இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது, மனித படுகொலைகளே என்று உரோம் நகரை தலைமையகமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தன்னுடைய தீர்ப்பொன்றில் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை ஒன்றியம் மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் கூட்டமைப்பு ஆகியன கூட்டாக இணைந்து இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க கோரும் மனுவை நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்திருந்தன.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக ஜெர்மனியின் பெரிமனில் நிரந்தர தீர்ப்பாயத்தின் நீதிபதிகளுக்கு முன்னால் விசாரணைகள் நடைபெற்று வந்தன. இதன்போதே, இலங்கை அரசாங்கம் 2009ஆம் ஆண்டில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தீர்ப்பாயம் தீர்ப்பாளித்துள்ளது.
இதனிடையே, மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை பொதுவாக சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பது வழமையானது. ஆனாலும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மாநாட்டிற்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா? என்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் நிதிபதிகள் குழு அறிவித்துள்ளது.
அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவோ அல்லது பயங்கரவாதிகளாகவோ அடையாளப்படுத்த முடியாது எனவும் அந்த தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இடம்பெற்றவை, “மனித படுகொலைகளே“ என்று தீர்ப்பளித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Responses to இலங்கையில் 2009இல் இடம்பெற்றது ‘மனித படுகொலைகளே’: நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு