மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் 2013 ஆம் ஆண்டை கடந்து 2014 ம் ஆண்டில் கால் வைக்கும் போது ஆபத்தான நகர்வை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவிக்கிறது
ஏற்கனவே நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அதிக கடன் நாட்டை ஆட்கொண்டுள்ளது.
அபிவிருத்தி என்ற பெயரில் அதிகளவான ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. பெருமளவான பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பாரிய அபிவிருத்தி திட்டத்துக்கும் கேள்விப்பத்திரங்கள் கோரப்படவில்லை என்பதை பிரதான எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்மூலம் அபிவிருத்திக்கு செலவிடப்படுவதாக கூறப்படும் பணத்தில் பெருந்தொகை பணம் தரகாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் போது அரசாங்கம் தகுதிக்கு அப்பாற்பட்டு செலவுகளை மேற்கொண்டது.
இவையாவும் 2014 ஆம் வருடம் தேர்தல் வருடம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னுள்ள சவால்களாக உள்ளன.
மறுபுறத்தில் சர்வதேசத்தில் 2014 ஆம் ஆண்டு மார்ச்சில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள மேற்குலக தீர்மானம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் உள்நாட்டின் ஆதரவை குறைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை பொருட்படுத்தாததை போன்று செயற்படுகிறது.
அதேநேரம் தமது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசாங்கம் தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு போன்ற அமைப்பை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இது சர்வதேசத்தை ஜெனீவா மாநாட்டுக்காக ஏமாற்றும் வித்தை என்பதை அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பவற்றை தவிர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் உண்மையை கண்டறியும் குழுவை அமைக்கும் தேவையையும் நிராகரிக்கமுடியாது.
அத்துடன் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மீண்டும் நிராகரித்துள்ளது.
இது அரசாங்கத்துக்கு முன்கூட்டியே தெரியும் என்றபோதும் கூட்டமைப்பின் இந்த தீர்மானத்தின் பின்னணியில் அண்டை நாடு ஒன்று இருக்கலாமா? என்ற சந்தேகமும் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் சிவில நிர்வாகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கிவந்த கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க கொழும்புக்கு மாற்றல் செய்யப்படுவதும் அண்டை நாட்டின் அழுத்தம் என்றே ராஜதந்திர தரப்புக்கள் கருதுகின்றன.
இந்தநிலையில் இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறை வடக்கில் உரிய முறையில் செயற்படவேணடும் என்பதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளில் ஆளுநர் சந்திரசிறியை மாற்றுவது மாத்திரம் தற்போது எஞ்சியுள்ளது.
0 Responses to பல ஆபத்துக்களுடன் அடுத்தாண்டுக்குள் நகரும் இலங்கை