக்கள் சவுக்கடியாக இறங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

மறுபுறம் பொதுநலவாயம் என்பது தண்டிக்கும் அமைப்பல்ல என்ற மகிந்தவையும் புரட்டி வீசி, போர்க்குற்றத்தை தண்டிக்கும்படி கேட்கவும், கண்டிக்கவும் பொதுநலவாயத்திற்கு உரிமை இருக்கிறது என்ற செய்தியையும் பதிவாக்கியுள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்ந 1948ற்கு பின்னர் பொறுப்புள்ள தலைவர் ஒருவர் வடக்கிற்கு விஜயம் செய்தது இதுவே முதற்தடவையாகும்.

வடக்குப்பற்றி பொய்யான, போலியான, நயவஞ்சகமான தகவல்களை சிங்கள ஆட்சியாளர் இதுவரை மேலை நாடுகளுக்கு வழங்கி வந்தார்கள் என்ற முதலாவது பெரிய உண்மை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் விஜயத்தினால் உலகின் முன்னால் அம்பலத்திற்கு வந்துள்ளது – இது வடக்கு மக்களின் நீதிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

உண்மையில் பிரிட்டனால் 1948 ல் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் தனது முழுமைப்பயனையும் அடையவில்லை அது பெரும்பான்மை மக்களுக்கு சாதகமாகவும், சிறுபான்மை மக்களுக்கு பாதகமாகவும் அமைந்துவிட்டதையும் கமரோன் காலதாமதமாகவேனும் புரிந்துள்ளார்.

சிறீலங்கா இனவாத சக்திகளால் எரியூட்டப்பட்ட யாழ் நூல்நிலையத்தில் வைத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனையும், எரியூட்டப்பட்ட உதயன் பத்திரிகை காரியாலயத்தில் வைத்து அதன் உரிமையாளர் பா.உ சரவணபவனையும் சந்தித்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பின் முக்கிய விடயம் எரியூட்டப்பட்ட இரண்டு இடங்களையும் அவர் தேர்வு செய்ததும், மறுபுறம் அகதி முகாமில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததும் சிறீலங்கா அரசுக்கு பிரிட்டன் தனது அதிருப்தியை தெரிவித்த முக்கிய கவன ஈர்ப்புப் புள்ளிகளாகும்.

சிறீலங்கா அரசுக்கு விரும்பத்தகாத இந்த மூன்று இடங்களையும் அவர் ஏன் தேர்வு செய்தார் என்பதை கண்டிப்பாக இனி உலகம் சிந்திக்கும்.

அதேவேளை பணம் கொடுத்து தூண்டிவிடப்பட்டதாகக் கருதப்படும் சிலரும் அங்கு அரசுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் என்ற போர்வையில் போலியான காட்சியை ஏற்படுத்த முயன்றதை அவருடைய கண்கள் பிரித்தறிந்துள்ளன.

இத்தனைக்குப் பிறகும் இப்படியொரு செயல் தேவையா..?

மேலும் வீதியில் புரண்டு, அழுது, கண்ணீர் வடித்த மக்களின் செயல் சிறீலங்காவிற்கு ஆதரவான அத்தனை பேருடைய வாதங்களையும் நடுச் சந்தியில் போட்டு தீ மூட்டியிருக்கிறது. இது கமரோனுக்கு ஏற்பட்ட பாரிய அதிர்ச்சி என்பதை மறுக்க முடியாது.

சுதந்திரத்தை வழங்கிய நாள் முதலே தாம் சிங்கள ஆட்சியாளரால் தொடர்ந்தேர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதை பிரிட்டன் புரிந்து கொண்ட பொன்னாள் இது.

அந்தப் புரிதலை..

அவர் மாநாட்டில் உரையாற்றியபோது..

அவருடைய உடல் மொழியால் உணர முடிந்தது.

மாநாட்டில் உரையாற்றிய கமரோன் மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்தார்.

முதலாவது அங்கு தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரும் அநீதி நடந்து முடிந்துள்ளது, இனியும் அதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது சுதந்திரமான, பாரபட்சமற்ற போர்க்குற்ற விசாரணை அவசியம்.

நீதியான சுயாதீன விசாரணை அல்லது சர்வதேச போர்க்குற்ற விசாரணை, ஐ.நாவின் மனித உரிமைக் கவுண்சில் இதை முக்கியமான கடமையாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ஆக வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள மனித உரிமைக்கவுண்சில் மாநாட்டில் கமரோன் தனது குரலை மேலும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வார் என்பதை உணர முடிகிறது.

இரண்டாவது புலிகள் மறுபடியும் போரை ஆரம்பிக்கலாம், ஆகவே இராணுவத்தை வடக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற கோத்தபாயவின் நாடகத்தையும் அவருடைய உரை நிராகரித்தது, புலிகள் மறுபடியும் போராட்டக்களத்திற்கு வரப்போவதில்லை ஆகவே சிவில் சமுதாய வாழ்வுக்கு இராணுவத்தை வைத்து இனியும் இடையூறு செய்யக் கூடாது.

முன்றாவது மகிந்த ராஜபக்ஷவுடன் பேசியபோது அவர் போருக்குப் பிற்பட்ட பணிகளை முடிக்க கால அவகாசம் வேண்டும் என்றார்.. பணிகளை முடிக்கக் காலம் எடுக்கும் என்பது உண்மைதான் ஆனால் அது திறந்த மனதுடன் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படுகிறது என்ற வெளிப்படை வேண்டும். காலம் முக்கியம் அதைவிட முக்கியம் காலத்திற்கான வெளிப்படை.

அபிவிருத்தி என்ற போர்வையில் புத்த விகாரைகளை அமைத்தல், பொதுமக்கள் வாழிடங்களை அரசே சூறையாடுதல் போன்ற விடயங்கள் அபிவிருத்தியல்ல, அது நீண்டகால பணியும் அல்ல என்பதையே வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற அவருடைய குரல் பதிவு செய்துள்ளது.

அதேவேளை அரசாங்கத்துடன் ஒத்து வாழ வேண்டிய நிலையில் உள்ள கிரிக்கட் ஆட்டக்காரர் முத்தையா முரளீதரனையும் சந்தித்தார், இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்க வேண்டியது பிரதமரின் கடமையாகிறது.

மாறாக புலிகளுடைய ஆதரவாளர் டேவிட் கமரோன் என்று சிறீலங்கா இனவாதிகள் நாளை பட்டங்கட்டக்கூடிய அபாயமும் இருப்பதாலும், அது அடுத்தகட்ட பணிகளுக்கு இடையூறாக அமையும் என்பதால் புலிகளுக்கு ஆதரவான குரலை அவர் அங்கு பதிவு செய்ய முடியாத நிலை இருந்துள்ளது.

எவ்வாறாயினும் பிரிட்டன் பிரதமரின் வடக்கு விஜயமும் அவர் கூறிய கருத்துக்களையும் வேத வாக்காக வைத்தே சர்வதேச சமுதாயம் வரும் நாட்களில் கருத்துரைக்கப் போகிறது.

சிறீலங்கா அரசாங்கம் விரும்பாத கருத்துக்களை யாராவது கூறினால் அவர்களை புலி ஆதரவாளர் என்று பட்டங்கட்டும் சிங்கள ஆட்சியாளருக்கு…

பதிலாக…

அதிரடியாக..

பிரிட்டன் பிரதமர் கூறிய போர்க்குற்ற விசாரணை வேண்டுமென்ற முன்னுதாரணத்தையே இனி உலகம் பேசப்போகிறது.

போர்க்குற்ற விசாரணை இல்லாமல், இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் சிறீலங்காவின் சார்பில் என்ன வாதங்களை முன்வைத்தாலும் அது செல்லாக்காசாகவே போகும் என்பதையும் கமரோனின் உரை நிறுவியுள்ளது.

எல்லாவற்றையும் விட முக்கியம்.. பொது நலவாயம் என்பது தண்டிப்பதற்குரிய அமைப்பு அல்ல என்ற மகிந்த ராஜபக்ஷ உரைக்கும் சரியான சவுக்கடி விழுந்திருக்கிறது.

போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்ற குரல் பொதுநலவாயம் குற்றவாளிகளை தண்டிக்கும் அமைப்பாகவும் இருக்கிறது என்ற தெளிவான செய்தியை எடுத்துரைத்திருக்கிறது.

அலைகள்

0 Responses to நீதியான சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை வேண்டும் - கமரோன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com