தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மரியாதை செலுத்தி நேற்று தென் ஆபிரிக்க தலைநகர் ஜோஹன்னஸ்பேர்க் காற்பந்து மைதானத்தில் மாபெரும் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது அரங்கில் அமர்ந்திருந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் ஆகியோர் இணைந்து டென்மார்க்கின் பிரதமர் ஹெல் தோர்னிங் ஷ்மித்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி வகையிலான புகைப்படம் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அரங்கமே நெல்சன் மண்டேலாவின் மறைவின் சோகத்தால் கவலையுற்றிருக்க அத்தருணம் இவ்வாறான செல்ஃபி வகையிலான புகைப்படங்களும், கலாட்டா நடவடிக்கைகளும் இந்த மூன்று நாட்டு அதிபர்களுக்கும் தேவையா என ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
நேற்று மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்காக சுமார் நூற்றுக்கணக்கான நாடுகளின் தலைவர்கள் அரங்கிற்கு வருகை தந்திருந்தனர். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முன்னாள் அதிபர்கள் புஷ், கிளிண்டன், இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதமர்கள் என பலர் நேரடியாக மைதானத்திற்கு வந்திருந்தனர்.
பாரக் ஒபாமா தனது உரையில், நெல்சன் மண்டேலாவைப் போன்று ஒருவரை நாங்கள் இந்த உலகில் மீண்டும் ஒரு போதும் காணவே முடியாது என்றார். ஐ.நா செயலாளர் பான் கீ மூன் உரையாற்றுகையில், மண்டேலா இறந்த பின்னரும் உலகை மீண்டும் ஒரு முறை இணைத்து வைத்திருக்கிறார். அனைத்து உலக நாடுகளின் தலைவர்களும் இங்கு ஒன்று சேர்ந்துள்ளனர் என்றார்.
ஒன்றுக்கு ஒன்றுக்கு பகை நாடுகளாக அமெரிக்கா - கியூபா இருந்த போதும், கியூபாவின் தற்போதைய அதிபரும், பிடல் காஸ்ட்ரோவின் மகனுமான ராகுல் காஸ்ட்ரோ, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதன்முறையாக கைகுலுக்கி கொண்டதும் இந்நிகழ்வின் போது தான்.
மைதானத்தில் 95,000 பேர் அமரக்கூடிய வசதி இருந்தும், மோசமான காலநிலை, மழை காரணமாக மூன்றில் ஒரு பங்கு மைதானம் காலியாகவே இருந்துள்ளது. மண்டேலாவின் தற்போதைய விதவை மனைவி கிராஸா மாசெல் மற்றும் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா ஆகியோர் ஒருவரை ஒருவர் அணைத்து முத்தமிட்டுக் கொண்டதும், தாங்கள் இருவரும் சகோதரிகளைப் போன்றவர்கள் எனக் கூறியதும் நேற்றைய நிகழ்வில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
மேலும் மைதானத்தில் போடப்பட்டிருந்த பெரிய திரையில் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை காண்பித்த போது அரங்கமே உற்சாகத்தில் இருவரையும் வரவேற்று கோஷமிட்ட போதும், தென் ஆபிரிக்க அதிபர் ஜாகொப் சூமாவை பின்பு திரையில் காண்பித்த போது தமது அதிருப்தியை மக்கள் கோஷமிட்டு அடையாளப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
0 Responses to மண்டேலாவுக்கான அஞ்சலி நிகழ்வில் ஒபாமா, கெமரூனின் செல்ஃபி புகைப்படத்தால் சலசலப்பு